தொல்பொருள் செயலணியில் மேலும் ஒரு படையதிகாரி

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கைச்சாத்துடன் நேற்று (07) வௌியிடப்பட்டது.

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினகால் கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.

வணக்கத்துக்குரிய எல்லாவல மேதானந்த தேரரின் தலைமைத்துவத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட குறித்த செயலணியில் 11 உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்குமான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெணிய நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கைச்சாத்துடன் நேற்று வௌியிடப்பட்டது.

குறித்த செயலணி கடந்த ஜுன் மாதம் 02 ஆம் திகதி ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்பட்ட நிலையில் அதன் தலைவராக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் ஏனைய உறுப்பினர்களாக இராணுவத் தளபதி லெப் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட 13 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.