அரிசிக்கடைகளின் துரித வளர்ச்சி
‘படுவான்கரை’ என்றாலே அனைவரது மனக்கண்ணிலும் வந்துதிப்பது பச்சைப்பசேல் என்ற வயல் நிலங்கள், வற்றாத நீர், எக்காலத்திலும் குறைவடையாத சேறு, காடு, சேற்றில் புரண்டாற்போல் எந்நேரமும் அழுக்குடன் காணக்கூடிய விவசாயிகள் என்பனவாகும். ஏன்னெனில் பல்லாயிரக் கணக்கான விளைநிலப் பகுதிகளை கொண்டமைந்துள்ள இந்நிலப் பகுதியில் வாழ்கின்ற மக்கள் விவசாயத்தையே தமது ஜீவனோபாயத் தொழிலாக நம்பி வாழ்கின்றனர்.
சேற்று மண்வாசனையுடன் உழுதுண்டு வாழ்கின்ற உழவர் சமூகத்தின் அயராத உழைப்பினால் அரிசிக்கோ, சோற்றுக்கோ பஞ்சமில்லாது வந்தாரை வாழவைத்து அள்ளி அள்ளிக் கொடுத்த பூமி இது. அன்று எழுவான்கரைக்கு தேவையான அரிசி , நெல் என்பன படுவான்கரையில் இருந்தே எடுத்துச் செல்லப்பட்டன. ஆனால் இன்று அந்நிலை மாறி தலைகீழாக நிற்கின்றது. எழுவான்கரையில் இருந்து அரிசி வாங்கி உணவு உண்கின்ற அபர்த்த நிலைக்கு படுவான்கரைப் பிரதேசம் தள்ளப்பட்டு ள்ளதைக் காணமுடிகின்றது.
சில வருடங்களுக்கு முன்னர் படுவான்கரை மண்ணில் அரிசிக்கடைகள், அரிசி வியாபாரம் என்பன உருவானதாக சரித்திரமில்லை. அவ்வாறு அரிசி தேவைப்பட்டால் பண்டமாற்று முறையில் தமக்குள்ளே மாற்றிப் பெற்றுக் கொண்டதாக இச் சமூகம் காணப்பட்டது. காரணம் அன்று விவசாயத்துக்கு பஞ்சமேயில்லை. ஆனால் இன்று தெருவுக்குத் தெரு அரிசிக்கடைகள் மிகத் தீவிரமான முறையில் உருவாகுவது வேடிக்கையாக உள்ளது. தற்காலத்தில் படுவான் கரையில் பெரும் வருவாயீட்டுகின்ற தொழிலாக அரிசி வியாபாரம் காணப்படுகின்றது. இதற்கான காரணங்கள் என்ன என ஆராய்ந்து பார்க்கின்றபோது விவசாயசெய்கை பண்ணலின் வீதம் குறைவடைந் திருப்பதேயாகும் என அனுமானிக்க முடிகின்றது.
இவ் வினாவினை எழுப்பியபோது ‘நெல்லின் விலைக்குறைவு’, ‘பருவ காலமழைகள் நேரத்துக்கு பெய்யாமை’ என்பனவாகும். இதில் பெரும்பாலான விவசாயிகளிடத்தில் இருந்து வந்த ஒருமித்த பதில் நெல்லின் விலைக்குறைவு என்பதாகும். நெல்லின் விலையைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக யாரோ ஓர் முதலாளித்துவம் காணப்படுகின்றது. மழையிலும், வெயிலிலும் இராப்பகலாக பாடுபட்டு அறுவடை செய்த விளைச்சலின் விலையை எம்மைத் தவிர்ந்த ஓர் சக்தி தீர்மானிப்பதென்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான செயற்பாடுகளே விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன. இருந்தபோதிலும் நெல்லின் விலைக்குறைவுக்கு முற்று முழுதாக முதலாளித்துவத்தினை குறை கூறிவிட முடியாது. இதில் எமது சில அசமந்தப் போக்குகளும் தாக்கம் செலுத்துகின்றன.
எங்கோ இருக்கின்ற முதலாளிமார் தமது விளைச்சலின் விலையைத் தீர்மானிப்பதற்கு இடம் கொடுத்தது யார் குற்றம்? எமது குற்றம். அறுவடை செய்த நெல்லை உடனே விற்று விடவேண்டும் என நினைக்கின்றோமே தவிர அதனை உலரவைத்து பேணி பாதுகாத்து விலை உயர்கின்றபோது எம்மால் கொடுக்க முடியாதா? ஐந்தாறு மாதங்களாக பொறுமையை கடைப்பிடித்து வேளாண்மை செய்த எம்மால் அறுவடையின் பின்னனான நெல் விற்பனையின் போது அப் பொறுமையினை ஏன் கடைப்பிடிக்க முடியாதுள்ளது? எமது முன்னோர்கள் இயற்கை ஒளியில் நெல்லை உலரவைத்து நெற்பட்டறைகள் (நெற்களஞ்சியம்) அமைத்து பாதுகாத்து நல்ல விலைக்கு கொடுக்கவில்லையா?
