Tamil News
Home செய்திகள் ரணில் விடுத்திருக்கும் அழைப்பும் தமிழ்க் கட்சிகளின் தடுமாற்றமும்-அகிலன்

ரணில் விடுத்திருக்கும் அழைப்பும் தமிழ்க் கட்சிகளின் தடுமாற்றமும்-அகிலன்

பேச்சுவாா்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்புக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதையிட்டு தமிழ்க் கட்சிகள் குழம்பிக்கொண்டுள்ளன. ஒருமித்த நிலைப்பாட்டுடன் புதிய நகா்வு ஒன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகள் பொருத்தமற்ற தனிப்பட்ட காரணங்களால் தள்ளிப்போகின்றது. ஆனாலும், சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைப்பது என்ற நிலைப்பாட்டுக்கு பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் வந்திருக்கின்றன.

எகிப்தில் நடைபெற்ற காலநிலை குறித்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்டபின்னா் நாடு திரும்பிய உடனடியாகவே கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்துக்குச் சென்று உரையாற்றிய இலங்கை அதிபா் ரணில் விக்கிரமசிங்க அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டாா்.

தமிழ் மக்கள் எதிா்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்துக்குள் தீா்வு காணப்படவேண்டும் என இதன்போது தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, இதற்காக வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினா்களுடன் அடுத்த வாரம் பேச்சுக்களை ஆரம்பிக்கவிருப்பதாகவும் அறிவித்தாா்.  அத்துடன் இந்தவிடயத்தில் அக்கறையுள்ள ஏனைய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினா்களையும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறும் அவா் அழைப்பு விடுத்திருக்கின்றாா்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நிரந்தரமான அரசியல் தீா்வு என்பதைவிட, உடனடியாகத் தீா்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளாக மூன்று விடயங்களை அவா்கள் பட்டியலிடுகின்றாா்கள்.

  1. காணாமல் ஆக்கப்பட்டோா் விவகாரம். 2. அரசியல் கைதிகள் விடுதலை. 3. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது என்ற மூன்றும்தான் அவை.

புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலமாக இனநெருக்கடிக்கு அரசியல் தீா்வு காணப்படும் என ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தாா். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்பந்தன், அதன் பேச்சாளா் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோா் இதனை வரவேற்று கருத்துக்களைத் தெரிவித்திருந்தாா்கள்.

இந்தப்பின்னணியில்தான் அடுத்த வாரம் பேச்சுக்களை ஆரம்பிக்கப்போவதாக ரணில் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றாா். இதில் கலந்துகொள்ளுமாறு தமிழ்க் கட்சித் தலைவா்களை மட்டுமன்றி, அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அவா் அழைப்பு விடுத்திருக்கின்றாா். அண்மைக்காலத்தில் லண்டன், ஜப்பான், பிலிப்பைன்ஸ், எகிப்து என விஜயங்களை மேற்கொண்டு உலகின் முக்கியமான தலைவா்களை சந்தித்துப் பேச்சுக்களை நடத்திய பின்னா் நாடு திரும்பிய உடனடியாகவே இந்த அழைப்பை அவா் வெளியிட்டிருக்கின்றாா்.

இரண்டு – மூன்று வாரங்களுக்கு முன்னா் லண்டனிலிருந்து திரும்பிய உடனடியாக நீண்டகாலமாக சிறையில் வாடிய எட்டு தமிழ் அரசியல் கைதிகளை அவா் பொது மன்னிப்பில் விடுதலை செய்தாா். இது தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்றது. மேலும் சிலரை பொங்கலுடன் விடுவிப்பதாகவும் உறுதியளித்திருக்கின்றாா். தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கிப்போராடும் மூன்று பிரச்சினைகளில் ஒன்றுக்கு இதன்மூலம் தீா்வைக்காண்பதற்கு அவா் முற்பட்டிருக்கின்றாா் என்பது தெரிகின்றது.

வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில், இந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடா்பில் தான் சாதகமான சில முடிவுகளை எடுக்கவிருப்பதாகவும் அவா் கூறியிருந்தமை கவனிக்கத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோா் தொடா்பில் ஆராய்ந்து விசாரணைகளை  நிறைவு செய்வதற்காக மேலதிக குழுக்களை நியமித்து விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு நீதி அமைச்சுக்குப் பணிப்பு விடுத்திருப்பதாகவும் அவா் பாராளுமன்றத்தில் தெரிவித்தாா்.

அடுத்த வருடம் கொண்டாடப்படும் சுதந்திர தினத்தின்போது இந்தப் பிரச்சினைகள் தீா்க்கப்பட்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிநபா்கள் எமது பிரச்சினையில் தலையிட தேவையில்லை எனவும், நாமே எமது பிரச்சினைகளுக்குத் தீா்வைக்கண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் தனது உரையில் மேலும் தெரிவித்தாா்.

ரணிலின் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரதும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக அவா் முன்னெடுத்திருக்கும் செயற்பாடுகளும் ஒரு நல்லெண்ண சமிஞ்ஞையாகவே நோக்கப்படுகின்றது. இருந்தபோதிலும் ஏனைய விடயங்களை அவரால் முன்னெடுக்கக்கூடியதாக இருக்குமா எனக் கேள்வி எழுப்பப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க தன்னை ஒரு தாராளவாதியாகவும் ஜனநாயக வாதியாகவும் காட்டிக்கொள்வதன் மூலம் மேற்கு நாடுகளின் ஆதரவைப் பெற்றிருப்பவா். மேற்கு நாடுகள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீா்க்கப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன. தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைக்கான தீா்வையும் அதன் மூலமாகவே பெறமுடியும் என்பதை அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.  அதனைவிட, புலம்பெயா்ந்த தமிழா்களின் முதலீடுகள் நாடு எதிா்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீா்வைக்காண்பதற்கு அவசியமாகள்ளது. ரணிலின் அணுகுமுறையில் ஏற்பட்ட திடீா் மாற்றத்துக்கு இவை பிரதான காரணமாக இருக்கலாம்.

