உண்மைக்கான விலை: ஆபத்துகள் நிறைந்த 25 வருடங்களை நினைவுகூரும் அல்ஜசீரா – மொழியாக்கம்: ஜெயந்திரன்

25 வருடங்களை நினைவுகூரும் அல்ஜசீரா
மொழியாக்கம்: ஜெயந்திரன்

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி தனது ஊடகப் பணியின் 25ஆவது ஆண்டை அல்ஜசீரா நிறைவுசெய்ய இருக்கின்ற பின்புலத்தில், அதன் கடந்தகால வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கும் போது, உலகின் பயங்கரமான போர்கள் நடைபெறும் சூழல்களில், பல ஆபத்துக்கள், பல தடைகள், பல தாக்குதல்கள் என்பவற்றுக்கு அந்த ஊடகம் முகங் கொடுத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

அல்ஜசீரா சந்தித்த ஆபத்துகள் என்று பார்க்கும் போது, அந்த ஊடகம் தமது பணிமனைகளை மூடும்படி அச்சுறுத்தும் தாக்குதல்களைச் சந்தித்ததோடு, அதன் முன்னணி ஊடகவியலாளர்கள் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில் அவர்களது அலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கின்றன. அவர்களது இணையத்தள வலைப்பின்னல்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமன்றி, அரசுகளின் ஆதரவுடன் அவர்களது செய்மதிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் சில இடங்களில் அவர்களது பணிமனைகள் மீது விமானத் தாக்குதல்களும் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

அரபு உலகின் முதலாவது சுயாதீன செய்திச்சேவை

அரபு உலகு முழுவதுக்குமான ஒரு முழுநேர செய்திச்சேவையை வழங்கி, நேரலை விவாதங்களை மேற்கொள்ளும் அரபு மொழிச் செய்மதிச் செய்திச்சேவையாக தனது முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை 1996 இல் கட்டார் (Qatar) நாட்டின் டோஹா (Doha) நகரிலிருந்து அல்ஜசீரா தொடங்கியது.

அக்காலத்திலிருந்து பல மொழிகளில் பல்வேறு சேவைகளை உள்ளடக்கிய ஒரு பெரும் ஊடக வலைப்பின்னலாக அல்ஜசீரா இன்று வளர்ச்சியடைந்திருக்கிறது. பொதுமக்களின் நன்மைக்காக தாபிக்கப்பட்ட நிறுவனமான அல்ஜசீரா, தற்போது தொலைக்காட்சிச் சேவைகள், இணையத்தளங்கள், ஏனைய எண்ணிமத் தளங்கள் என்பவற்றை தன்னகத்தே கொண்டிருக்கிறது.

உலகின் சில முக்கிய நிகழ்வுகளை தனது பன்னாட்டுச் செய்திச் சேவையூடாக அல்ஜசீரா வெளிக்கொணர்ந்திருக்கிறது. 2003ஆம் ஆண்டில் ஈராக்கில், அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கை, 2011இல் அரபுலகில் நிகழ்ந்த வசந்தகாலப் போராட்டங்கள் என்பவை இவற்றுள் அடங்குகின்றன. அது மட்டுமன்றி, தற்போது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல், ஆப்கானிஸ்தான் நாட்டில் நடைபெற்ற போர் என்பவை தொடர்பான செய்திகளையும் அது வழங்கி வந்திருக்கிறது.

இந்த முயற்சிகள் அனைத்தின் நடுவிலும் அல்ஜசீராவின் செய்திச்சேவையை முடக்குவதற்கும் உலகின் பல அரசுகள் முயற்சித்திருக்கின்றன. 2005 இல் அன்றைய அமெரிக்க அதிபரான ஜோர்ஜ் புஷ் (George Bush), அன்றைய பிரித்தானிய பிரதமரான ரோனி பிளேயரைச் (Tony Blair) சந்தித்த போது, டோஹாவில் உள்ள அல்ஜசீராவின் தலைமைப் பணிமனையை விமானத்தாக்குதல்கள் மூலம் தகர்க்க யோசித்ததாகச் குற்றஞ்சாட்டப்படுகிறது.

