நீறுபூத்த நெருப்பாக இனவாதம்-துரைசாமி நடராஜா

ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கு தோள் கொடுக்கும் பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் அச்சமூகம்சார் அரசியல் பிரதிநிதித்துவம் முக்கியமானதாகும் என்பதோடு அரசாங்கத்தின் விசேடமான உதவிகளும் இதில் உள்ளடங்குகின்றன.

இந்த வகையில் மலையக மக்கள் இந்நாட்டில் பின்தங்கிய வாழ்க்கை நிலைமைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில் மேற்கண்ட இரண்டு விடயங்களும் அம்மக்களின் எழுச்சிக்கு அவசியமாகியுள்ளன.இந்த வகையில் மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைமை பெரிதும் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக கருதப்படுகின்றது.இதேவேளை மாகாண சபை முறைமையும் மலையக மக்களின் அபிவிருத்திக்கு உந்துசக்தியாகியுள்ள நிலையில் இவற்றின் இருப்பின் அவசியம் தொடர்பில் புத்திஜீவிகள் தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கையில் சிறுபான்மை மக்கள் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் உள்ளாகி வருகின்றனர்.இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னராயினும் சரி அல்லது அதன் பின்னராயினும் சரி சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கீடுகளுக்கும் சவால்களுக்கும் ஒரு போதும் குறைவிருக்கவில்லை என்பது தெரிந்த விடயமாகும்.இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற சிறுபான்மையினரின் வரிசையில் மலையக மக்கள் அல்லது இந்திய வம்சாவளி மக்கள் எதிர்கொண்ட நெருக்கீடுகள் ஒருபடி அதிகமாகவே இருந்தன இம்மக்களை கசக்கிப் பிழிந்து உழைப்பைச் சுரண்டுவதில் ஆட்சியாளர்களும் முதலாளிகளும் ஆர்வம் செலுத்தினரே தவிர அவர்களின் நலன்களைப் பேணுவதில் கரிசனையை வெளிப்படுத்தவில்லை என்பது யாவரும் அறிந்த கசப்பான உண்மையாகும். இலங்கை சுதந்திரம் பெற்ற கையோடு இந்திய வம்சாவளி மக்களின் பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பன பறிக்கப்பட்டு அவர்கள் சகல துறைகளிலும் நிர்வாணப்படுத்தப்பட்டமை இலங்கையின் வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயமேயாகும்.

இதன் சோகத் தழும்புகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.கல்வி, பொருளாதாரம், இயல்பு வாழ்க்கை, சுகாதாரம், மருத்துவம் என்று பல துறைகளிலும் மலையக மக்கள் பின்தங்கிய குறிகாட்டிகளைக் கொண்டுள்ளமை வருந்தத்தக்க விடயமாகும் எனினும் இவற்றின் அபிவிருத்தி கருதி அரசாங்கம் காத்திரமான பங்களிப்பினை வழங்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.மலையக மக்களை கொச்சைப்படுத்தி, அவர்களுக்கிடையே பிணக்குகளை ஏற்படுத்தி குளிர்காயும் இனவாதக் கும்பல் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.நாட்டின் சமகால நெருக்கீடுகளால் இக்கும்பலின் செயற்பாடுகள் மந்தகதியினை அடைந்துள்ள போதும் இன்னும் ஓய்ந்துவிடவில்லை.நீருபூத்த நெருப்பாக அது இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.மலையக மக்களின் எழுச்சி இனவாதிகளின் கண்களை அடிக்கடி உறுத்திய நிலையில் அதன் வெளிப்பாடாக இம்மக்கள் ஓரங்கட்டப்பட்டனர்.

விகிதாசார தேர்தல் முறைமை

ஒரு சமூகத்தின் தலையெழுத்தை நல்லபடியாக மாற்றியமைப்பதில் ஆக்கப்பூர்வமான அரசியல் பிரதிநிதித்துவம் முக்கிய இடம் பெறுகின்றது.ஆக்கபூர்வமான அரசியல் பிரதிநிதித்துவத்தினால் சமூகத்தின் அபிவிருத்தியை துரிதப்படுத்தவும் மேலோங்கச் செய்யவும் முடியும்.இந்த வகையில் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பொருத்தமான தேர்தல் முறைமை அவசியமாகும்.அதிலும் மலையக மக்கள் போன்ற பின்தங்கிய சமூக மேம்பாட்டிற்கு பொருத்தமான தேர்தல் முறைமை தொடர்பில் அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இலங்கையில் பாராளுமன்ற ஆட்சிமுறை அறிமுகம் செய்யப்பட்ட காலப்பகுதியில் அதாவது 1833 ம் ஆண்டு கோல்புரூக் யாப்பின் கீழ் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வழிமுறைகளாக இனவாரிப் பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்பட்டதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதனிடையே 1931 ம் ஆண்டு டொனமூர் யாப்பின் கீழ் பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறை அல்லது தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது.இம்முறைமையானது1978 ம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பு வரை பின்பற்றப்பட்டு வந்தது.

 பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறை பல சாதக விளைவுகளைக் கொண்டிருந்தபோதும் பாதக விளைவுகளுக்கும் அது உந்துசக்தியாகி இருந்தது.தேர்தல் தொகுதிகளில் சிறுபான்மையோராக வாழும் பிரிவினர் தமக்குரிய பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை இத்தேர்தல் முறைமையினால் ஏற்பட்டது.அத்தோடு ஒரு நாட்டின் சகலவிதமான அரசியல் அபிப்பிராயங்களும் ஆட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் பெறுவதை இயலச் செய்யாமை நிலையும் இதனால் ஏற்பட்டது.

சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பிரதிபலிக்காத நிலையில் அது இம்மக்களின் அபிவிருத்தியையும் கேள்விக்குறியாக்குவதாக இருந்தது. இந்நிலையில் 1978 ம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் ஊடாக விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.இங்கிலாந்தைச் சேர்ந்த தோமஸ் குரே விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை முதலில் அறிமுகம் செய்தவராகக் கருதப்படுகின்றார்.விகிதாசார தேர்தல் முறை சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் ஒரு வரப்பிரசாதமாகக் காணப்படுகின்றது. சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை அரசியல் ரீதியாக உறுதிப்படுத்திக் கொள்வதில் விகிதாசார தேர்தல் முறை பக்கபலமாக இருந்து வருகின்றது.

தொகுதிவாரியாக போதியளவு வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாத ஆனால் தேர்தல் மாவட்ட ரீதியாக கணிசமான வாக்குகளைப் பெறக் கூடிய சிறிய கட்சிகள் குறைந்தளவு எண்ணிக்கையிலாவது தமது பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பக்கூடிய வாய்ப்பு விகிதாசார தேர்தல் முறைமையின் ஊடாகக் காணப்படுகின்றது. அத்தோடு தொகுதிவாரியாக செறிவாக இல்லாத இனங்கள் மாவட்ட ரீதியில் கணிசமான அளவு இருப்பின் தங்களுடைய பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பக்கூடிய நிலை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் விகிதாசார தேர்தல் முறையின் ஊடாக பெரும்பாலும் கூட்டரசாங்கமே அமையும் நிலை ஏற்படும் வாய்ப்புள்ளதென்பதால் இக்கூட்டரசாங்கம் சிறுபான்மை இனத்தின் கட்சியையும் இணைத்தவையாகவே இருக்கும் இதனால் இக்கட்சிகளும் பேரம்பேசி சிறுபான்மையினரின் நலன்களைப் பேணும் வாய்ப்பு உருவாகின்றது என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.எனினும் அண்மைக்காலத்தில் இவையெல்லாம் எந்தளவுக்கு சாத்தியமானது என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.

இனவாதிகளின் மேலெழும்புகை பேரம்பேசும் சக்தியினை  இப்போது கேள்விக்குறியாக்கியுள்ளமையும் தெரிந்ததேயாகும். இந்நிலையில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின்  அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்து அம்மக்களின் அபிவிருத்திக்கு வலுசேர்த்தது என்பதையும் புறந்தள்ளிவிட முடியாது.

தமிழுக்கு சம அந்தஸ்து

இதனிடையே மாகாண சபை முறை மலையக மக்களின் அபிவிருத்திக்கு கை கொடுத்தமை தொடர்பிலும் நாம் இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.1987 ம் ஆண்டு இந்திய  – இலங்கை உடன்படிக்கையின் ஊடாக மாகாண சபை முறை இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகாரப் பரவலாக்கத்துக்கான அடிப்படையாக அரசியலமைப்புக்கு 13 ஆவது திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டு மாகாண சபை முறை ஏற்படுத்தப்பட்டது.தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பலமட்ட ஆட்சிமுறைக் கட்டமைப்பில் மாகாண சபைகள் ஒரு அங்கமாக விளங்குகின்றபோதும் இவை தொடர்பில் பல்வேறு வாத பிரவவாதங்கள் இருந்து வருகின்றன.மாகாண சபைகளுக்கு மத்திய அரசினால் ஒதுக்கப்படுகின்ற நிதி  போதாது.வினைத்திறனற்ற நிர்வாக முறைமை காணப்படுவதோடு மாகாண சபைகளை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது என்றெல்லாம் விமர்சனங்கள் உள்ளன.

