ரணில் ராஜபக்ச அரசும் கடந்தகாலத்தை வெள்ளையடிக்க முற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் | இரா.ம.அனுதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இரா.ம.அனுதரன்

வெள்ளையடிக்க முற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இலங்கைத் தீவு சந்தித்துள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டங்கள் ஏற்படுத்திவரும் உள்ளக-வெளியக நெருக்குவாரங்களில் இருந்து சிங்கள பௌத்த பேரினவாத தரப்பினரது அபிலாசைகளை பாதுகாக்கும் வகையில், கோட்டாபய – மகிந்த அரசுக்கு பதிலீடாக கோட்டாபய – ரணில் அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஒட்டுமொத்த ராஜபக்சக்களுக்கும் எதிராக சிங்கள தேசத்து மக்கள் போராடிக் கொண்டிருக்கையில், ராஜபக்ச தரப்பினரை காப்பாற்றும் வகையில் ரணில் பிரதமராக்கப்பட்டுள்ளார். இவ்வாறான பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க தற்போது ரணில் ராஜபக்ச என்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

ராஜபக்சக்களை பாதுகாக்கும் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டை சிங்கள அரசியல் தரப்பினர் விமர்சித்து வருகின்ற போதிலும், அவர்களை பின்தள்ளும் வகையில் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரது செயற்பாடுகள் அமைந்துள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையினால் தமிழ் மக்களின் அரசியல் பேரியக்கமாக உருவாக்கி பலப்படுத்தப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பின் நாட்களில் நுழைந்த இவ்விருவரின் வெளிப்பாடாக இதனை நாம் மட்டுப்படுத்திவிடவோ, கடந்து செல்லவோ முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி நிலை வெறுதாகி நெடுநாட்களாகிவிட்ட போதிலும், எதேச்சதிகாரமாக அப்பதவி நிலையை பயன்படுத்தி இந்த நொடிப்பொழுது வரை எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டு வருவதனை கூட்டமைப்பின் தலைவரோ, பங்காளிக் கட்சிகளோ தடுத்து நிறுத்தமுடியாதவர்களாகவே உள்ளனர்.

இவ்வாறான நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழியே தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றமையை தவிர்க்கவியலாத ஒன்றாகியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புராஜபக்ச தரப்பை காப்பாற்றுவதற்காக பிரதமர் பொறுப்பை ஏற்றிருப்பதனால் ரணில் ராஜபக்ச என்று சுட்டி விமர்சமானது, ரணில் விக்கிரமசிங்க முன்னர் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்காகவும் செயற்பட்டவர் என்பதாக காட்ட முற்படுவதன் மூலம் தமது கடந்த காலத்தை வெள்ளையடிக்கப் பார்ப்பதாகவே அன்றி வேறில்லை.

இலங்கைத் தீவில் சீனாவின் ஆதிக்கம் வியாபிப்பதற்கு முறைவாசல் செய்துநின்ற காரணத்திற்காக இந்திய – அமெரிக்க தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டதே ரணில்-மைத்திரி கூட்டரசாங்கமாகும். குறித்த முன்னெடுப்புகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்குதாரர் ஆக்கப்பட்டமை சிங்கள-அனைத்துலக சதியாகும்.

இவ்வாறு 2015இல் கொண்டுவரப்பட்ட மைத்திரி-ரணில் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் பிரதமர் பதவிநிலையில் இருந்து கொண்டு ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாகவே பலதடவைகள் வெளிப்படுத்திய ‘மின்சாரக் கதிரை’ விடயம் அப்போதே ரணில் ராஜபக்சவாக செயற்பட்டதன் சாட்சியமாகும்.

ராஜபக்ச தரப்பினரை சர்வதேச தரப்புகள் மின்சாரக் கதிரையில் ஏற்றும் நிலையை மாற்றி அவர்களை காப்பாற்றியது இந்த நல்லாட்சி அரசு என பகிரங்கமாகவே ரணில் பெருமிதப்பட்டுக் கொண்டார்.