“ஆனால் பெருமளவில் அரபுலகில் உள்ள அடக்குமுறை அரசுகளே, அல்ஜசீராவின் குரலை நசுக்கக் கடந்த காலங்களில் முயற்சி செய்திருக்கின்றன” என்று மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பின் திட்ட இயக்குநரான ஷெரிவ் மன்சூர் (Sherif Mansour) தெரிவித்தார்.

அரபுலகத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது, குறிப்பாக 2015ஆம் ஆண்டிலிருந்து, எகிப்து, சவூதி அரேபியா, பகறெய்ன் (Bahrain), ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில், எதிர்ப்பாளர்களின் குரலுக்கு முன்னுரிமை கொடுத்ததாக அல்ஜசீராச் சேவைகள் குற்றஞ்சாட்டப்பட்டன. அவ்வாறான சூழல்களில் உள்நாட்டிலோ அல்லது அரபுப் பிரதேசத்திலோ எந்தவிதமான எதிர்க்கருத்துகளோ, விமர்சனங்களோ இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்று மன்சூர் மேலும் கூறினார்.

பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும், பொய்யான தகவல்களைப் பரப்புவதாகவும் அந்த அடக்குமுறை அரசுகள் அல்ஜசீராவைக் குற்றஞ்சாட்டியதோடு, இவ்வாறான குற்றச்சாட்டுகள் ஏனைய செய்திச் சேவைகள் மீதும் தனிப்பட்ட சுயாதீன ஊடகவியலாளர்கள் மீதும் சுமத்தப்பட்டன என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

ஊடக சுதந்திரத்துக்காகப் போராடுபவர்களும், எல்லைகளைக் கடந்த செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு போன்ற அமைப்புகளும் இந்த ஊடக வலைப்பின்னல் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களைக் கண்டித்திருக்கின்றன.

திடீர்ச் சோதனைகளுக்கு உள்ளான அல்ஜசீராப் பணிமனைகள்

கடந்த 25 வருடங்களை நினைவுகூரும் அல்ஜசீரா ஊடக வலைப்பின்னல் மீது பிரயோகிக்கப்பட்ட பல்வேறு அழுத்தங்களுக்கு, உலகம் முழுவதும் இயங்குகின்ற அல்ஜசீராப் பணிமனைகள் முகங்கொடுத்திருக்கின்றன – அதன் இணையத்தளங்கள் முடக்கப் பட்டிருக்கின்றன, திடீர்ச் சோதனைகளுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றன, துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. அது மட்டுமன்றி பல்வேறு நாடுகளில் அவை விமானத் தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப் பட்டிருக்கின்றன.

மிகவும் அண்மையில் தியூனிசியா (Tunisia) நாட்டில், அதன் தலைநகரான தியூனிஸ் (Tunis) இல் அமைந்திருக்கின்ற பணிமனைக்குள் நுழைந்த சிவில் உடை தரித்த 20 காவல்துறையினர் அனைத்துப் பணியாளர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு கட்டளையிட்டார்கள். கடந்த ஜூலை மாதம், அரசை ஆட்சியிலிருந்து அகற்ற அதிபர் காயிஸ் சைத் முற்பட்ட பின்புலத்தில் இச்சம்பவம் நடைபெற்றது.

பாதுகாப்புப் படையினர் பணியாளர்களின் அலைபேசிகளின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கட்டளையிட்டதோடு, தமது உடைமைகளை எடுத்துச்செல்வதற்கான அனுமதியும் அவர்களுக்கு மறுக்கப்பட்டது.

