“இனவெறி ஒரு பாவம். அது கடவுளின் விருப்பத்துக்கு எதிரானது” டெஸ்மன்ட் ரூட்டு – தமிழில் ஜெயந்திரன்

இனவெறி ஒரு பாவம்தமிழில் ஜெயந்திரன்

இனவெறி ஒரு பாவம்: தனது சொல்லிலும் செயலிலும் தனது மனிதத்தை முழுமையாக வாழ்ந்து கொண்டு, முற்றிலும் அன்பு நிரம்பிய வாழ்க்கை எப்படியிருக்கும் என்று தனது சக தென்னாபிரிக்க மக்களுக்கும், உலகம் பூராவும் வாழுகின்ற மக்களுக்கு பேராயர் டெஸ்மன்ட் எடுத்துக்காட்டினார்.

உலகத்தால் மிக அதிகமாக மதிக்கப்பட்ட ஓர் ஆன்மீக, மனித உரிமைத் தலைவரான ரூட்டு, நிறவெறி தாண்டவமாடிய தென்னாபிரிக்காவில் மட்டுமன்றி, உலகத்தில் எங்கெல்லாம் பலவீனமானவர்களுக்கும் குரலற்றவர்களுக்கும் எதிராக அறநெறி ரீதியாக தவறுகள் இழைக்கப்பட்டனவோ, அங்கெல்லாம் இனவெறி, அடக்குமுறை, சகிப்பற்ற தன்மை, அநீதி போன்றவற்றின் தீமைகளுக்கு எதிரான தனது கொள்கை ரீதியிலான கடும் எதிர்ப்பை, செயல்களோடு கூடிய இறைநம்பிக்கையுடன் வாழ்ந்து காட்டினார்.

பொதுவெளியில் அவர் முன்னெடுத்த ஒவ்வொரு செயற்பாடும் அவரது மிக ஆழமான கிறிஸ்தவ நம்பிக்கையிலும் எப்போதும் பொது மனிதத்தை முன்னிறுத்துகின்ற உயிரோட்டமுள்ள அவரது ‘உபுண்ரு’ கோட்பாட்டிலும் வேரூன்றியிருந்தது. அவரது வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இவையே மிகப்பெரிய தார்மீக வலுவைக் கொடுத்தன. உண்மையில், அன்புக்கு எதிராக விவாதம் செய்ய எவரால் முடியும்? நிறவெறி அரசு அதைச் செய்ய முயன்று ஈற்றில் தோல்வியையே தழுவியது.

வெள்ளையர் அல்லாதவருக்கு தரக்குறைவான கல்வியைக் கொடுத்து, அவர்களைச் சிறிய வேலைகளுக்குள் முடக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே 1953 இல் இயற்றப்பட்ட ‘பாண்டு’ கல்விச் சட்டத்துக்கு தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக ரூட்டுவும் அவரது மனைவியும் ஆசிரியத் தொழிலிருந்து தாமாகவே வெளியேறினார்கள்.

1960களில் போட் ஹெயர் (Port Hare) பல்கலைக்கழகத்தில் அங்கிலிக்கன் (Anglican) மறை சார்ந்த ஆன்மீக குருவாகப் பணியாற்றிய காலங்களில், திருப்பலிகளின் போது, தமது ஆண் சகோதரர்களுடன் இணைந்து திருப்பலிக்குக் குருவானவருக்கு உதவுதவதற்கான பெண் மாணவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். அக்காலப் பகுதியில் அது மிகவும் ஒரு துணிகரமான முடிவாக அமைந்தது மட்டுமன்றி, பிற்காலத்தில் அங்கிலிக்கன் திருச்சபை, பெண்களைக் குருக்களாகத் திருநிலைப் படுத்தவும் காரணமாக அமைந்தது. இம்மாற்றத்துக்கு பேராயர் ரூட்டுவின் முயற்சிகள் அடிப்படையாக அமைந்திருந்தன. 1992ம் ஆண்டு, தென்னாபிரிக்காவின் முதல் ஐந்து பெண் குருக்களில் இருவரைப் பேராயர் திருநிலைப்படுத்தினார்.