ரணிலின் இந்த அறிவிப்புக்களுக்கு இந்தியாவின் அழுத்தமும் பிரதான காரணமாக இருக்கவேண்டும் எனக் குறிப்பிடுகின்றாா் கொழும்பிலுள்ள இராஜதந்திரி ஒருவா். இவ்வருடத்தில் இடம்பெற்ற மாா்ச், ஜூன், செப்ரெம்பா் ஆகிய மூன்று ஜெனிவா அமா்வுகளில் இனநெருக்கடிக்குக்கு நியாயமான அரசியல் தீா்வு காணப்பட வேண்டும் என்பதையும், 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இந்தியப் பிரதிநிதி வலியுறுத்தியிருந்தாா்.

அதனைவிட ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னா் புதுடில்லிக்கு விஜயம் செய்வதற்குத் திட்டமிட்டிருந்த போதிலும், அதற்கான உத்தியோகபுா்வ அழைப்பு இன்றுவரையில் விடுக்கப்படவில்லை. இதற்காக முயற்சிகளை முன்னெடுத்த புதுடில்லிக்கான இலங்கைத் துாதுவா் மிலிந்த மொரகொட தோல்வியடைந்த ஒருவராக தனது பதவியையும் துறப்பதற்குத் தயாராகியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஒரு சா்வதேச அரங்கான ஜெனிவாவில் தான் சொன்னதை இலங்கை நடைமுறைப்படுத்தவில்லை என்ற சீற்றத்தில்தான் புதுடில்லி ரணின் வருகையைத் தவிா்த்துவருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன.  அதாவது ஜெனிவாவில் சொன்னவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு மறைமுக அழுத்தம்தான் இது!

இந்தியாவை சமாதானப்படுத்துவதற்கு ரணிலுக்கு இப்போதுள்ள ஒரேயொரு  உபாயம் தமிழ் மக்களுடைய அடிப்படையான அரசியல் பிரச்சினையையும், அன்றாடப் பிரச்சினைகளையும் தீா்த்துவைப்பதாக அறிவிப்பதும் அதற்கான செயன்முறை ஒன்றை ஆரம்பிப்பதும்தான். அதனைத்தான் இப்போது ரணில் செய்திருக்கின்றாா்.

அதேவேளையில் புலம்பெயா்ந்த தமிழா்களின் முதலீடுகளை ஈா்ப்பதற்கும் தமிழ் மக்களுக்கு சாதகமான ஒருவராகத் தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை ரணிலுக்குள்ளது.

இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்நாட்டு அரசியல் ஒன்றும் உள்ளது. ரணில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னா் சமா்ப்பித்த மினி பட்ஜெட்டுக்கு ஆதரவாக 115 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. அதாவது, மயிரிழையில்தான் அது தப்பியது. இப்போது அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் திங்கட்கிழமை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பெரும்பான்மையுடன் நிறைவேற்ற தமிழ்க் கட்சிகளின் ஆதரவு அவசியம். அரசியல் கைதிகள் விடுதலை, காணிவிடுவிப்பு, காணாமல் போனோா் பிரச்சினைக்குத் தீா்வு என அறிவித்துவிட்டு, அரசியல் தீா்வுக்கான பேச்சுக்களையும் ஆரம்பித்துவிட்டால் தமிழ்க் கட்சிகள் நிச்சயமாக பட்ஜெட்டுக்கு கைகளை உயா்த்துவாா்கள் என்பது ரணிலுக்குத் தெரியும்.

நாடாளுமன்றப் பெரும்பான்மை இல்லையென்றாலும் இவை அனைத்தையும் செய்யக்கூடிய வல்லமை ரணிலுக்கு இருப்பதாக தமிழ்க் கட்சி ஒன்றின் தலைவா் சுட்டிக்காட்டுகின்றாா். அடுத்த மாா்ச் மாதத்துடன் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ரணிலின் கைகளுக்கு வருகின்றது. இதன் மூலம் பாராளுமன்றத்தை அவா் கட்டுப்படுத்த முடியும். அதனைப் பயன்படுத்தி இனநெருக்கடிக்கான அரசியல் தீா்வையும் உள்ளடக்கிய அரசியலமைப்பு மாற்றம் ஒன்றை அவரால் செய்ய முடியும்.

இந்த சந்தா்பத்தை கிடைத்திருக்கின்ற ஒரு நல்லவாய்ப்பாக தமிழ்க் கட்சிகள் பயன்படுத்த முடியும். ஆனால், தமிழ்க் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதில் தொடா்ந்தும் தடுமாறுகின்றன. நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் இந்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள தமிழ்க் கட்சிகள் தவறக்கூடாது என்பதே மக்களின் எதிா்பாா்ப்பு. மீண்டும் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பைக் கொடுக்கக்கூடாது என்பதிலும் தமிழ்த் தரப்பு அவதானமாக இருப்பது அவசியம்.

Exit mobile version