போர் குற்றங்களை ஒப்புக் கொள்ளும் வகையில் கருத்துரைத்த ரணில்

‘இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் பின்னர் எந்த சமூகத்துக்கும் நீதி வழங்கப்படவில்லை’ என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அல்ஜஷீரா செய்தி சேவையுடன் இடம்பெற்ற விசேட நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த யுத்தம் தொடர்பில் கேள்வி எழுப்பிய நெறியாளர், பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதி வழங்கப்பட்டதா? என்று வினவினார். இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, ‘எந்த சமூகங்களுக்கும் நீதி வழங்கப்படவில்லை’ என்றும், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் தடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதேநேரம் வைத்தியசாலைகள் மீதான குண்டு தாக்குதல்களையும் அவர் ஒப்புக் கொண்டதுடன் ‘அத்தகைய குண்டுத் தாக்குதல்கள் முறையானவை அல்ல’ என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
‘இலங்கை விமானப்படை மருத்துவமனைகளில் குண்டு தாக்குதல் நடத்திய சந்தர்ப்பங்கள் இருந்தன’
‘அவற்றில் சிலவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் பெரிய அளவில் இடம்பெற்றதாக நான் கூற மாட்டேன்’ என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் 6 தடவை பிரதமராக இருந்தவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது குறிக்கிட்ட நெறியாளர் ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூற்றுப்படி இலங்கையின் அரச படைகள் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவியை தடுத்தன’ என்று சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க அதனை ஒப்புக் கொள்வதாக கூறியுள்ளார்.
அத்துடன் போர் குற்றங்களை புரிந்ததாக கூறப்படும் சவேந்திர சில்வா எதற்காக இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார் என இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ‘தேர்தலின் பின்னர் இராணுவத் தளபதியை மாற்றுவது நடைமுறை அல்ல’ என்றும் தாம் பொறுப்பேற்ற போது அதனை கவனத்திற் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடி மற்றும் ஈஸ்வர் குண்டு தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தாம் பாதுகாத்ததாக கூறும் விடயத்தை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.