சர்ச்சைக்குரிய கடற்பகுதிகளில் சீனாவின் பிரசன்னம்- குவாட் நாடுகள் கவலை

ஆசியாவின் கடற்பகுதிகள் இராணுவ மயப்பபடுத்தப்படுவது குறித்து குவாட் நாடுகள் இன்று வெள்ளிக்கிழமை கவலை வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

சர்ச்சைக்குரிய கடற்பகுதிகளில் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்கும் நிலையில் குவாட் அமைப்பின் இக்கரிசனை வெளியாகியுள்ளது.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற குவாட் மாநாட்டில் அந்நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

அதன்பின் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில், கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்கள் உட்பட கடற்பகுதிகளில் கடல்போக்குவரத்து விதிகள் அடிப்படையிலான ஒழுங்கின் சவால்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச சட்டத்தை பின்பற்றிநடப்பது முக்கியமானதாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடல்பகுதிகளில் ஒருதலைப்பட்சிமான நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் சீனாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், சீனாவை சுற்றிவளைப்பதற்காக குவாட்டை பயன்படுத்துவதாக அமெரிக்கா மீது சீனா குற்றம் சுமத்துகிறது.

மேற்படி மாநாட்டின் பின்னர், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமசா ஹயாஷி கருத்துத் தெரிவிக்கையில், குவாட் குறித்து சீனா அச்சம் கொள்வதற்கு காரணம் இல்லை என்றார்.