Home செய்திகள் அவுஸ்திரேலியா: கொரோனா தொற்று மேலும் பரவும் அச்சத்தில் அகதிகள் 

அவுஸ்திரேலியா: கொரோனா தொற்று மேலும் பரவும் அச்சத்தில் அகதிகள் 

தொற்று மேலும் பரவும் அச்சத்தில் அகதிகள்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் நான்கு ஒப்பந்ததாரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தொற்று மேலும் பரவும் அச்சத்தில் அகதிகள் இருக்கின்றனர்.

முகாமில் வேலை செய்யும் ஒப்பந்ததாரர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது முதல் ‘இம்முகாமில் இருப்பதை பாதுகாப்பாக உணரவில்லை’ என அகதி ஒருவர் எஸ்பிஎஸ் ஊடகத்திடம் குறிப்பிட்டிருக்கிறார்.

எனக்கு இப்போது கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றாலும் வரும் நாட்களில் கொரோனா தொற்று ஏற்படும் என அஞ்சுவதாக அவர் கூறியுள்ளார்.

“நான் மட்டுமல்ல, அனைவரும் பயந்து போய் உள்ளனர். ஏனெனில் இங்கு நாங்கள் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். என்ன நடக்கிறது என்றே எங்களுக்கு தெரியவில்லை,” என அந்த அகதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இத்தடுப்பு முகாமில் உள்ள ஒரு அகதிக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தஞ்சக்கோரிக்கையாளர்கள் வள மையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், மெல்பேர்ன் இடைத்தங்கல் முகாமில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தகவலை இதுவரை அவுஸ்திரேலிய எல்லைப் படை வெளிப்படுத்தவில்லை.

கடந்த சனிக்கிழமை அவுஸ்திரேலிய எல்லைப் படை வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில், மெல்பேர்ன் பார்க் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 அகதிகளில் 22 அகதிகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரு அகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“மெல்பேர்ன் இடைத்தங்கல் முகாமிலும் பார்க் விடுதியிலும் பல ஆண்டுகளாக அகதிகள் கட்டுப்பாடின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பது சகித்துக்கொள்ள முடியாமல் உள்ள நிலையில், இந்த அகதிகளை பெருந்தொற்று சூழலிலும் தேவையற்ற ஆபத்தில் வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது,” எனத் தெரிவித்துள்ளார்  தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்தின் மனித உரிமைகள் சட்ட திட்டத்தின் தலைமை வழக்கறிஞரான Dr கரோலின் க்ரேடன்.

Exit mobile version