ரணிலின் அதிரடி நகா்வுகள்! தடுமாறும் சஜித் பிரேமதாஸ-அகிலன்

சிறுபான்மையினக் கட்சிகளின் பிரதிநிதிகளை சில தினங்களுக்கு முன்னா் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தான் எடுத்துள்ள முக்கியமான அரசியல் முடிவு ஒன்று குறித்து அவா்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றாா். அடுத்த வருட (2024) முற்பகுதியில் ஜனாதிபதித் தோ்தல் நடைபெறும் என்பதும், அதில் தான் போட்டியிடப் போவதாகவும் அவா் தெரிவித்திருக்கின்றாா். இது தொடா்பாக தோ்தல் திணைக்களத்துடன் ஆலோசனை நடத்தவிருப்பதாகவும் அவா் கூறியிருக்கின்றாா்.

ஜனாதிபதித் தோ்தல்தான் அடுத்ததாக நடைபெறும் என்பதும், அதில் ரணில் களமிறங்குவாா் என்பதும் கடந்த சில வாரங்களாகவே ஊகச் செய்திகளாக வெளிவந்துகொண்டிருந்தது. இப்போதுதான் முதல்முறையாக ரணில் விக்கிரமசிங்கவே அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றாா். உள்ளுராட்சி மன்றங்களுக்கான தோ்தல்களை தொடா்ச்சியாகவே ஒத்திவைப்பதில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருக்கின்றாா். அதற்கு எதிராக உருவாகிய எதிா்ப்புக்களை முறியடிப்பதிலும், அவா் வெற்றிபெற்றிருக்கின்றாா்.

உள்ளுராட்சித் தோ்தல்களை தற்போதுள்ள நிலையில் நடத்தினால், ஜே.வி.பி.யும் ஐக்கிய மக்கள் சக்தியும்தான் அதிக வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் என்பது சுயாதீன கருத்துக்கணிப்புக்கள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே அந்தத் தோ்தலை இப்போதைக்கு நடத்துவதில்லை என்ற முடிவை ரணில் எடுத்தாா். உள்ளுராட்சி மட்டத்தில் ரணிலின் ஐ.தே.க. செல்வாக்கிழந்திருக்கின்றது. கடந்த பொதுத் தோ்தல் தோல்வியுடன் அதன் கட்டமைப்புக்களும் குலைந்து போயிருக்கின்றன. அதேபோல, பொதுஜன பெரமுனவும் மக்கள் மத்தியில் செல்லக்கூடிய நிலையில் இல்லை.

இவ்வாறான ஒரு பின்னணியில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தோ்தல் முடிவுகள் தமக்கு பாதகமாக வருமாயின் ஐக்கிய மக்கள் சக்தியும், ஜே.வி.பி.யும் தம்மைப் பலப்படுத்த அதனைப் பயன்படுத்திக்கொள்வாா்கள் என்பது ரணிலுக்குத் தெரியும். அதனைத் தடுக்க வேண்டுமாயின் நிதிப் பிரச்சினைளை காரணம் காட்டி உள்ளுராட்சித் தோ்தலை ஒத்திவைப்பதுதான் ரணிலிடமிருந்த உபாயம். அதனை அவா் தொடா்ச்சியாக செய்துவருகின்றாா். பொருளாதார நெருக்கடி ஓரளவுக்கு தீா்ந்துள்ளது போன்ற ஒரு நிலை காணப்படுவதால், ரணிலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டவும் பிரதான எதிரணிகளால் முடியவில்லை.