2019ம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌன சாட்சியாக வீற்றிருக்க, போரில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவத்தினரும் குற்றங்களையிழைத்தனர். அவற்றை உண்மையைப் பேசி மறப்போம் – மன்னிப்போம் என அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இலங்கை அரச படைகளால் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் இருக்கின்ற நிலையில், அவை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளாது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்காது, ‘மறப்போம் மன்னிப்போம்’ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தமையும் ரணில் ராஜபக்ச அவதாரத்தின் வெளிப்பாடேயாகும்.

போரின் இறுதியில் இலங்கை அரச படைகளிடம், உறவுகள் சாட்சியாக விசாரணைக்காகவென கையளிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்-யுவதிகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு அரச தரப்பு இதுவரை பொறுப்புக்கூறாத நிலையில், அதே நல்லாட்சி அரசின் மைத்திரி-ரணில் காணாமல் ஆக்கப்பட்டோர் எவரும் தற்போது உயிருடன் இல்லை என அதுவும் தமிழர் தாயகத்தில் வைத்தே பகிரங்கமாக கூறியமை எதற்காக? யாரைக் காப்பாற்றுவதற்காக?

இவ்வாறு இலங்கை அரச படைகளிடம் கையளிக்கப்பட்டவர்கள் இன்று உயிருடன் இல்லை என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களது மரணம் இயற்கையானதா, தற்செயலானதா, திட்டமிட்ட வகையிலானதா? திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டிருப்பின் அதற்கு காரணமானவர்கள் யார்? குறித்த அநீதிக்கு உத்தரவிட்டது யார்? என்ற கேள்விகளை ஆட்சியாளர்களை நோக்கி எழுப்பியிருக்க வேண்டிய கூட்டமைப்பினர் தீபாவளி பட்டாசாக தீர்வுத்திட்டத்தை தமிழ் மக்களுக்கு வாணவேடிக்கை காட்டியது, எதனால், எதற்காக? காப்பாற்றுவதற்காக?

2019 இல் கோட்டாபய – மகிந்த அரசு ஏற்பட்டதன் பின்னர் அதில் அமைச்சராக இருந்த விமல் வீரவன்ச மன்னாரில் அரச திட்டம் ஒன்றின் பெயர்பலகையை திரைநீக்கம் செய்த போது தமிழ் மொழிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூட்டமைப்பினர் கொந்தளித்து அடங்கியதை மறக்கத்தான் முடியுமா? கோட்டா – மகிந்த அரசு அரசியலமைப்பை மீறி தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் தமிழ் மொழியை திட்டமிட்டு புறக்கணித்து வருவதை மறுப்பதற்கில்லை. நல்லாட்சி(?)யில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக வலம்வந்திருந்த சஜித் பிரேமதாசவினால் வடக்கு கிழக்கில் மாதிரி கிராமங்கள் திறந்து வைக்கப்பட்டு திரைநீக்கம் செய்யப்பட்ட நினைவு கற்களில் சிங்கள மொழி முதன்மையாக்கப்பட்டிருந்ததை கூட்டமைப்பினர் வசதியாக மறந்து போயிருந்தமை எதனால், எதற்காக, யாரைக்காப்பாற்ற?

கோட்டாபய, மகிந்த, ரணில், மைத்திரி, சஜித், விமல் என எவராக இருக்கட்டும் யாவரும் சிங்கள பௌத்த பேரினவாத தரப்பின் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் ஒன்றானவர்களே. இந்த உண்மைகளை மக்களிடம் மூடிமறைத்து புதிய அரசியலமைப்பு பூச்சாண்டி காட்டி நான்கரை ஆண்டுகள் ரணில்-மைத்திரி தரப்புடன் இணைந்திருந்த கூட்டமைப்பினர் தமது கடந்த காலத்தை வெள்ளையடிப்பு செய்யவே இன்று ரணில் ராஜபக்ச விமர்சனத்தை முன்வைத்து துள்ளிக்குதிக்கின்றனர்.

