ரணிலின் விசுவரூப வெற்றியும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்! | இரா.ம.அனுதரன்!

அரசியல் அஸ்தமனத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் எதிர்காலத்தை, ராஜபக்சக்களின் விதி வழியே கைகூடிவந்த விபரீத ராஜ யோகத்தின் மூலம் முழுவீச்சில் முன்கொண்டு செல்லும் வகையில் நடைபெற்று முடிவடைந்துள்ள ஜனாதிபதி தேர்வில் வெற்றி பெற்று 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ளமை ரணில் விக்கிரமசிங்கவின் விசுவரூப வெற்றியாகவே அமைந்துள்ளது.

ஒற்றை ஆசனம், அதுவும் நாடு முழுவதும் பொறுக்கி பொறுக்கி சேர்த்த வாக்குகளின் திரட்சியாக கிடைத்த உபரி வாய்ப்பான தேசியப்பட்டியல் உறுப்புரிமையூடாக நாடாளுமன்ற பிரவேசம் செய்து, தனக்கு ஆதரவாக மேலும் ஒரு உறுப்பினரது ஆதரவைக்கூட உறுதி செய்துகொள்ள முடியாத அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, 134 வாக்குகளை பெற்று இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ எனும் ஜோதிட வாக்கியத்திற்கமைவான விபரீத ராஜயோக வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

எது எப்படி இருப்பினும் இலங்கையர்கள் தற்போது சந்தித்து நிற்கும் பொருளாதார நெருக்கடி நிலையும் அது ஏற்படுத்தியுள்ள வாழ்வியல் நெருக்கடியும் ஒருசேர மக்கள் போராட்டமாக பரிணமித்து வீதி மறியல் போராட்டம், முற்றுகைப் போராட்டம், பொது சொத்துகளுக்கு சேதமேற்படுத்தப்படுதல் என்பதாக தீவிரநிலையடைந்திருந்தது.

இந்நிலையில், நாடு தழுவியதாக முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் போராட்டங்கள் அனைத்தையும் ‘கோட்டா கோ கோம்’ எனும் முழக்கத்தை முன்னிறுத்திய காலிமுகத்திடல் போராட்டம் ஒருசேர மக்கள் கிளர்ச்சியாக திரட்சியாக்கியது. அந்தவகையில் ராஜபக்சக்களுக்கு எதிராக காலிமுகத்திடலில் மையம் கொண்ட மக்கள் கிளர்ச்சிப்போராட்டமானது தற்போது, மக்கள் விரோத ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும் மக்கள் புரட்சியாக மாறி மே-9 இல் மகிந்த ராஜபக்ச, ஜூன்-9 இல் பசில் ராஜபக்ச, ஜூலை-9 இல் ஆரம்பித்து 13இல் கோட்டாபய ராஜபக்சவை விரட்டியடித்து தற்போது ரணில் விக்கிரமசிங்கவை இலக்கு வைத்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான களோபரத்திற்கு மத்தியில் தான், ரணில் விக்கிரமசிங்க இடைக்கால பிரதமராக பொறுப்பேற்று, சர்வதேச தொடர்புகள் மூலமாக நிதி வருகையை உறுதிசெய்யும் முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தியிருந்தார். ஜோசிய எதிர்வு கூறல்காளாக நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருந்தன.

இவ்வாறான அறிவிப்புகள் ஒரு பக்கம் மக்களை குழப்பத்திற்கும், பதற்றத்திற்கும் உள்ளாக்கியிருந்த போதிலும் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தவும் தவறியிருக்கவில்லை. அதன்காரணமாகவே ராஜபக்சக்களை காப்பாற்றும் ‘டீல்’ அடிப்படையில் இடைக்கால பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற போது தீவிரம் பெற்றிருந்த ரணில் எதிரப்பு பின் நாட்களில் ஓரளவு தணிந்திருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.

