உலக உணவு நாள்-  இனவாத ரீதியில் புறக்கணிக்கப்படும் தமிழர்களின் விவசாய உற்பத்திகள் -மட்டு.நகரான்

உலக உணவு  நாள் -உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒக்டோபர் 16ம் திகதி உலக உணவு  நாளாக  கடைபிடிக்கப்படுகிறது. 

கடந்த 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.

உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. இன்றைய நிலையில் பசியால் யாரும் வாடக் கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உணவு தொடர்பான பிரச்னையில் மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உலக அளவில் வறுமையை ஒழிப்பதும் இந்த நாளின்  முக்கிய நோக்கமாக இருக்கிறது. உணவில் மாவு, புரதம், தாது, கொழுப்பு, உயிர் சத்து (விட்டமின்) போன்றவை கலந்து இருப்பதே சரிவிகித உணவாகும். உயிர் சத்தும் தாது உப்புகளும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில் இலங்கையில் மக்கள் எதிர்கொள்ளும் உணவு பிசரச்சினைகளை நோக்கும் போது,இலங்கையினைப்பொறுத்த வரையில் இந்த நாட்டில் காணப்படும் இனவாதப்போக்கும் தமிழர்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நோக்கும் பார்வையுமே இந்த நாட்டில் வறுமையானது உச்ச நிலைக்கு சென்றுள்ளது..

அனைத்துவளங்களும் நிரம்பிய ஒரு நாடு எந்தவித வளங்களும் அற்ற நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றால் அதற்கான காரணத்தினை யாரும் கூறி அறியவேண்டியதில்லை. இலங்கையினைப்பொறுத்த வரையில் உலக உணவு  நாள் என்பதை வெறும் ஒரு தினமாக அனுஸ்டிக்கும் நிலையே காணப்படுகின்றது. இதன் உண்மையான தார்ப்பரியத்தினை உணர்வதனை மறுக்கும் நிலையே காணப்படுகின்றது.

வடக்கு கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்தவரையில் கிழக்கு மாகாணமானது உணவு உற்பத்தியில் செல்வாக்கு செலுத்தும் வளங்களைக்கொண்ட மாகாணமாக காணப்படுகின்றபோதிலும் அங்கு முன்னெடுக்கப்படும் உணவு உற்பத்திகளுக்கு சிங்கள பேரிவனவாத அரசுகள் என்றுமே முக்கியத்துவமளிக்காத நிலைமையே காணப்படுகின்றது.

குறிப்பாக இலங்கையின் மூன்றாவது விவசாய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுவதுடன் நான்காவது மாவட்டமாக அம்பாறை மாவட்டம் காணப்படுகின்றது.குருநாகல் முதலாவது இடத்திலும் பொலநறுவை இரண்டாவது இடத்திலும் காணப்படுகின்றது.ஆனால் முதல் மற்றும் இரண்டாவது நிலையில் உள்ள மாவட்டங்களுக்கு அரசாங்கம் வழங்கும் திட்டங்கள் விசேடமாக காணப்படும் அதேநேரம் மூன்றாவது நான்காவது நிலையில் உள்ள மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கு வழங்கும் நிலையென்பது மிகவும் கவலைக்குரியதாகவேயுள்ளது.

கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் இலங்கையின் அரிசி தேவையில் 25வீதத்திற்கு அதிகமான தேவையினை பூர்த்திசெய்யும் பகுதியாக காணப்படும் அதேநேரம் மேட்டுநில உற்பத்திகளை பெருமளவில் வழங்கும் பகுதியாகவும் காணப்படுகின்றது.ஆனால் கடந்த பல வருடத்தில் விவசாயத்துறையினை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் எந்தவிதமான காத்திரமான நடவடிக்கையினையும் எடுக்கவில்லையென்பது அநேக விவசாயிகளின் கவலையாகவேயிருந்துவருகின்றது.

விவசாயம் மற்றும் மேட்டு நில செய்கைகளில் கிழக்கு மாகாணத்தில் உள்ள 60வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுவருகின்றபோதிலும் அதனை பாரியளவில் முன்னெடுத்து ஏற்றுமதிசெய்யமுடியாத அல்லது அவ்வாறானவர்களுக்கு ஊக்கமளிப்பு செய்யப்படாத நிலையேயிருந்துவருகின்றது.

மீன்பிடியும் விவசாயமும் கிழக்கு மாகாணத்தின் இரு கண்களாகவுள்ள நிலையில் இரண்டு துறைகளும் அரசாங்கத்தின் பாராமுகமாகவேயிருந்துவருகின்றது.முறையான வசதிகள் மற்றும் தேவைப்பாடுகளை அரசாங்கம் கிழக்கில் வழங்குமானால் கிழக்கு மாகாணத்தின் பொருளாதார நிலைமை கட்டியெழுப்பப்படும் என்பதுடன் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் நிலையேற்படும்.

கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் இதனால் நன்மையடைவார்கள் என்ற காரணத்தினாலேயே எந்தவித செயற்றிட்டத்தினையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

மகாவலி அபிவிருத்தி வலயம் என்னும் திட்டத்தின்; கீழ் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையினை கடந்தகால அரசுகள் முன்னெடுத்தபோதிலும் அந்த திட்டம் ஊடாக கிழக்கில் காணிகளை அபகரிக்கவும் சிங்கள குடியேற்றங்களை முன்னெடுக்கவுமே பயன்படுத்துகின்றதே தவிர அந்த திட்டத்தின் ஊடாக கிழக்கின் விவசாயத்துறையினை மேம்படுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

குறிப்பாக மகாவலி கங்கையின் முடிவிடமாகவுள்ள வெருகல் ஆற்றின் படுக்கையினை நம்பி பெருமளவான தமிழர்கள் விவசாய மற்றும் மேட்டு நில பயிர்ச்செய்கையினை முன்னெடுக்கின்றபோதிலும் அவர்களுக்கான எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யாத நிலையிலேயே சிங்கள அரசுகள் செயற்பட்டுவருகின்றது.இதன்காரணமாக பெரும்பாலானவர்கள் தமது விவசாய நடவடிக்கைகளை கைவிட்டு வேறு தொழில்களுக்கு சென்றுள்ள நிலைமையும் உள்ளது.

இன்று இலங்கையானது பாரியளவிலான அரிசி நெருக்கடியை எதிர்நோக்கும் அதேவேளை வெளிநாடுகளிலிலிருந்து அரிசியினை இறக்குமதிசெய்யும் முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்களுக்கு மத்தியிலும் டொலர்களைக்கொண்டு அரிசியை இறக்குமதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ள அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்வதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் தங்களது சிறுபோக அறுவடை நெல்லை விற்பனை செய்யமுடியாத நிலையில் தேக்கிவைத்துள்ளனர்.மிகவும் குறைந்த விலையில் நெல்லை விற்பனைசெய்து நஸ்டமடையாமல் இருக்க நெல்லை விற்பனை செய்யாமல் வைத்துள்ளனர்.

அரசாங்கமும் தமிழ்பேசும் விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்வதற்கு தயாராகயில்லாத நிலையில் விவசாயிகள் மீண்டும் தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பது கேள்விக்குறியானதாகவேயிருந்துவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்த வரையில் இரண்டரை இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல் காணிகள் உள்ளபோதிலும் வெறும் ஒரு இலட்சத்திற்குட்பட்ட காணிகளிலேயே விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை காணமுடிகின்றது.

இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் உற்பத்திசெய்யப்பட்ட சோளம் மற்றும் மரமுந்திரிகை செய்கைகள் மிகவும் குறைந்தளவிலேயே உற்பத்திசெய்யப்படும் நிலைமை காணப்படுகின்றது.இதற்கு காரணம் சிங்கள அரசுகள் தமிழ்பேசும் மக்களின் விவசாயத்துறையினையும் மேட்டு நிலப்பயிர்ச்செய்கையினையும் புறக்கணிப்பதேயாகும்.

எதிர்காலத்தில் தமிழர்கள் தங்களது பகுதிகளை தாங்களே ஆளும் நிலையேற்படும்போது தான் கிழக்கு மாகாணத்தின் உற்பத்தி துறையானது கட்டியெழுப்பக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.

அவ்வாறான ஒரு நிலையேற்பட்டால் இந்த நாட்டின் தன்னிறைவினை பூர்த்திசெய்வதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதிசெய்யும் சூழ்நிலையினை ஏற்படுத்தமுடியும்.அதுமட்டுமன்றி கிழக்கின் பொருளாதார நிலைமையினை உச்சத்திற்கு கொண்டுசெல்லமுடியும்.

இந்த நாட்டில் இன்னும் இனவாத சிந்தனையும் தமிழர்களின் பொருளாதாரத்தினை முடக்குவதாக எண்ணி இந்த நாட்டின் வளங்களை பயன்படுத்திபெறப்படும் உற்பத்திகள் முடக்கப்படும் நிலை தொடருமானால் இந்த நாட்டினை வேறு நாடுகள் ஆட்சிசெய்யும் நிலைமையே ஏற்படும்.

இன்றைய நிலையில் கிழக்கில் உணவு உற்பத்திகள் முறையாக முன்னெடுக்கப்படுமனால் எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதார ரீதியான தளம்பலை குறைப்பதற்கான அடித்தளமாகவும் அது அமையமுடியும்.

உணவு என்பது வெறுமனே மனிதனுக்கு மட்டும் ஊட்டசத்து அல்ல.ஒரு நாட்டிற்குமான ஊட்டச்சத்து என்பதை சிங்கள பேரிவானவாத நோக்குக்கொண்ட இந்த நாட்டின் அரசுகளும் பௌத்த பேரினவாதிகளும் உணர்ந்துகொள்ளவேண்டும்.