தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறையை ரணில் நினைவு படுத்தியுள்ளார்- காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்:  14 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை 

கடந்த 1983ஆம் ஆண்டு   இலங்கையின்  முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி  ஆட்சியில், தமிழர்களுக்கு எதிராக கறுப்பு ஜுலை வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

இந்த கறுப்பு ஜுலை வன்முறை நடந்தேறி இன்றுடன் 39 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. தற்போது   ஜே.ஆர்.ஜெயவர்தனவின் மருமகளான ரணில் ஜனாதிபதியாக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில்  சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஒப்பிடுகின்றனர்.

கறுப்பு ஜுலையில் முதலாவது கலவரம் ஆரம்பமானது, ஜுலை மாதம் 23ம் திகதி என்பதுடன், அதே திகதியை அண்மித்து மக்கள் மீது இலங்கை இராணுவம் நேற்று (22) தாக்குதல் நடத்தியதாக காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி முதல் சில வார காலத்திற்கு இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என இந்தக் கலவரத்தை இன்றும் இலங்கையர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர்.

திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்த கறுப்பு ஜுலை வன்முறை பார்க்கப்படுகிறது என்பதுடன் யாழ் நுாலகம் உள்ளிட்ட தமிழர்களின் பெரும் சொத்துக்கள் அழிக்கப்பட்டு பெருமளவிலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காலி முகத்திடல் போராட்டத்திலுள்ள இளைஞனான சத்துர ஜயவிக்ரம பண்டார, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

”ஜுலை மாதம் 23ஆம் திகதி, இந்த நினைவுகளை நாம் சற்று பின்நோக்கிப் பார்த்தால், 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி இன்று இலங்கையில் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பலவந்தமாக பதவியேற்றுக் கொண்ட, அதாவது மக்களின் விருப்பமின்றி தெரிவான ரணில் விக்ரமசிங்கவின் மாமனார், ஜுலை மாதம் 22ஆம் திகதியை அண்மித்தே அடக்குமுறையை ஆரம்பித்தார்.

மாமனார் செய்ததை, மருமகன் செய்வில்லை என்றால், அது பலனில்லை என எண்ணியிருப்பார் போலத் தெரிகிறது. நான் காணாத, அதாவது 39 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற, எமது நாட்டில் வாழக்கூடிய தமிழ் மக்கள் மாத்திரம் எதிர்நோக்கிய அடங்குமுறையை, இன்று ராணுவமயமாக்கலைப் பயன்படுத்தி மேற்கொண்டதை இன்று நாம் கண்டோம். 39 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதை, ரணில் விக்ரமசிங்கவின் மூலம் இன்று எம்மால் அவதானிக்க முடிந்தது. மாமனார் செய்ததை, மருமகனும் செய்து, இலங்கையில் மீண்டுமொரு கறுப்பு ஜுலையை ஏற்படுத்த முயல்கிறார். இலங்கையில் மீண்டும் இளைஞர்களின் உயிர்களை பலியெடுப்பதற்காகவா அல்லது இளைஞர், யுவதிகளின் கனவுகளை இல்லாது செய்வதற்காகவா இப்போது முயல்கிறீர்கள் என்றும் 30 வருட யுத்தம் எனக் கூறி தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களை மோதிக் கொள்ள வைத்து, நாட்டை இல்லாது செய்யவா முயல்கிறீர்கள் என்றும் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்க விரும்புகின்றோம்” என சத்துர ஜயவிக்ரம பண்டார தெரிவிக்கின்றார்.

நன்றி- பிபிசி தமிழ்