மலேசியாவில் கடந்த வருடம், அந்த நாட்டின் காவல்துறையினர், அல்ஜசீராப் பணிமனையைத் திடீர்ச்சோதனைக்கு உள்ளாக்கியதுடன், அங்கிருந்த இரண்டு கணினிகளையும் எடுத்துச்சென்றார்கள். அல்ஜசீரா தயாரித்த ஒரு ஆவணப்படம் தொடர்பான விசாரணை தொடர்பாக இந்நிகழ்வு அரங்கேறியது. மிகவும் கவலையளிக்கும் ஊடகச் சுதந்திரத்தை நசுக்கும் அரசின் செயற்பாடு என அல்ஜசீரா அந்நிகழ்வை விபரித்தது.

சூடான், யேமன் (Yemen) போன்ற நாடுகளிலும் அந்த நாடுகளின் அரசுகள் அல்ஜசீராவின் பணிமனைகளை மூடியிருக்கின்றன.

எமது தொலைக்காட்சிச் சேவைகளை வழங்கும் பணிமனைகள் பல பலவந்தமாக மூடப்பட்டதையும், அங்குள்ள ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டதையும், நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதையும் சில சமயங்களில் கொல்லப்பட்டதையும் நாங்கள் பதிவு செய்திருக்கிறோம் என்று மன்சூர் சுட்டிக்காட்டினார்.

டோஹா பயங்கரவாதத்துக்கு உதவி செய்கின்றது என்று குற்றஞ்சாட்டி, கட்டார் நாட்டுடனான ராஜீக உறவுகளை, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பகறெய்ன், எகிப்து போன்ற நாடுகள் துண்டித்த போது, அல்ஜசீராவின் முழு ஊடக வலைப்பின்னலையும் மூடும்படியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

அந்த நேரத்தில், நால்வர் கொண்ட ஒரு குழு, தடைகள் நீக்கப்பட வேண்டுமானால் 13 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது. அல்ஜசீராவைத் தற்காலிகமாக மூடுவதும் இக்கோரிக்கைகளில் ஒன்றாகும். இதன் காரணமாக மூன்று வருடங்கள் நீண்டு சென்ற அப்பிரதேச நெருக்கடிக்குள் அல்ஜசீராவும் தொடர்புபட வேண்டியிருந்தது.

ஊடகவியலாளர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள்

அதிகார மட்டங்களுக்கு உண்மையை எடுத்துரைக்கும் முயற்சியின் போது, பணியாளர்கள் கொல்லப்பட்ட நிகழ்வுகளே இந்த ஊடக வலைப்பின்னலை மிக அதிகமாகப் பாதித்த நிகழ்வுகளாகும். அல்ஜசீரா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து, தமது கடமையைச் செய்யும் நேரத்தில், 11 ஊடகவியலாளர்கள் தமது இன்னுயிர்களை ஈந்திருக்கிறார்கள்.

2003ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில், ஈராக்கின் தலைநகரான பக்தாத்துக்கு அருகில் உள்ள அல்-காக் (Al-Karkh) நகரத்தில் அமைந்திருந்த அல்ஜசீராப் பணிமனையின் மேல் ஓர் அமெரிக்கப் போர் விமானம் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயங்களுக்கு உள்ளாகி, செய்தியாளரான தாரிக் அயூப் இறந்தார் (Tariq Ayoub). “அந்தத் தாக்குதல் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதல்” என்று அமெரிக்க ராஜாங்க அமைச்சின் பேச்சாளர் அப்போது தெரிவித்திருந்தார்.

25 வருடங்களை நினைவுகூரும் அல்ஜசீரா2004ம் ஆண்டில் ஈராக்கின் கார்பாலா (Karbala) நகரத்தில் அமெரிக்கத் துருப்புகளுக்கும் ஜாயிஷ்-அல்-மாஹ்தி (Jaish al-Mahdi) போராளிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டை தொடர்பான செய்திகளை வழங்கிக் கொண்டிருந்த வேளையில் ராஷீட் வாலி சுட்டுக்கொல்லப்பட்டார்.