ஆலயத்தின் மறையுரை மேடையாக இருந்தாலும் சரி, அல்லது, நிறவெறியை அமுல்நடத்திய தென்னாபிரிக்காவில் நீதிக்காகவும் சமத்துவத்துக்காகவும் அவர் முன்னெடுத்த நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி அல்லது உள்நாட்டுத் திரு அவைகளில் பொதுவான இலக்குகள், மாற்றம், ஒப்புரவு போன்ற விடயங்களை மையப்படுத்திய போதெல்லாம் பேராயர் அவர்கள் தனது ‘உபுண்டு’ கோட்பாட்டை வெளிப்படுத்தினார்.

“தான் கடும் எதிர்ப்பைச் சந்தித்த பங்குகளுக்குச் சென்ற போதெல்லாம் அவரது மென்மையான இயல்பு, இரக்கக்குணம், மிக ஆழமான அவரது இறை நம்பிக்கை என்பன இயல்பாக வெளிப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது” என்று அங்கிலிக்கன் மறைசார்ந்த ஒரு சமூக நீதிச் செயற்பாட்டாளர் கருத்துத் தெரிவித்தார்.

தென்னாபிரிக்க அங்கிலிக்கன் திருச்சபையைப் பொறுத்தளவில் மிக விரைவாக உயர்நிலைகளை எட்டிய பேராயர், ஜொஹன்னர்ஸ்பேர்க் நகரின் அங்கிலிக்கன் தலைவர் ஆகி (Dean of Johannesburg), இந்நிலையை அடைந்த முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையைப் பெற்றார். படிப்படியாக, லெசோத்தோவின் ஆயர் (Bishop of Lesotho), தென்னாபிரிக்க திருஅவைகள் ஒன்றியத்தின் பொதுச்செயலர், ஜொஹான்னர் ஸ்பேர்க்கின் ஆயர், கேப் ரவுணின் பேராயர் (Archbishop of Cape Town), தென் ஆபிரிக்க நாடுகளின் திரு அவையின் தலைவர் (South African Council of Churches – SACC) என்ற நிலைகளுக்கு விரைவாக அவர் உயர்ந்தார்.

‘அங்கிலிக்கன் திரு அவையின் தலைவர்’ என்ற அவரது பணிநிலை, நீதிக்கான அவரது உணர்வுபூர்வமான தேடல், தனது கருத்துகளை மிகவும் ஆணித்தரமாக எடுத்துச் சொல்ல அவருக்கு இயல்பாகவே இருக்கின்ற ஆற்றல் என்ற அனைத்தும் இணைந்து உலகில் அனைவராலும் அறியப்பட்டவராக அவரை மாற்றியது.

தனது ஊதாநிற முழுநீள அங்கியை அணிந்து கொண்டு, உலகத்திலும் தனது நாட்டிலும் எந்தவொரு அச்ச உணர்வும் இன்றி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக அவர் குரலெழுப்பிய போது உலகம் அவரை இலகுவாக அடையாளங் காணக் கூடியதாக இருந்தது.

தென் ஆபிரிக்க திரு அவைகளின் ஒன்றியத்தின் பொதுச்செயலராக இருந்து கொண்டு, கிறிஸ்தவ மறையின் அடிப்படையிலும் அறநெறி வழியிலும் அதிகார பூர்வமாக நிறவெறியை முற்றுமுழுதாக எதிர்த்துத் தனது கருத்துக்களை அவர் வெளிப்படுத்திய போது, சிலர் அவரை ஏற்கமறுத்தார்கள். இன்னும் சிலர் அவருக்குத் தொந்தரவு செய்தார்கள். ஆனால் இவை எவற்றுக்கும் அஞ்சாது நிறவெறியின் போலித் தன்மைகளைத் தகர்த்தெறிய எவ்வகையிலும் சமரசம் செய்யாத தனது வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார்.

