எரிவாயு முகவர்கள் ஒத்துழைக்க மறுப்பு – யாழில் இராணுவத்தின் உதவியுடன் விநியோகிக்க நடவடிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் சமையல் எரிவாயு விநியோகம் கடந்த பல மாதங்களாக தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளதால் சாதாரண குடும்பங்கள் முதல் உணவகத் தொழில் செய்பவர்கள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கூட முறையற்ற விநியோக நடவடிக்கை காரணமாக கறுப்புச் சந்தையை உருவாக்கியுள்ளது.

அத்தியாவசிய தேவையுடையவர்களுக்கு கிடைப்பதைவிட கறுப்புச் சந்தை தரப்பினருக்கே பெரும்பாலும் எரிவாயு சிலிண்டர்கள் கிடைத்து வருகின்றன.

இதனையடுத்து யாழ். மாவட்ட செயலர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பங்கீட்டு நடைமுறையில் சமையல் எரிவாயுவை வழங்க முடிவெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பங்கீட்டு முறையில் சமையல் எரிவாயு விநியோகத்தை குடும்ப பங்கீட்டு அட்டை மூலம் வழங்கும் நடைமுறைக்கு எரிவாயு முகவர்கள் ஒத்துழைக்க மறுத்து வருவதால், இராணுவத்தினரது உதவியை நாட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அரச நிர்வாகத்தின் தலையீட்டில் எரிவாயு விநியோகத்தை முறையாக முன்னெடுக்க முடியாது இராணுவத்தின் உதவியை நாடும் நிலை யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளமை தமிழ் மக்கள் எவ்வாறான நிர்வாக சீரழிவுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்த்தி நிற்கின்றது.

Tamil News