2011ஆம் ஆண்டில், கிழக்கு லிபியாவில் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பெங்காஸி நகரில் மேற்கொள்ளப்பட்ட திடீர்த் தாக்குதலின் போது, ஒளிப்படக் கலைஞரான அலி ஹசன் அல் ஜாபர் (Ali Hassen Al Jaber) கொல்லப்பட்டார். பெங்காஸிக்கு (Benghazi) அருகில் இருந்த ஒரு நகரத்திலிருந்து பெங்காஸிக்கு, அலியும் அவரது சகாக்களும் ஒரு மகிழுந்தில் திரும்பிக்கொண்டிருந்த போது, இனந்தெரியாதவர்கள் அந்த மகிழுந்தின் மேல் மேற்கொண்ட ஒரு தாக்குதலில் அலி கொல்லப்பட்டார்.

2013 ஜனவரியில், சிரியா நாட்டின் டெரா (Deraa) நகரத்திலிருந்து செய்திகளை வழங்கிக்கொண்டிருந்த வேளையில், செய்தியாளரான மொஹமட்-அல்-மசால்மா (Mohamed al-Massalma) குறிபார்த்துச் சுடுகின்ற ஒரு துப்பாக்கிதாரியினால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒரு வருடத்துக்குப் பின்னர் மீண்டும் சிரியாவில், இட்லிப் (Idlib) நகரத்துக்கு வெளியே நடைபெற்ற சண்டை தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்கிய பின்னர் தனது இருப்பிடத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், ஹ_செய்ன் அபாஸ் (Hussein Abbas) கொல்லப்பட்டார்.

2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில், இட்லிப் நகரத்தில் அடையாளம் தெரியாதவர்கள் மேற்கொண்ட திடீர்த்தாக்குதலில் எண்ணிமச் செய்தியாளரான (digital reporter) மொஹமட் அப்துல் ஜலீல் அல் காசிம் (Mohamed Abduljaleel al-Qasim)   கொல்லப்பட்டார். அவ்வருடத்தின் இறுதிப் பகுதியில் டெறாவின் புறநகர்ப் பகுதியில் ஷீக் மிக்ஷீன் (Sheikh Miskeen) என்ற இடத்தில் சிரிய அரச படைகளைச் சேர்ந்த எதிரெதிரான இருவேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இடையே நடைபெற்றுக் கொண்டிருந்த சண்டை தொடர்பான செய்தியைச் சேகரிக்கும் நோக்குடன் அங்கு சென்று கொண்டிருந்த வேளையில், நிகழ்ந்த ஒரு மகிழுந்து விபத்தில், எண்ணிமச் செய்தியாளரான மஹ்ரான்-அல் டீறி  (Mahran al-Deery) கொல்லப்பட்டார். இனங்காணப்படாமல் இருப்பதற்காக தனது மகிழுந்தின் மின்விளக்குகளை அவர் அணைத்த போது அந்த விபத்து ஏற்பட்டது.

ஒரு வருடத்துக்குப் பின்னர் ஜூன் மாதத்தில், டெறா நகரத்துக்கு அருகே மன்ஷியாப் (Manshiya) பகுதியில் அரச படையினரின் எதிரெதிரான பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இடையே நடைபெற்றுக் கொண்டிருந்த சண்டை தொடர்பான செய்திகளை வழங்கிக் கொண்டிருந்த போது, ஒளிப்படக்கலைஞரான மொஹமட்-அல்-அஸ்பார் (Mohamed al-Asfar) கொல்லப்பட்டார். அத்துடன் 2015 இல் ஹொம்ஸ் மாகாணத்தில் சிரிய அரச படைகள் மேற்கொண்டிருந்த விமானத் தாக்குதல்கள் தொடர்பான செய்திகளை வழங்கிக் கொண்டிருந்த வேளையில், குண்டுத் துகள்களினால் காயமுற்று, ஒளிப்படக் கலைஞரான சக்காரியா இப்ராஹிம் (Zakariya Ibrahim) இறந்தார்.