சர்வதேச தரப்புகளுடனான ரணில் அரசாங்கத்தின் உரையாடல்களும் அதுகுறித்தான அறிவிப்புகளுமே அவ்வாறானதொரு நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக கட்டியெழுப்பியிருந்தது. இவ்வாறான பின்னணியில் கோட்டாபயவின் பதவி ஓரளவு தற்காத்துக் கொள்ளும் நிலையேற்பட்டிந்த சூழலில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக வெளியாகிய செய்திகள் முன்னைய தற்காப்பு நிலையை முற்றிலுமாக தவிடுபொடியாக்கி மக்கள் புரட்சிக்கான நாள் குறிப்பதற்கு அடித்தளத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஆம், ஜூலை-09 ஆம் திகதி கோட்டாபயவையும் விரட்டியடிக்க அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. அதனை தடுப்பதற்கு அரச-அதிகார-இராணுவ பலம் கைவசமிருந்தும் அவற்றை உச்ச அளவில் பயன்படுத்தமுடியாத கையறு நிலைக்கு, குருச்சேத்திரத்தில் நிராயுதபாணியாகி அர்ச்சுனணின் அம்புகளுக்கு இலக்காகி உயிரிழந்த கர்ணனின் நிர்க்கதி நிலைக்கு கோட்டாபாய தள்ளப்பட்டிருந்தார்.

மக்கள் புரட்சிக்கு முன்பாக ஈடுகொடுக்க முடியாத நிலையில் நாட்டைவிட்டு தப்பியோடுவது என்கிற முடிவைத் தவிர வேறு தெரிவேதும் இல்லாத நிலையில்,  பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியில் கடந்த ஜூலை-13ம் திகதி இலங்கையை விட்டு இராணுவ விமானத்தில் மாலைதீவுக்கு தப்பியோடினார் கோட்டாபய.

ராஜபக்சக்கள் பதவிகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதோடு வெளியே தலைகாட்ட முடியாதவாறு
ஓடி ஒழியும் நிலைக்கு தள்ளப்பட்ட அந்தத்தருணத்தில் இடைக்கால பிரதமர் எனும் பொறுப்புக்கு மேலதிகமாக பதில் ஜனாதிபதியாகவும் கடமையாற்ற, ராஜபக்சக்களின் விதி வழியே காலம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

இவ்வாறு கிடைத்தற்கரிய சந்தர்ப்பமாக கிட்டிய இவ்வாய்ப்பினை கெட்டியாக பற்றிக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதி பதவி வழியே தனது கைகளையெட்டிய நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியதோடு நில்லாது, முழு அளவில் முப்படையினரை முன்னிறுத்தி நிலைமைகளைக் கட்டுக்குள் கொண்டுவரும் எத்தனங்களை ஒருபுறத்தே பார்த்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பினை அசம்பாவிதங்களேதுமின்றி அமைதியான முறையில் நடத்துவதிலும் நடைபெறும் போட்டியில் தனது வெற்றியைத் திடமான நிலையில் உறுதிசெய்யும் கைங்கரியத்திலும் ஈடுபட்டிருந்தார்.

தனது கடந்த கால அரசியல் அனுபவங்கள் அத்தனையையும் ஒருசேரப் பயன்படுத்தி, மக்கள் போராட்டத்தைக் கவசமாக பயன்படுத்தி, எதிரணியினர் வகுத்த வியூகத்தை முறியடித்து எதிர்வியூகத்திற்குள் எதிரணியை திக்குமுக்காட வைத்து வரலாற்று வெற்றியை வசமாக்கி இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வெற்றிபெற்று இனிமேல் ராஜபக்சக்கள் நினைத்தாலும் அசைத்துவிட முடியாத உயரத்தை எட்டியுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உண்மையில் விசுவரூப வெற்றியாகவே வரலாற்றின் தடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்சொன்ன வகையில் ராஜபக்சக்கள் மீதான மக்களின் கோபம் ஏற்படுத்திய  தளத்தை சிங்கள தேசம் சரிவர கையாளாமல் கோட்டைவிட்டதன் அழியா சாட்சியமாக ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி அமைந்துள்ளதென்றால், தமிழ்த் தரப்பும் தனக்கு கிடைத்த வரலாற்று சந்தரப்பத்தை குரங்கின் கையில் கிடைத்த பூமாலையாக வீணடித்துவிட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

வரலாறு கற்றுத்தந்த பெரும் படிப்பினைகளை புறந்தள்ளி தத்தமது மேதாவித்தனங்களையும், அவரவர் பின்நிற்கும் தரப்பினரது அபிலாசைகளை முன்னிறுத்தியதாகவும் செயற்பட்டு ஆளுக்கொரு அணியாகவும், அவர்களுக்குள்ளாகவே பிளவுகளும், குழப்பங்களுமாக இழுப்பறிப்பட்டு கிடைத்த சந்தர்ப்பத்ததை வீணடித்துள்ளமை, தமிழ் அரசியல் தரப்பினரது வரலாற்றுத் தவறாகும்.

புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்கும் முன்னெடுப்புகளை மேற்குலத்தரப்பு பங்கேற்புடன் தீவிரப்படுத்துவதன் மூலம் அது தொடர்பான முன்னெடுப்புகள் குறித்த செய்திகளும் தகவல்களும், எவ்வாறு இடைக்கால பிரதமராக பொறுப்பேற்ற காலத்தில் மக்களுடைய போராட்டம் தற்காலிக தொய்வு நிலைக்கு கொண்டுவரப்பட்டதோ அவ்வாறே எதிர்வரும் நாட்களிலும் நிலைமைகளைத் தணிக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதைவிட கடந்த நல்லாட்சி காலத்தில் எவ்வாறு நல்லாட்சி, நல்லிணக்க கோசத்திற்குள் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வினை காணும் முயற்சிகளையும், பொறுப்புக்கூறல் விடயங்களையும் தந்திரமாகப் பின்தள்ளியதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முன்னிறுத்தி ஐ.நா. மனித உரிமை பேரவையில் கால நீடிப்பினையும் பெற்று சர்வதேச அழுத்தங்களையும் வெற்றி கொண்டதில் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கே பிரதானமானது.

இவ்வாறு உள்நாட்டிலும் சர்வதேச தளத்திலும் இலங்கை அரசாங்கத்தின் மீது, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழினப்படுகொலை உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களை அடிப்படையாக கொண்டு ஏற்படுத்தப்பட்டிருந்த அழுத்தங்களை வெற்றிகொண்டதன் மூலம் தன்சார்ந்த அரசுக்காக அல்லாமல் தமிழினப்படுகொலை உள்ளிட்ட குற்றங்களுடன் நேரடியாக தொடர்புபட்ட ராஜபக்ச தரப்பினரையே ரணில் விக்கிரமசிங்க பிணையெடுத்திருந்தார்.

மின்சாரக் கதிரை ஆபத்தில் இருந்து ராஜபக்சக்களை காப்பாற்றியது தனது அரசாங்கம் தான் என, நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையான காலத்தில் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாகவே முரசறைந்து வந்திருந்ததை யாரும் மறந்துவிடமுடியாது.

நேற்று – இன்று – நாளை என எக்காலத்திலும் ராஜபக்சக்களுக்கு எதிராக சிறு துரும்பைத்தன்னும் ரணில் விக்கிரமசிங்க அசைத்துவிடப்போவதில்லை என்பது உறுதி. இது சிங்கள தேசத்துக்கு மட்டுமல்ல தமிழ் தரப்பினருக்குமான பாடமாகும்.

இவ்வாரலாற்று படிப்பினைகளைப் புறந்தள்ளி மீண்டும் நல்லிணக்க நாடகம் போட்டுக்கொண்டு தமிழ்த் தலைமைகள் ரணில் அரசுடன் ஒட்டி உறவாடுவார்களேயானால், அது ஈழத்தமிழனத்திற்கு செய்யும் வரலாற்றுத் துரோகமாகவே அமையும்.

காலத்தை இழுத்தடித்து, விடயங்கள் மீதான கவனத்தைத் திசைதிருப்பி பலவீனப்படுத்தும் தந்திரத்தில் முக்குளித்து முத்தெடுக்கும் வித்தைக்காரனான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நீதியோ, தீர்வோ கிடைத்துவிடாதென்பது திண்ணம்.

சிங்கள தேசத்து நோய்க்கு அவர்களே மருந்து தடவட்டும்… அவர்களது நோய்க்கு மருந்து தடவும் பரிகாரிகளாக எம்மிடையே வலம் வருபவர்களையும் ஒன்றுபட்டு ஒரே குரலாக தமிழ் மக்களின் வேணவாக்களை முன்னிறுத்தி செயற்பட மறுப்பவர்களையும் தமிழ்த் தேசிய அரசியற் பரப்பில் இருந்து உடனடியாக விரட்டியடிப்பதற்கு ஈழத்தமிழர்கள் தயாராகவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.