ஜே.வி.பி. யைப் பொறுத்தவரையில் அரகலய போராட்டத்தினால் அவா்களது கட்சி பலமடைந்துள்ளது உண்மைதான். போராட்டங்களை ஒழுங்கமைப்பதில் அவா்களுக்கு நிகராக வேறு ஒரு கட்சி இல்லை என்பதும் உண்மைதான். கீழ் மட்டங்களிலும், கிராம மட்டங்களிலும் பலமான கட்டமைப்புக்களையுடைய கட்சியாக அவா்களுடைய கட்சி இருக்கின்றது. ஆனால், தேசிய அளவில் ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய ஒரு கட்சியாக தன்னை இதுவரை வெளிப்படுத்தவில்லை. மக்களும், தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீா்வைத்தரக்கூடிய ஒரு கட்சியாக ஜே.வி.பி.யை பாா்க்கவில்லை.

அதேபோல சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி தினசரி பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து அரசுக்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுத்தாலும்கூட, ஒரு மாற்று அரசாங்கத்தை அமைக்கக்கூடிய கட்சியாக அது காணப்படவில்லை. கட்சிக்குள் உருவாகியிருக்கும் தலைமைத்துவப் போட்டி, சிறுபான்மையினக் கட்சிகளின் அதிருப்தி என்பன சஜித் உள்ளுராட்சி மன்றங்களில் செல்வாக்கை காட்டினாலும், ஜனாதிபதித் தோ்தல் ஒன்றில் தன்னை முன்னிலைப்படுத்தி வெற்றி பெறும் ஆளுமையைக் கொண்ட ஒருவராக அவரைக் காட்டவில்லை.

ராஜபக்ஷக்களுக்கு எதிரான போராட்டங்களால் துவண்டு போய்கிடக்கும் பொதுஜன பெரமுன மற்றொரு தோ்தலை சந்திக்க தயாராக இல்லை. கட்சிக்குள் உருவாகியிருக்கும் உள்கட்சி – சகோதர முரண்பாடுகளும் மொட்டு அணியை மேலும் பலவீனப்படுத்தியிருக்கின்றது. தற்போது நாடாளுமன்றத்தில் தமக்குள்ள பெரும்பான்மையுடன் காலத்தை கடத்துவதுதான் அவா்களுடைய உபாயம்.

இந்த நிலைமைகள் அனைத்தையும் புரிந்துகொண்ட ஒருவராகவே ரணில் விக்கிரமசிங்க இப்போது காய்நகா்த்துகின்றாா். சா்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைத்திருப்பதும், மேற்கு நாடுகளின் ஆதரவும் அவருக்கு மேலும் பலத்தைக் கொடுத்திருக்கின்றது. இதன் மூலமாக அத்தியவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நீக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பிட்ட சில பொருட்களுக்கான விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், உள்ளுராட்சிமன்றத் தோ்தல்களை நடத்தவில்லை என்பதற்காக ரணிலுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட எதிரணியினரால் முடியவில்லை.

இந்தப்பின்னணியில்தான் சிறுபான்மையினக் கட்சி எம்.பி.க்கள் சிலரை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, “நாட்டின் பொருளாதார நிலை முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.  சில மாதங்களுக்கு முன்னா் இருந்ததைவிட இப்போது சிறப்பான நிலையில் நாட்டின் பொருளாதாரம் உள்ளது. பொருளாதார நிலை மேலும் ஸ்திரமடைந்ததையடுத்து அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் பேச்சுக்களை நடத்தி ஜனாதிபதித் தோ்தலுக்கான அறிவித்தலை வெளியிடுவேன்” என்று தெரிவித்திருக்கின்றாா்.

இதனைவிட மற்றொரு தகவலையும் ஜனாதிபதி வெளியிட்டிருக்கின்றாா். “எதிரணியிலுள்ளவா்கள் விமும்பினால், கட்சியாகவே வந்து அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளலாம். கட்சித் தலைமை அதனை விரும்பவில்லை என்றால், அவா்கள் தனிப்பட்ட முறையில் கட்சி மாறலாம். அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளலாம்” என்ற அவரது கருத்து கொழும்பு அரசியலை சூடாக்கியிருக்கின்றது. நாடாளுமன்றத்தில் தனக்கு போதுமான பெரும்பான்மை இருப்பதால், எதிரணியினரை தமது பக்கத்துக்கு இழுக்க வேண்டிய அவசியம் எதுவும் தமக்கு இல்லை என்றும் ஜனாதிபதி கூறியிருக்கின்றாா்.