மீண்டும் 2016ஆம் ஆண்டில், சிரியாவில், இட்லிப் மாகாணத்திலுள்ள தமன்யீன் ( Tamanyeen) நகரத்தின் மீது ரஷ்ய விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் முபாஷர் (Mubasher) செய்தியாளரான இப்ராஹிம்-அல்-ஓமார் (Ibrahim al-Omar) கொல்லப்பட்டார். அந்த நிகழ்வு நடந்து மூன்று வாரங்கள் கடந்த பின்னர், வடயேமனில் உள்ள ஜோவ் (Jawf) ஆளுநர் பிரிவில் நடைபெற்றுக்கொண்டிருந்த சண்டை தொடர்பான செய்திகளை வழங்கிக் கொண்டிருந்த வேளையில் செய்தியாளரான முபாரக்-அல்-எபாடி (Mubarak al-Ebadi) கொல்லப்பட்டார்.

தமது ஊடகப் பணிகளை முன்னெடுத்த வேளையில் கொல்லப்பட்ட அனைத்து அல்ஜசீரா ஊடகவியராளருக்கென டோஹாவில் அமைந்துள்ள தமது தலைமைப் பணிமனையில் 2006 – இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.அல்ஜசீரா ஒரு நினைவுச் சின்னத்தை வடிவமைத்திருக்கிறது. மர வடிவத்தில் உருக்கில் செதுக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாக அது அமைந்திருக் கிறது. அந்த மரத்தின் இலைகளில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டி ருக்கின்றன. உண்மையை எடுத்துரைக்கும் பணிக்காகச் செலுத்தப்படும் பாரிய விலையை இந்த நினைவுச் சின்னம் தொடர்ச்சியாக நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

ஏனைய சந்தர்ப்பங்களில், அல்ஜசீராவில் பணியாற்றும் ஊடகவியலாளர்களில் பலர், களத்தில் காயங்களுக்கு உள்ளாகிய அதே வேளை, மேலும் பலர் அச்சுறுத்தப்பட்டு, தடைசெய்யப்பட்டு, நாட்டை விட்டுச்செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டது மட்டுமன்றி, அவர்கள் மேல் வழக்குத் தொடரப்பட்டுப் பல ஆண்டுகள் சிறைவாசத்தையும் அனுபவித்திருக்கிறார்கள்.

அல்ஜசீராவின் ஒளிப்படக் கலைஞர்களில் ஒருவரான சாமி-அல்-ஹாஜ் (Sami al-Haj) அமெரிக்கா நடத்தி வந்த குவாண்டநாமோ (Guantanamo) தடுப்பு நிலையத்தில் ஆறு வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

2001 டிசெம்பர் மாதத்தில் ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, அங்கிருந்து குவாண்டநாமோ தடுப்பு நிலையத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். சூடானைச் சொந்த நாடாகக் கொண்ட இந்த ஊடகவியலாளருக்கு எதிரான எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் ஒருபோதும் முன்வைக்கப்படவில்லை.

அவர் தொடர்ச்சியாகச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பின்புலத்தில், தான் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக ஒரு உணவு தவிர்ப்புப் போராட்டத்தை 2007 இல் அவர் அங்கு முன்னெடுத்திருந்தார்.

அவ்வளவு நீண்ட காலத்துக்கு சாமி-அல்-ஹாஜ் தடுத்து வைக்கப்பட்டிருக்கக் கூடாது. ஏதாவது குற்றச் செயலில் அவர் ஈடுபட்டிருந்தார் என்று அமெரிக்க அதிகாரிகளினால் ஒருபோதுமே நிரூபிக்க முடியவில்லை என்று அவர் விடுதலை செய்யப்பட்ட போது எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்திருந்தது. குவாண்டநாமோவில் நிலவிய அநீதிக்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு என்று அந்த அமைப்பு மேலும் தெரிவித்திருந்தது.

எந்தவொரு குற்றச்சாட்டோ, வழக்கோ இன்றி நான்கு வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த எகிப்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான மஹ்மூட் ஹுசெய்ன் Mahmoud Hussein) இவ்வருடம் பெப்ரவரி மாதம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். ஐம்பத்து மூன்று வயது நிரம்பிய ஹ_செய்ன், 2016 டிசெம்பர் மாதத்திலிருந்து தமது விடுதலைக்காக தனது குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றிருந்த வேளை பாதுகாப்புத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அரச நிறுவனங்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தூண்டியதாகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான செய்திகளைப் பரப்பியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுகளை அல்ஜசீரா மறுத்திருந்தது.