தென் ஆபிரிக்கத் திரு அவைகளின் ஒன்றியத்தின் செயற்பாடுகளை விசாரணை செய்வதற்காக நீதியாளர் ஈலோவின் (Judge Eloff) தலைமையில் ஓர் அரச விசாரணை ஆணைக்குழுவை 1982இல் அதிபர் பி.டபிள்யூ போத்தா (PW Botha) நியமித்தார். இவ்வாறு செய்வதன் மூலம் பேராயர் ரூட்டுவை இச்செயற்பாடுகளைச் செய்யாது தடுப்பது அதிபரின் நோக்கமாக இருந்தது.

விசாரணை ஆணைக்குழுவில் ஆற்றிய தனது ஆரம்ப உரையின் மூலம், திருவிவிலியத்தின் அடிப்படையிலும், இறையியல் ரீதியாகவும் சமூக நீதியை ஆதரித்து உரையாற்றவும் செயற்படவும் திரு அவைக்கு இருக்கின்ற உரிமை தொடர்பாக யாரும் எதிர்த்து உரையாற்ற முடியாத வகையில் ஒரு விவாதத்தை பேராயர் முன்வைத்தார். நிறவெறியை முற்றுமுழுதாகத் தகர்த்தெறியும் ஒரு முயற்சியாக இது அமைந்திருந்தது. மிக விவேகமாகவும் நுட்பமாகவும் ஆற்றப்பட்ட இந்த உரை எந்தவித இறையியல் அறிவும் அற்ற நீதியாளர்களை ஆச்சரியத்துக்கும் குழப்பத்துக்கும் ஆழ்த்தியது.

மூன்று வருடங்களாகத் தொடர்ந்து நீடித்த விசாரணைகளின் முடிவில் அதிபர் போத்தாவுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் விதத்தில் ‘ஒன்றியம் தவறிழைத்ததற்கான எந்தவித உறுதியான சான்றும் கிடைக்கவில்லை’ என்ற தீர்ப்பை ஆணைக்குழு வழங்கியது. இந்தத் தீர்ப்பின் காரணமாக ஒன்றியம் எந்தவித பாதிப்பும் இன்றித் தனது பணியைத் தொடரக்கூடியதாக இருந்தது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நாடுகள் தடைகளைப் போடுவதை ஊக்குவிப் பதற்காக தனது பொறிபறக்கும் பேச்சுத்திறனை ரூட்டு பயன்படுத்தினார். நிறவெறி அரசின் பயங்கரவாத சட்டத்தைப் பொறுத்தவரையில் 5 வருடங்கள் சிறைத் தண்டனைக்குரிய ஒரு குற்றம் இதுவாகும்.

அவரது துணிவான பேச்சாற்றல் இனவாத வெள்ளையரிடமிருந்து கடும் வெறுப்பையும் அதே நேரம் தென் ஆபிரிக்காவில் வாழ்கின்ற பெரும்பான்மை கறுப்பின மக்களின் பேராதரவையும் தேடித் தந்தது.

நிறவெறிக் கொள்கைக்கு எதிராக உலகளவில் மிகவும் அதிகமாக அறியப்பட்ட ஒரு தலைவராக இந்த ஆற்றல் அவரை முன்னிறுத்தியது. 1984ம் ஆண்டில் ‘அமைதிக்கான நோபல் பரிசு’ அவருக்கு வழங்கப்பட்ட போது இந்நிலை மேலும் உறுதியடைந்தது.

நிறவெறிமிக்க பாதுகாப்புப் படையினருக்கு உதவியதாக 1985இல் டுடூஸா (Duduza) மனிதர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டு கழுத்திலே ரயர் போடப்பட்டு ரயரில் நெருப்பைப் பற்ற வைக்க கோபத்தோடு இருந்த ஒரு மக்கள் கூட்டம் முற்பட்ட போது, பேராயர் அதனைத் தடுத்து நிறுத்தினார்.