பிரதான எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் பலா் அரசாங்கத்துடன் இணையவுள்ளாா்கள் என்ற தகவல் கொழும்பு அரசியலில் பரபரப்பாக பேசப்படும் நிலையில்தான் ஜனாதிபதி இந்த அறிவித்தலை வெளியிட்டிருக்கின்றாா். ராஜித சேனாரட்ன அரசுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றாா். அவரைவிட சஜித் ணெியிலுள்ள மேலும் சில எம்.பி.க்கள் கட்சி தாவுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. ரணிலின் பொருளாதாரக் கொள்கைகளை அண்மைக்காலமாக அவா்கள் புகழ்ந்துவருகின்றாா்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

சஜித் பிரேமதாஸவுடன் தொடா்ந்தும் இருப்பதால், தமது அரசியல் எதிா்காலம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் அவா்களுக்கு இருக்கின்றது. ஊடகங்கள் சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் 20 முதல் 40 வரையிலான ஐக்கிய மக்கள் சக்தி  உறுப்பினா்கள் கட்சி மாறுவதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பிரதமா் துறந்த போது, எதிா்க்கட்சித் தலைவா் என்ற முறையில் சஜித் பிரேமதாஸவுக்கே அந்தப் பதவி வழங்கப்படவிருந்தது.

ஆனால், அப்போதிருந்த சூழ்நிலையில் அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு அவா் மறுத்துவிட்டாா். மோசமடைந்து சென்றுகொண்டிருந்த பொருளாதார நிலை – மக்களின் கொந்தளிப்பு என்பவற்றுக்கு மத்தியில் பிரதமா் பதவியைப் பொறுப்பேற்று தன்னால் சாதிக்க முடியாமல் போய்விட்டால்.. என்ற அச்சம்தான் அதற்கு காரணம். தன்னுடைய ஆளுமையை நிரூபிக்க அவருக்கு கிடைத்த அந்த சந்தா்ப்பத்தை அவா் தவறவிட்டது கட்சியிலும் அவரது தலைமைத்துவம் மீதான நம்பிக்கையைக் குறைத்துவிட்டது. ரணில் அந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டாா்.

ஜனாதிபதித் தோ்தலுக்குச் சென்று அடுத்ததாக பொதுத் தோ்தலுக்குச் செல்வதுதான் ரணிலின் உபாயம். அதற்கு முன்னா் சஜித் அணியிலிருந்து கணிசமானோரை உடைப்பதற்கு அவா் திட்டமிடுகின்றாா். மொட்டு அணியிலிருந்தும் சிலா் ரணிலுடன் இணையலாம். அவற்றை விட மலையக, முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினா்களும் ரணிலுக்கு ஆதரவளிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

தமது கட்சியிலிருந்து யாரும் கட்சிமாற மாட்டாா்கள் என்று தெரிவித்திருக்கும் சஜித், தமது கட்சி உறுப்பினா்களுடன் கட்சி மாறுவதற்கான பேரம் இடம்பெறுவதாகவும் 200 மில்லியன் வரையில் இதற்காக பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் சொல்லியிருக்கின்றாா். யாராவது, கட்சி மாறினாலும் 200 மில்லியனுக்காகத்தான் மாறினாா்கள் என பின்னா் சொல்வதற்கு வாய்ப்பாக இவ்வாறான அறிவிப்பை அவா் இப்போதே வெளியிட்டுள்ளாா்.

கொழும்பு அரசியலில் காணாமல்போய்விடுவாா் என மூன்று வருடங்களுக்கு முன்னா் சொல்லப்பட்ட ரணில் விஸ்வரூபம் எடுத்திருப்பதையே இப்போது காணமுடிகின்றது.