ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்படத் தயார்-ரணில்

ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பல தரப்பினருக்கும் இடையில் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும், பேச்சுவார்த்தை மூலம் மத்தியஸ்த நிலைக்கு வந்து கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதைப் போன்று, நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ரணில் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்குமாறு கூறிய ஜனாதிபதி, அக்குழுவிற்கு அனைத்து மதங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது எனவும் குறிப்பிட்டார்.

இளைஞர்களின் தேவைகளுக்காக அரச அனுசரணையுடன் செயற்படுத்துவதற்கு, கொழும்பு கோட்டை மிதக்கும் சந்தை மற்றும் பல்வேறு இடங்களை முன்மொழிய தான் விரும்புவதாகத் தெரிவித்த ரணில், அது தொடர்பில் முறையான ஆலோசனைகளை பெரும்பான்மையான ஆர்ப்பாட்டக்காரர்களின் பங்களிப்புடன் தயாரித்து கையளிக்குமாறும் மேலும் தெரிவித்தார்.