இனவெறி ஒரு பாவம்
.

“ஊதா நிற அங்கியை அணிந்து, உயரத்தில் மிகச் சிறியவராக இருந்ததோடு கடந்த வருடம் நோபல் பரிசைப் பெற்றிருந்த 53 வயது நிரம்பிய பேராயருக்கு ஆபத்து நிகழுமோ என்று ஒரு சில நிமிடங்கள் நாங்கள் பயந்திருந்தோம்” என்று லொஸ் ஏஞ்சலஸ் ரைம்ஸ் (Los Angeles Times) அன்று செய்தி வெளியிட்டிருந்தது.

கறுப்பின அரசியல் தலைவர்கள் அனைவரும் 1990 இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட போது, அரசியல் அரங்கை நெல்சன் மண்டேலாவுக்கும் (Nelson Mandela) ஏனைய அரசியல் தலைவர்களுக்கும் கொடுத்துவிட்டு, அரசியல்வாதிகளின் செயல்களை மதிப்பீடு செய்து விமர்சிப்பவராக பேராயர் மாறினார். மண்டேலா உட்பட அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் கொள்கைகளின் படி வாழத்தவறிய போது, அவர்களை விமர்சிப்பதற்கு அவர் எவ்வகையிலும் தயங்க வில்லை. அவரது கொள்கைகள் எப்போதுமே அவரது இறை நம்பிக்கையிலும், நீதியிலும் உபுண்டு கொள்கையிலும் ஊன்றியிருந்தன.

“இனவெறி ஒரு பாவம். அன்பு, அமைதி, சமத்துவம், நீதி, கருணை போன்ற விழுமியங்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பத்துக்கு அது முற்றிலும் எதிரானது. மனித மாண்புக்கு இது ஒரு பெரும் அவமதிப்பு என்பது மட்டுமன்றி இது ஒரு மனித உரிமை மீறலுமாகும். மனித மாண்பு முழு மனித குலத்துக்கும் இறைவன் கொடுத்த பெரும் கொடையாகும். கடவுளின் சாயலாகவும்  மாதிரியாகவும் விளங்க ஒவ்வொரு மனிதனும் பெற்றிருக்கின்ற கொடை இதுவாகும்.  ஒவ்வொரு மனிதனிலும் இருக்கின்ற கடவுளின் சாயலை இது முற்றிலும் இழிவு படுத்துகிறது. மனித உரிமைகள் மனித மாண்புக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பாகும். இனவாதத்தால் சீர்குலைக்கப்பட்ட முழுமைத் தன்மையை மீட்டெடுக்கும் மனித உரிமைப் போராட்டத்தில் நாம் அனைவரும் பங்கெடுக் கின்றோம். இனவெறி, இனவேற்றுமை, அந்நியரை வெறுத்தல் போன்ற சகிப்புத் தன்மைக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் மனித வாழ்வைப் புனிதமாக்கி அதனை முழுமைப்படுத்த எடுக்கப்படும் போராட்டங்கள் ஆகும்.

1990களின் தொடக்கத்தில் சனநாய வழிமுறைக்குத் திரும்புகின்ற கடினமான பயணத்தைத் தென் ஆபிரிக்கா முன்னெடுத்த காலப்பகுதிகளில் நிகழ்ந்த வன்முறைகளின் போது, எப்படி நிறவெறிக் கொள்கை தென் ஆபிரிக்க கறுப்பின மக்களின் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கியதோ அதைப் போலவே, பாரபட்சமான கொள்கையைக் கொண்டிருந்த வெள்ளை இனத்தவரின் ஆன்மாக்களும் பாதிக்கப்பட்டிருந்தன என்று குணமாக்கல், ஒப்புரவு போன்ற விடயங்களை நோக்கி நாடு நகருவதற்கு உதவுவதில் தனது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த ரூட்டு கூறினார்.