சிறையில் இருந்த நாட்களில் ஹ_செய்ன் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார். நீண்ட காலமாக தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருந்ததுடன் அவரது கை முறிந்த போது சரியான மருத்துவ சிகிச்சையும் அவருக்கு வழங்கப் படவில்லை.

கடந்த சில வருடங்களாக அல்ஜசீராவில் பணியாற்றும் ஏனைய பல பணியாளர்கள் எகிப்திய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து எகிப்தில் ஊடகச் சுதந்திரம் நிலவுகின்றதா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

“உலகில் மிகவும் அதிகமாகத் தணிக்கை செய்யப்படும் ஒரு பிரதேசத்தில் இவ்வாறான தாக்குதல்கள் எந்தவிதத்திலும் ஆச்சரியத்தைத் தரவில்லை” என்று கருத்துத் தெரிவித்த மன்சூர் “எகிப்திய சிறைகள் மிகவும் மோசமானவை” என்று மேலும் தெரிவித்தார்.

விமானக் குண்டுகளால் தாக்கியழிக்கப்பட்ட பணிமனைகள்

 25 வருடங்களை நினைவுகூரும் அல்ஜசீராகடந்த மே மாதம் 15ம் திகதி, இஸ்ரேல் படையினரின் முற்றுகைக்கு உள்ளாகி யிருக்கும் காஸாத் துண்டில் (Gaza Strip) அல்ஜசீரா, அசோசியேற்றட் பிரெஸ் (The Associated Press) உட்பட ஏனைய செய்திச் சேவைகளின் ஊடகப் பணிமனைகளைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு கோபுரம், 11 நாட்களாக அந்தக் கரையோரப் பகுதியில் இஸ்ரேலியப் படையினர் மேற்கொண்ட  விமானத்தாக்குதலில் தாக்கி அழிக்கப்பட்டிருந்தது.

பதினொரு மாடிகளைக் கொண்டு, மக்களின் வதிவிடங்களையும் உள்ளடக்கியிருந்த அந்த அல்-ஜலாலாக் கட்டடத்தின் உரிமையாளருக்கு, மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்பதற்கு ஒரேயொரு மணித்தியால அவகாசம் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது.

அந்தக் கோபுரம் இடிந்து வீழ்வதற்கு சில கணங்களுக்கு முன்னர் அதற்கு அருகில் அல்ஜசீராப் பணியாளர்கள் நேரலையாகச் செய்தி வழங்கிக் கொண்டிருந்தார்கள் என்று அல்ஜசீராவின் அந்தப் பணிமனைப் பொறுப்பாளரான வேல்-அல்-டாடூ தெரிவித்தார்.

நாங்கள் அந்த நேரத்தில் வழங்கிக் கொண்டிருந்த செய்தியின் மையப்பொருளாக நாங்களே மாறினோம். எங்கள் கண்களுக்கு முன்னால் அந்தக் கட்டடம் இடிந்து வீழ்வதை எமது செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்த முழு உலகத்துடன் இணைந்து நாங்களும் பார்த்தோம் என்று அல்-டாடூ நினைவு கூர்ந்தார்.

கவலையைத் தருகின்ற இவ்வாறான தருணங்கள் இருந்த போதிலும், அல்ஜசீராவின் விம்பமும் குரலும் தொடர்ந்து, உரத்து ஒலித்துக்கொண்டேயிருந்தது என்று அவர் மேலும் கூறினார்.

அந்தக் கட்டடம் ஏன் தாக்கி அழிக்கப்பட்டது என்பதற்கு உத்தியோகபூர்வமான எந்தக் காரணத்தையும் இஸ்ரேல் இதுவரை அறிவிக்கவில்லை என்று அல்- டாடூ சுட்டிக்காட்டினார்.