நல்லாட்சி(?)யின் இறுதியில் மைத்திரியின் குத்துக்கரணம் காரணமாக மகிந்த தலைமையில் காபந்து அரசு அமைந்த போது முன்னாள் பிரதமராக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும், காபந்து அரசு கலைக்கப்பட்ட போதும், தற்போது கோட்டாபய அரசில் புதிய பிரதமராக ரணில் பொறுப்பேற்ற போதிலும் முன்னாள் பிரதமராக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவும் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டதில்லை, பாதிக்கப்படப் போவதுமில்லை. 2015இல் மகிந்த ராஜபக்சவும், 2019 இல் ரணில் விக்கிரமசிங்கவும் படுதோல்வியைச் சந்தித்த போதிலும் 2019இலும், 2022இலும் அவர்களால் மீண்டும் வலுவான தரப்பாக சிறிலங்காவின் ஆட்சி-அதிகார பீடங்களை அலங்கரிக்க முடிகின்றமையே அதன் சாட்சியமாகும்.

சிங்கள பௌத்த பேரினவாத தரப்பின் அபிலாசைகளை முன்னிறுத்தியதான சிறிலங்காவின் ஆட்சி-அதிகாரம் இவ்வாறுதான் இருக்கும். அதனை அதன் போக்கிலேயே விட்டுவிட்டு, தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்தியதாக கடந்து செல்வதுதான் தமிழர் தரப்பின் கடப்பாடாகும். அதைவிடுத்து ரணில் ராஜபக்ச அவதாரத்தை விமர்சிப்பதென்பது தங்களது கடந்தகாலத்தை வெள்ளையடிக்கும் முனைப்பாகும்.

இனப்படுகொலையுடன் நேரடியாக தொடர்புடைய ராஜபக்ச தரப்பை பொறுப்புக்கூறும் நிலைக்கு கொண்டுவர முடியாத இவர்கள் இனிவரும் காலங்களில் எதனை சாதிக்கப் போகின்றார்கள்?

ஈழத்தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை பலிகொடுத்து தம் நலன்களை உறுதிசெய்து கொண்ட கூட்டமைப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசியலமைப்பிற்குள் என்பதாக போக்குக்காட்டியே ரணில்-மைத்திரி தரப்புடன் நான்கரை ஆண்டுகள் அரசியல் உறவை தொடர்ந்தார்கள். தற்போதைய கோட்டா-மகிந்த, கோட்டா-ரணில் அரசிலும் அதே புதிய அரசியலமைப்பு முயற்சியை காண்பித்து தமது திரைமறைவு பேரங்களையும் சுயலாப அரசியலையுமே முன்னெடுக்கத் தலைப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் செயற்பட்டு வரும் அத்தனை தரப்புகளும் தத்தமது சுயலாப அரசியலை முன்னெடுப்பதிலும் அரசியல் இருப்பை பாதுகாப்பதிலுமே கண்ணும் கருத்துமாக செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையே, கடந்த 13 ஆண்டுகளில், தமிழ் மக்கள் சந்தித்து வரும் இன்னல்கள், நெருக்கடிகளுக்காகவும் நீதிக்காகவும் தாமே வீதியில் இறங்கியும், அரச இயந்திரத்திற்கு எதிராகவும் போராடும் கையறு நிலைக்கு காரணமாகும்.

நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை, போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு.

ராஜபக்சக்களை வீட்டுக்கு அனுப்புவதோ, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்போ தமிழருக்கான நீதியினை வழங்குவதற்கான பாதையுமல்ல தீர்வுமல்ல. மாறாக, தீர்வுக்கான காலத்தை மேலும் சில ஆண்டுகள் நீடிப்புச் செய்வதற்கும் தமிழர்களது விடுதலைப் போராட்டத்தினை நீர்த்துப்போகச் செய்யவுமே இவை பயன்படப்போகின்றது என்பதனை அறுதியிட்டுக்கூறமுடியும்.

நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு தாமதப்பட்டும், தடுக்கப்பட்டும் வருவதற்கு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நேரடித் தலையீடே முதன்மைக் காரணமாகும். நாட்டுக்கு மிக ஆபத்தான 13ஐ கட்டுப்படுத்தும் அவசியத்தின் நிமித்தம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்புக்கு ஆதரவளிக்க முடியாது என மாகாநாயக்க தேரர்கள் வெளிப்படையாக தெரிவித்திருப்பது இதன் சான்றாகும்.

இந்த சிங்கள பௌத்த பேரினவாதிகளை மீறிய ஒரு சக்தி சிங்கள தேசத்தை ஆளமுடியாது என்பது சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கைத் தீவின் வரலாறு உணர்த்திநிற்கும் பேருண்மையாகும்.

Tamil News