இனவெறி ஒரு பாவம்புதிதாகத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட அதிபர் மண்டேலா ‘உண்மைக்கும் நீதிக்குமான ஆணைக் குழுவின்’ (Truth and Justice Commission) தலைவராகப் பேராயரை 1995 இல் நியமித்தார். பேராயர் ரூட்டுவின் பணிகள் அனைத்துக்கும் சிகரமாக இந்தப் பணி அமைந்தது. நிறவெறிக் காலத்தின் போது இழைக்கப்பட்ட வேதனை மிக்க கொடுமைகளை நேருக்குநேர் உண்மையாக எதிர்கொண்டு முழு நாட்டையும் குணமாக்கலுக்கு இட்டுச்செல்கின்ற ஓர் உன்னதமான முயற்சியாக இது அமைந்தது.

“ஏற்பட்டிருக்கும் காயங்களைத் திறந்து, அவை சீழ்ப்பிடித்துப் போகாவண்ணம் அவற்றைச் சுத்தப்படுத்துவதே இந்த ஆணைக்குழுவின் நோக்கமாகும். அத்துடன் எமது கடந்த காலத்தை எவ்வளவு காத்திரமாக பார்க்க முடியுமோ அவ்வளவுக்கு நாங்கள் பார்த்திருக்கிறோம். அந்தக் கடந்த காலத்தை நாங்கள் மறுதலிக்கவில்லை. எவ்வித அச்சமோ பயமோ இன்றி மிருகத்தின் கண்களை நாங்கள் நேருக்கு நேராக உற்றுப் பார்த்திருக்கிறோம்” என்று பிபிசி ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் பேராயர் ரூட்டு குறிப்பிட்டிருந்தார். ரிஆர்சி (TRC) தனது அமர்வை ஆரம்பித்த முதல் நாளில் பேராயர் பகிரங்கமாக அழுததைக் காணமுடிந்தது. நாடு எப்படிப்பட்ட பாதிப்புகளையெல்லாம் சந்திக்கப் போகின்றது என்ற விடயத்தை மக்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்தத் தருணம் வழிவகுத்தது. அப்படி அழுததையிட்டுத் தான் வருந்துவதாக பின்னர் அவர் கூறியிருந்தார்.

இனவெறி ஒரு பாவம்“முதல் நாள் என்னைக் கட்டுப்படுத்த முடியாது நான் அழுதேன். அதன் பின்னர்  இது நல்லதல்ல, ஏனென்றால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்தாது ஊடகங்கள் என்மேல் தங்கள் கவனத்தைத் திருப்பின. அதன் பின்னர் அழவேண்டும் என்று நான் உணர்ந்த நேரங்களில் எல்லாம் பொது வெளியில் அழாது வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ தான் நான் அழுதேன்.”

 “எமது முதன்மை நோக்கம் பழிவாங்குவதோ அல்லது தண்டிப்பதோ அல்ல. ஆனால் ‘உபுண்டு’ கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, அத்துமீறி இழைக்கப்பட்ட காயங்களைக் குணமாக்கி, சமமற்ற தன்மைகளைச் சீர்ப்படுத்தி, உடைந்து போன ஒரு உறவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதே எமது உண்மையான நோக்கமாகும்.” அரசியல் ரீதியாகத் தாம் இழைத்த குற்றங்களை வெளிப்படை யாகவும் பொதுவெளியிலும் கூற முன்வந்தவர்களுக்கு பொதுமன்னிப்பை இந்த ஆணைக்குழு வழங்கியதுடன் நிறவெறிக் காலத்தில் மனித உரிமை மீறல்களில் உயிர் தப்பியவர்களுக்கான இழப்பீடுகளை வழங்க அப்படிப்பட்டவர்களை ஊக்குவித்தது.

