விரைவாக அழிந்து வரும் வன உயிரினங்கள்

கடந்த 50 வருடங்களில் வன உயிரினங்களின் அழிவு எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது காடழித்தல் மற்றும் காற்று, நிலம், நீர் போன்றன மாசடைவதால் ஏற்பட்டுள்ளதாக உலக வன உயிரினங்கள் நிதியம் கடந்த வியாழக்கிழமை (13) வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1970 ஆம் ஆண்டுக்கும் 2018 ஆம் ஆண்டுக்கும் இடையில் உயிரினங்களின் அழிவு 69 விகிதத்தை எட்டியுள்ளது. உலகில் உள்ள 5,230 இனங்களை சேர்ந்த 32,000 வன உயிரினங்களின் தொகையில் இருந்து இந்த தரவுகள் பெறப்பட்டுள்ளன.

இந்த தரவுகள் மிக மோசமான அழிவை காட்டுவதாகவும் உலகில் உள்ள வனஉயிரினங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைளை நாம் விரைவுபடுத்த வேண்டும் எனவும் லண்டன் உயிரியல் சங்கத்தின் தலைவர் அன்றூ ரெரி தெரிவித்துள்ளார்.

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன்தீவுகளில் அதிக உயிரினங்கள் வாழ்ந்தபோதும் தற்போது அங்கு தான் அதிக அழிவுகள் ஏற்பட்டுள்ளன. அங்கு 94 விகித வீழ்ச்சி காணப்படுகின்றது. ஆபிரிக்காவில் 66 விகித வீழ்ச்சி காணப்படுகின்றது. ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் 55 விகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

நன்னீர்களில் வாழும் உயிரினங்கள் பெருமளவில் அழிந்துள்ளன. அவை வாழும் இடங்கள் அழிவடைந்ததால் 83 விகித அழிவை அவை சந்தித்துள்ளன. இருந்தபோதும் சில இடங்களில் உயிரினங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் ஆமைகள், மற்றும் கொரில்லாங்கள் போன்ற இனங்கள் அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.