இதனிடையே  சக்திமிக்க மாகாண சபை முறைமையொன்று இங்கு அறிமுகப்படுத்தப்படவில்லை.அவற்றுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மிகக் குறைவு.இந்திய மத்திய அரசாங்கத்தினை விட அதிகாரங்களைக் கொண்ட மத்திய அரசாங்கமொன்று இலங்கையில் உருவாகியுள்ளது என்று கலாநிதி ரொஹான் எதிரிசிங்க தெரிவிக்கின்றார்.

இதேவேளை மாகாண சபை நிறுவன முறைமை பலம் பொருந்தியதாக காணப்படாத ஒரு சூழ்நிலையில் அதற்கு மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறாமையின் காரணமாக அது பலவீனமடைகின்றது.மாகாண சபை முறைமை பற்றி புதிதாக சிந்திக்கப்பட வேண்டுமென்பதே இவ்வனைத்து விடயங்களில் இருந்தும் தெளிவாகின்றது என்று பேராசிரியர் ஜயதேவ உயங்கொட தெரிவிக்கின்றார். எவ்வாறெனினும் மலையக மக்களின் அபிவிருத்திக்கு மாகாண சபைகள் உந்துசக்தியாக அமைந்ததென்றால் மிகையாகாது.

மலையக சமூகத்தின் அபிவிருத்தியில் கல்வியின் வகிபாகம் தொடர்பில் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.சமூக மாற்றத்திற்கு கல்வியே அடிப்படை என்பது பலரும் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்தாகும்.இந்நிலையில் மாகாண சபை முறையின் ஊடாக  இலங்கையின் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ஏற்படுத்தப்பட்ட தமிழ்க் கல்வி அமைச்சு மலையக கல்வி அபிவிருத்திக்கு காத்திரமான பங்காற்றியது.

பாடசாலை மேம்பாடு, ஆசிரியர் நியமனங்கள், கட்டுமான வசதிகள், விஞ்ஞான தொழில்நுட்ப மேம்பாடு என்று பல வழிகளிலும் தமிழ்க்கல்வி அமைச்சின் பங்களிப்பு இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.அத்தோடு சுகாதாரம், உட்கட்டமைப்பு , விளையாட்டு போன்றவற்றின் அபிவிருத்திக்கும் மாகாண சபைகள் வாய்ப்பளித்தன.இவற்றுடன் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களின் அபிவிருத்திக்கும் மாகாண சபைகள் பங்காற்றி இருந்தன.

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சாகித்திய விழாக்கள் இடம்பெற்றன. இவ்விழாக்களில் மலையகக் கலைகள் அரங்கேற்றப்பட்டதுடன் கலைகளின் உயிர் வாழ்விற்கு இது அடித்தளமானது.மேலும் சாகித்திய விழாக்களில் பல்துறை சார்ந்த கலைஞர்களும் கௌரவிக்கப்பட்ட நிலையில் இது அவர்களின் சேவைக்கு ஒரு அங்கீகாரத்தையும், தொடர்ந்தும் தமது சேவையை முன்னெடுத்துச் செல்ல ஒரு உந்துதலையும் அளித்திருந்தது.இவ்வாறு பல வழிகளிலும் மாகாண சபைகள் எழுச்சிக்கு அடித்தளமிட்டன.

பொதுவாக நோக்குமிடத்து மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்கு விகிதாசார தேர்தல் முறையும் மாகாண சபைகளும் முதுகெலும்பாக இருந்திருக்கின்றன. இவற்றின் இருப்பு மற்றும் செயற்பாடுகள் மலையக சமூகத்தின் இருப்பிற்கு வலுசேர்த்துள்ளன.இந்நிலையில்  தற்போது புதிய அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பேசப்பட்டு வருகின்ற நிலையில் தேர்தல் முறை, மாகாண சபை முறை என்பன தொடர்பில் மலையக அரசியல்வாதிகள் ஆழமான பார்வையினை செலுத்த வேண்டிய ஒரு தேவை மேலெழுந்துள்ளது.எல்லாம் தெரியும் என்ற மமதையில் இருந்து விடாது இவ்விடயம் குறித்து கற்றறிவாளர்களின் பங்களிப்பை அரசியல்வாதிகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.