Tamil News
Home செய்திகள் நவுருத்தீவு முகாமிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்து வரப்பட்ட அகதிகள்: மீண்டும் அவுஸ்திரேலிய தடுப்பில் வைக்கப்பட்டுள்ள...

நவுருத்தீவு முகாமிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்து வரப்பட்ட அகதிகள்: மீண்டும் அவுஸ்திரேலிய தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அவலம்

நவுருத்தீவில் செயல்படும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு என அவுஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்புக்குள் அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் பலர் மீண்டும் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். 

கிறிஸ்துமஸ்க்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்ட இந்த அகதிகளுக்கு இன்னும் முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படாமல் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் பிரிஸ்பேனில் உள்ள ஒரு விடுதியில் வைக்கப்பட்டுள்ளதாக தி கார்டியன் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு வங்கதேசத்திலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற சையத் இவ்வாறான நிலையில் சிக்கியுள்ள அகதிகளில் ஒருவர்.

கடந்த 2019ம் ஆண்டு முதல் செரிமான பிரச்சனையை எதிர்கொண்டுள்ள சையத்-க்கு எம்.ஆர்.ஐ. மற்றும் எண்டோஸ்கோபி சோதனை தேவைப்படுகிறது. அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்டு மூன்று வாரங்கள் கடந்த பிறகும் அவரை மருத்துவரிடத்தில் அழைத்துச் செல்லவில்லை என்கிறார் சையத்.

“வலித்தடுப்பு மாத்திரைகளையும் தூக்க மாத்திரைகளையும் கொடுத்து செவிலியர் என்னைத் தூங்க சொல்கிறார். ஆனால் இது எனக்கு உதவாது. எனக்கு என்ன நடக்கும் என தெரியவில்லை. நான் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன்,” என்கிறார் சையத்.

“நான் உணவு உண்டால், ஆறு முதல் எட்டு முறை கழிப்பறைக்கு செல்ல வேண்டி உள்ளது,” என தனது உடல்நிலையை சையத் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான சர்வதேச வருகைகளுக்கு நுழைவு கட்டுப்பாடுகளை அவுஸ்திரேலியா தளர்த்திய பிறகும், கொரோனா தனிமைப்படுத்தல் என்ற பெயரில் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என சையத் மற்றும் அவரது நண்பர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பாக பதிலளித்துள்ள அவுஸ்திரேலிய எல்லைப் படை, “தடுப்பில் உள்ளவர்கள் மற்றும் பணியாளர்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் எல்லைப்படை முன்னுரிமை அளிக்கிறது. தடுப்பிற்கான மாற்று இடங்கள் உள்ளிட்ட குடிவரவுத் தடுப்பு மையங்களில் கொரோனா பரவாமல் தடுக்க நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம்,” எனத் தெரிவித்துள்ளது.

அத்துடன், “தடுப்பில் உள்ள அனைவருக்கும் அனுபவம் வாய்ந்த மற்றும் தகுதியான மருத்துவ நிபுணர்களிடமிருந்து தரமான மருத்துவ உதவிகளை பெறுவதற்கான வழி உள்ளது,” என எல்லைப்படையின் பேச்சாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

Exit mobile version