‘ஆணைக்குழுவின் பணி முற்றுப்பெறாமல் இருக்கிறது’ என்று ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பின் அவர் கூறினார். ஆணைக்குழுவில் பெற்றுக்கொண்ட சான்றுகளை ஆதாரமாகக் கொண்டு, 300 விசாரணைகள் மீது வழக்குகளைத் தொடருமாறு அவரும் ஆணைக்குழுவில் இருந்த அவரது சகாக்களும் பரிந்துரை செய்திருந்தனர். ஆனால் அவர்கள் பரிந்துரை செய்தது போல அந்தச் செயற்பாடுகள் நடைபெறவில்லை. நிறவெறிக் காலத்தில் போராட்டத்தின் இருபக்கங்களிலும் குற்றங்களை இழைத்தவர்களுக்கு உத்தியோகப்பற்றற்ற முறையில் ஒரு இரகசியப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது பின்னர் தெரியவந்தது. வழக்குகள் தொடரப்படாத விடயங்கள் தொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்த ரூட்டு, அரசியல் இலாபத்துக்கு மேலாக கொள்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.

இனவெறி ஒரு பாவம்“குற்றங்கள் முழுமையாகப் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும் அல்லது உரிய முறையில் வழக்கு தொடரப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும். இச்செயற்பாடுகள் முன்னெடுக் கப்படாது விட்டால், தென்னாபிரிக்கர்கள், அவர்கள் எந்த நிறத்தை அல்லது சமயத்தைச் சேர்ந்த வர்களாக இருந்தாலும் அவர்களால் பாதிப்பு களிலிருந்து முழுமையாக விடுபட முடியாது” என்று பேராயர் கூறியிருந்தார்.

“மன்னிப்பு என்பது இழைக்கப்பட்ட தவறு தொடர்புபட்ட இரு தரப்பினராலும் முழுமையாக எந்தவொரு தயக்கமும் இன்றி நோக்கப்பட வேண்டும். இழைக்கப்பட்ட பாதிப்புகள் உரிய முறையில் ஈடுசெய்யப்பட வேண்டும்” என்று ரூட்டு மிகக் கவனமாக விளக்கம் கொடுத்தார்.

2010ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7ம் திகதி தனது 79வது வயதில் பொது வாழ்க்கையிலிருந்து அவர் ஓய்வுபெற்றார். தனது வாழ்வின் இறுதிக் கட்டங்களில் கூட, பேராயர் டூட்டு அவர்கள் ஊழல், சட்டவிரோத ஆயுதக் கொள்வனவுகள், அந்நியரை வெறுத்தல், பாலஸ்தீனம், மியான்மார் ரோகிங்யா முஸ்லிம்கள், சட்டத்தைக் கடைப்பிடிக்கும் பண்பு, எச்ஐவி மற்றும் எயிட்ஸ் நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள், பாலின அடையாள வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக அதிகாரத்திலுள்ளவர்க்கு எதிராகத் தனது கருத்தைத் தெரிவிப்பதை எந்தவிதத்திலும் நிறுத்தவில்லை.

“நான் வாயை மூடிக் கொண்டிருப்பது நல்லது என்று சில வேளைகளில் நான் நினைப்பது உண்டு. அப்படி என்னால் செய்ய முடியாது. அப்படிச் செய்யவும் மாட்டேன். மனித உரிமை மீறல்கள் எங்கு நிகழ்ந்தாலும், அல்லது மக்களது சுதந்திரம் எங்கு பறித்தெடுக்கப் படுகின்றதோ அது மியான்மாராக இருந்தாலென்ன திபெத்தாக இருந்தாலென்ன எனது மிகவும் அன்புக்குரிய நண்பரான ரூட்டு அவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் முதல் ஆளாக இருப்பார். உண்மை, நேர்மை, சமத்துவம் என்னும் விழுமியங்களுக்காக அவர் ஓய்வின்றி உழைத்தார். இவ்வாறான விடயங்களில் அவர் எந்த வேறுபாடுகளையும் பார்ப்பதில்லை” என்று மேன்மை தங்கிய தலாய்லாமா தெரிவித்தார்.

நன்றி: tutulegacy.com

Tamil News