ஊடகப் பணிமனைகளையும், பொதுமக்களின் இல்லங்களையும் கொண்டிருந்த அந்தக் கட்டடத்தை மிகச் சிக்கலான அந்த நேரத்தில் தாக்கியழிக்க இஸ்ரேல் முடிவு செய்ததில் இருந்து அல்ஜசீரா வழங்கிக் கொண்டிருந்த செய்திச் சேவை இஸ்ரேலுக்குக் கோபமூட்டியிருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.

காஸாவில் இருந்த அல்ஜசீராப் பணிமனை தாக்கப்பட்டது தான் அல்ஜசீராப் பணிமனை ஒன்று தாக்கப்பட்ட முதல் நிகழ்வு அல்ல.

2002ஆம் ஆண்டில் அமெரிக்கப் படையினரால் ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலில் அமைந்திருந்த அல்ஜசீராவின் பணிமனையைத் தாக்கி அழித்தது. அதிட்டவசமாக அந்த நேரத்தில் ஊடகவியலாளர்கள் எவருமே அந்தப் பணிமனையில் இருக்கவில்லை. “குறிப்பிட்ட இலக்கு பயங்கரவாதிகளின் ஒரு இலக்கு என்று தாங்கள் கருதியதாகவும், அது அல்ஜசீராவின் பணிமனை என்பதைத் தாங்கள் அறிந்திருக்கவில்லை” என்றும் அமெரிக்க அதிகாரிகள் அந்நேரத்தில் தெரிவித்திருந்தார்கள்.

மனிதர்களின் கதைகளை எடுத்துச் சொல்லல்

“இவ்வாறான சவால்களின் நடுவிலும் சொல்லப்பட வேண்டிய விடயங்களை அல்ஜசீரா தொடர்ந்து சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது.

எழுந்தமானமாக மேற்கொள்ளப்படும் கொலைகள், தடுத்துவைக்கப்படல், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், நீதியற்ற வழக்குகள், உளவியல், உடலியல் சித்திரவதைகள் போன்றவற்றுக்கு ஊடகவியலாளர்கள் உட்படுத்தப்படுவதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையைக் கண்டறிந்து, அந்த உண்மையை அனைவரும் அறியச்செய்வதே அவர்களது பணியாகும்” என்று அல்ஜசீரா ஊடக வலைப்பின்னலின் தற்காலிக இயக்குநரான மொஸ்தபா சுட்டிக்காட்டினார்.

“நீரும் காற்றும் எப்படி மனித வாழ்வுக்கு அத்தியாவசியமானவையோ, அதேபோல் தான் தகவலும் இன்று அத்தியாவசியமான ஒரு விடயமாகும். அதனைத் தடுப்பது சட்டவிரோதமானதாகும். ஊடகப்பணி ஒரு குற்றச்செயல் அல்ல” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் வாழும் மக்களின் வாழ்வில் முக்கியத்துவம் பெறும் விடயங்கள் தொடர்பாக மக்கள் மனங்களில் ஒளியேற்றும் நோக்கத்துடன் இறந்த மற்றும் காயப்பட்ட தமது சக பணியாளர்களை நெஞ்சில் இருத்தி, அல்ஜசீரா தனது 25 ஆண்டை நினைவுகூருகின்றது.

பல ஆபத்துகளும், தடைகளும் நிறைந்ததே இப்பாதை. இருப்பினும் மனிதரின் வாழ்வியற் கதையை எடுத்துச் சொல்லும் எமது பணியைத் தொடர்ந்து ஆற்றுவதில் நாம் மிகுந்த  உறுதியுடனும்  அர்ப்பணிப்புடனும்  இருக்கிறோம்.

நன்றி: அல்ஜசீரா

 

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad உண்மைக்கான விலை: ஆபத்துகள் நிறைந்த 25 வருடங்களை நினைவுகூரும் அல்ஜசீரா - மொழியாக்கம்: ஜெயந்திரன்