தற்காலிக விசாவிலுள்ள அகதிகள் வெளிநாடு செல்வதற்கான நடைமுறை இலகுவாகிறது

ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாக்களில் உள்ள அகதிகள், தமது குடும்பத்தினரைச் சந்திக்க வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பு இலகுவாக்கப்படவுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை குடிவரவுத்துறை அமைச்சர் Andrew Giles அண்மையில் வெளியிட்டிருந்தார். இதன்படி ஒரு தசாப்த காலமாக தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்திருக்கும் சுமார் 19,000க்கும் மேற்பட்ட அகதிகள், தமது குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக வெளிநாடுகளுக்கு(மூன்றாவது நாடொன்றிற்கு) செல்வது இலகுவாகவுள்ளது.

அகதிகளாகக் கண்டறியப்பட்டு தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் TPV அல்லது SHEV விசாக்களில் ஆஸ்திரேலியாவில் இருப்பவர்களுக்கு இந்தக் கொள்கை பொருந்தும். அதேபோன்று ஜூலை 19, 2013க்கு முன் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்களில் நிரந்தர விசாவைப் பெற்றுக்கொண்டவர்கள், தமது குடும்பங்களுடன் ஒன்றிணைவதற்கான(family reunion) நடவடிக்கைக்கு குறைந்த முன்னுரிமை வழங்கப்படும் நிலையில் இதனையும் அரசு திருத்தியமைக்கவுள்ளது.

தற்போதுள்ள பயண அனுமதிக் கொள்கையின்படி, தற்காலிக விசாவில் உள்ள அகதிகள், பல ஆண்டுகளாகத் தாங்கள் பிரிந்திருக்கும் வாழ்க்கைத் துணைவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோரைச் சந்திக்க மூன்றாவது நாடொன்றிற்குச் செல்ல முயற்சிக்கும்போது, மிக முக்கியமான காரணம் இருந்தால் மட்டுமே அதற்கான பயண அனுமதி வழங்கப்படும். இனி இந்தக் கட்டுப்பாடு இலகுவாக்கப்படவுள்ளது.

அதேபோன்று Direction 80 காரணமாக, படகு மூலம் வந்த அகதிகளுக்கு குடும்ப மறு இணைவுக்கான விண்ணப்பங்களில் மிகக்குறைந்த முன்னுரிமை வழங்கப்பட்டபடியால், பலர் தமக்கு நிரந்தர விசா கிடைத்தும் தமது குடும்பங்களை ஆஸ்திரேலியாவிற்கு அழைப்பதில் நீண்ட தாமதம் நிலவிவந்தது. தற்போது இவ்விரு நடைமுறைகளையும் திருத்தியமைப்பதற்கு புதிய லேபர் அரசு முன்வந்துள்ளமையை வரவேற்பதாக Refugee Council of Australia தெரிவித்துள்ளது.

இதேவேளை TPV மற்றும் SHEV ஆகிய இரு தற்காலிக விசாவுடன் நாட்டிலுள்ள 19,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு நிரந்தர விசா வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கின்றபோதிலும், அதனை விரைவாக வழங்கவேண்டுமென Refugee Council of Australia வலியுறுத்தியுள்ளது.

நன்றி- SBS தமிழ்