அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதிகள்: 10 ஆண்டுகள் தடுப்பு வாழ்க்கைக்குப் பிறகு நியூசிலாந்தில் மீள்குடியேற்றம் 

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோர முயன்று கடல் கடந்த தடுப்பு முகாமில் சுமார் 10 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த 6 அகதிகளுக்கு நியூசிலாந்தில் நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த அகதிகள் புதியதொரு வாழ்க்கையை தொடங்க தயாராகி வருகின்றனர்.  

அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரும் நோக்கத்துடன் கடல் வாயிலாக வந்ததற்காக நவுருத்தீவில் செயல்படும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் வைக்கப்பட்ட சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகளில் இந்த 6 அகதிகளும் உள்ளடங்குவர்.

கடந்த 2013ம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை மீள்குடியமர்த்த நியூசிலாந்து அரசு ஆர்வம் காட்டிய போதும் அவுஸ்திரேலிய அரசு அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், கடந்த மே மாதம் அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்த அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. “இது மிகவும் அற்புதமாக இருக்கிறது. நான் விடுதலையாகி விட்டேன் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. கனவு போல் இருக்கிறது,” கேமரூன் நாட்டைச் சேர்ந்த அகதியான ஜாக்குயிஸ்.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையிலான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ், கடந்த நவம்பர் 22ம் திகதி அவர் நியூசிலாந்தில் உள்ள Mangere அகதிகள் மீள்குடியேற்ற மையத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

“நான் மக்களை ஒன்றாக பார்க்க விரும்புகிறேன். அவர்கள் எங்காவது கால்பந்து விளையாடுகிறார்களா என்பதை பார்க்க விரும்புகிறேன்,” எனக் கூறியிருக்கிறார் அகதியான ஜாக்குயிஸ். இவருடன் 4 ரோஹிங்கியா அகதிகளும் ஒரு சோமாலிய அகதியும் நியூசிலாந்தில் மீள்குடியமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

நியூசிலாந்தில் வசிப்பதற்கான உரிமை கிடைத்திருப்பது தன்னை ஒரு குழந்தைப் போல உணர வைப்பதாகக் கூறுகிறர் ரோஹிங்கியா அகதியான நோருஹ்லோக்.  “எனக்கு மியான்மரில் ஒரு வாய்ப்பும் இல்லை. தேர்தலில் வாக்கு கூட என்னால் செலுத்த முடியாது,” என்கிறார் அந்த ரோஹிங்கியா அகதி.

“ஒரு அகதியாக இந்த பயணம் எல்லாம் ஆவணங்களுக்காக தான். எனக்கு முன்பு அந்த அடையாளச் சான்றுகள் இல்லை. இப்போது எனக்கு அடையாள சான்றுகள் கிடைத்துள்ளன,” என மகிழ்ச்சி தெரிவிக்கிறார் ரோஹிங்கியா அகதியான நோருஹ்லோக்.

கடல் கடந்த தடுப்பில் இருந்தவர்கள் தற்போது நியூசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டாலும் கடல் கடந்த தடுப்பு முறை தொடரும் எனச் அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக அல்ஜசீரா ஊடகத்துக்கு அவுஸ்திரேலிய உள்துறை பேச்சாளர் வழங்கியுள்ள விளக்கத்தில், “பிராந்திய பரிசீலனை மற்றும் மூன்றாவது நாட்டில் மீள்குடியமர்த்தல் என்பது எல்லைகள் இறைமை நடவடிக்கையின் முக்கிய அங்கமாகும். இது சட்டவிரோத குடியேறிகளாக வர எண்ணுபவர்களுக்கு ஊக்கமளிப்பதை தடுப்பதாக இருக்கிறது,” என சுட்டிக்காட்டியிருக்கிறார்.