வவுனியா வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை பராமரிக்க உறவினர்களுக்கு அனுமதி

உறவினர்களுக்கு அனுமதி

கொரோனா தொற்றாளர்களை பராமரிக்க நோயாளர்கள் விடுதியில் உறவினர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் வவுனியா வைத்தியசாலையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் நோயாளர் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், உறவினர்கள் எவரும் அருகில் இருந்து பராமரிக்க அனுமதிக்கப்படாமையினால் நோயாளர்கள் மற்றும் உறவினர்கள் அதிகளவான மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுகாதார அமைச்சு இலங்கையில் முதற்கட்டமாக வவுனியா மற்றும் மொனராகலை வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களை பராமரிப்பதற்கு உறவினர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி க. ராகுலனிடம் கேட்டபோது,

“வவுனியா வைத்தியசாலைக்கும் குறித்த நடைமுறை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து இந்த நடைமுறையை ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

நோயளார்களின் உறவினர்களுக்கு ஒரு மணி நேர பயிற்சி வழங்கப்பட்டதன் பின்னர் கொரோனா விடுதிக்கு செல்வதற்கான பாதுகாப்பு அங்கிகள் முழுமையாக அணிந்து செல்ல அனுமதிக்கப்படுவர்.

அத்துடன் அனைத்து நோயாளர்களின் உறவினர்களையும் ஒரே முறையில் அனுமதிக்க முடியாது. ஒரே முறையில் மூவர் என்ற ரீதியில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் அனைத்து நோயாளர்களுக்கும் உதவும் வகையில் விடுதிக்குள் செல்வார்கள். இதனை ஒரு பொறிமுறையின் கீழ் செயற்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021