வெட்டு இயந்திங்களின் வருகை பல விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப்பட்டது. வேளாண்மை வெட்டுவதையே தமது தொழிலாக கொண்ட பல தொழிலாளிகள் இம் மண்ணில் செறிந்து காணப்படுகின்றனர். இதனால் வேளாண்மை வெட்டுவதையே தொழிலாகக் கொண்ட ஏழை மக்களின் வருவாய்கள் தடைப்படுகின்றன. வேளாண்மை செய்யாத விவசாயிகளே வேளாண்மை வெட்டும் தொழில் செய்து தமது உணவுக்கு தேவையான நெல்லினை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் வெட்டு இயந்திரத்தின் வருகையால் இவர்கள் தமக்கு தேவையான அரிசி இல்லமல் அரிசிக்கடைகளை நாடவேண்டிய நிர்ப்பந்தங்களுக்குள்ளாகின்றனர். இதற்கு இவைகளும் ஓர்வகையில் காரணமாக அமைகின்றன.
வெட்டு இயந்திரத்தின் வருகையால் அறுவடையின் போதான காலம், நேரம், பொருளாதார செலவுகள் என்பன மிச்சமாக இருந்தாலும் வெட்டு இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்யப்படுகின்ற நெல் முளைதிறனற்றவையாக காணப்படுகின்றன அடுத்த வருடம் விதைப்பதற்கு விதை நெற்கள் இல்லாமல் மீண்டும் அந்த முதலாளித்துவத்தினையே நாடுகின்றோம். இயந்திரங்களால் அறுவடை செய்யப்பட்ட நெல் ஈரப்பதன் கூடியவை, பதர்கள் நிறைந்தவை, அடிகட்டைகள் நிறைந்தவை, முளைதிறனற்றவை என பல நொண்டிச் சாட்டுக்களை சொல்லி விலையை குறைக்கின்றனர். வெட்டு இயந்திரங்களை அனுப்பிய முதலாளிகளே நெல்வாங்குவதற்கும் வருகின்றனர் இவை தெரிந்தும் , இவற்றினால் பலமுறை பாதிக்கப்பட்டும் திரும்பத் திரும்ப வெட்டு இயந்திரத்தினுள்ளே தமது தலையை மாட்டிக்கொள்கின்றோம்.
மட்டக்களப்பின் ஏனைய பாகங்களுக்கு தேவையான அரிசிகளை வழங்கிய படுவான்கரை மண் ஏனையவர்களிடத்தில் கையேந்தும் அவல நிலைக்கு உள்ளாகிருப்பது வேதனைக்குரிய விடயமாகும். இந்த மண்ணுக்கென்றே இறைவனால் விசேடமாக வழங்கப்பட்ட அருட்கொடையே விவசாயம் அதனை மழுங்காது பாதுகாக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும். எமது முன்னோர்களால் இதுவரை கட்டிக் காப்பாற்றப்பட்ட விவசாயத்துக்கான விளை நிலங்களை வீடுகள் அமைப்பதற்காகவும், வெறுமையாக போடுவதனையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வேளாண்மைச் செய்கையின்போது பயிரின் அடிப் பாகத்திலிருந்து படிப்படியாக பீடைகள் தாக்கி பயிரினை முற்றக அழித்து விடும். அதே போன்று அரிசிக்கடைகளின் அகோர வளர்ச்சிகளும் எமக்கு பீடைகளே காலப் போக்கில் பிச்சைக்கு கையேந்தும் நிலைக்கு எம்மைக் கொண்டு நிறுத்தும் என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை.
- பிரச்சினைகளும் சர்வதேசமயப்படுத்தலும் | துரைசாமி நடராஜா
- உக்ரைன் மீதான ரஷ்யாவின் படை நடவடிக்கை; இலங்கை நடுநிலை வகித்தது எதற்காக? | கலாநிதி அகிலன் கதிர்காமர் செவ்வி
- சமர்க்களத்தை வெல்வதைவிட போர்க்களத்தை வெல்ல வியூகம் வகுக்கின்றதா ரஷ்யா? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
[…] அரிசிக்கடைகளின் துரித வளர்ச்சி ‘படுவான்கரை’ என்றாலே அனைவரது மனக்கண்ணிலும் வந்துதிப்பது பச்சைப்பசேல் என்ற வயல் நிலங்கள், வற்றாத நீர், எக்காலத்திலும் குறைவடையாதமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-172-march-05/ https://www.ilakku.org/ […]
[…] […]