ஈழப் போராட்ட ஆதரவு திரைப்படங்களை உருவாக்குவதில் தான் சந்தித்த சவால்களை விபரிக்கின்றார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் | நேர்காணல்

சவால்கள் ஈழப் போராட்ட ஆதரவு திரைப்படங்களை உருவாக்குவதில் தான் சந்தித்த சவால்களை விபரிக்கின்றார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் | நேர்காணல்

ஈழ ஆதரவு திரைப்படம் சந்தித்த சவால்கள்

ஈழப் போராட்ட நியாயங்களையும் சிங்கள அடக்குமுறையாளர்களின் அநியாயங்களையும் வெளிக்கொண்டு வந்தவருமான துணிச்சல் மிகுந்த தமிழக திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி

சந்தித்த சவால்கள்

கேள்வி:
நீங்கள் திரைத்துறை இயக்குநராகப் பணியாற்றியிருந்தீர்கள். உங்களின் திரைப் பயணம் எவ்வாறிருந்தது என்பதைக் கூறமுடியுமா?

பதில்:
18 ஆண்டுகளாக தினமணி நாளிதளில் நிருபராக சேர்ந்து மூத்த துணை ஆசிரியராக விருப்ப ஓய்வு பெற்று 1998 வெளியே வந்தேன். தினமணியில் இருந்த போது தான் ஈழப்பிரச்சினையை உன்னிப்பாகக் கவனிக்க முடிந்தது. அப்போது தான் இந்திய அமைதிப்படை இலங்கை வந்திருந்தது. அந்த நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக கிருஸ்ணன் அங்கு வந்திருந்தார். அது தொடர்பான செய்திகளை நாங்கள் வெளியிட்டு வந்தோம்.

ஈழத்தில் நடந்தது தீவிரவாத, பயங்கரவாதப் போராட்டம் அல்ல என்றும் அது ஒரு விடுதலைப் போராட்டம் என்றும் செய்திகளின் வாயிலாக அறியும் வாய்ப்பு தினமணியிலிருந்து தான் எனக்குக் கிடைத்தது. 1998இற்கு முன்னர் ஒரு படம் இயக்கியிருந்தேன். அதற்குப் பின்னர் ஈழப் போராட்டத்தை வைத்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. முதலில் ஒரு சரியான திரைக்கதையுடன் இயக்குநர் பாரதிராஜாவைத் தான் சந்தித்தேன். அவர் எனக்கு நெருக்கமானவர். அவரிடம் இந்தக் கதையை வைத்துப் திரைப்படம் எடுத்தால், அந்தப்  போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதாக அமையும் என்று சொன்னேன். 1991இல் சிறிபெரும்புத்தூரில் ராஜீவ் காந்தி சம்பவம் நடைபெறுகின்றது.

இதனால் தமிழ்நாட்டில் ஒரு சிறிய மனக்குழப்பம் இருந்தது. அதை தவிடு பொடியாக்குவதற்காக நாம் இந்தப் படத்தைச் செய்யலாம் என்று சொன்னேன். அவரும் இதை ஏற்றுக் கொண்டு, ஒன்றரை ஆண்டுகள் விவாதித்தோம்.  ஆனால் சில காரணங்களினால் அவரால் அந்தப் படத்தை எடுக்க முடியாமல் போய்விட்டது. அந்தக் கதையை எடுப்பதற்கு எனக்குப் பின்னணி கிடையாது. எனவே வேறொரு கதையைத் தெரிவு செய்து, அதைச் செய்யலாம் என எடுத்ததுதான் காற்றுக்கென்ன வேலி. எண்ணிக்கையின்படி அது என்னுடைய இரண்டாவது படம்.

காற்றுக்கென்ன வேலி திரைப்படம் விடுதலைப்புலிகளுக்கு சார்பானது என்று சொல்லி அரசாங்கம் தடை செய்தது உலகிற்கே தெரியும். நீண்ட நெடிய போராட்டத்தின் பின்னர் நாங்கள் இதில் வெற்றி பெற்றோம். எந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரினார்களோ அதில் ஒரு சின்ன வெட்டுக்கூட இல்லாமல் வெளியிடுவதற்கு நீதிமன்றம் அனுமதித்தது.

இதன் பின்னர் வேறு இரு படங்கள் செய்திருந்தாலும், 2015இல் எடுத்த உச்சிதனை முகர்ந்தால் எனது மனதிற்கு உகந்த ஒரு திரைப்படம். இனப்படுகொலையின் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை சொல்வதற்காக அந்தப் படத்தை எடுத்தேன். நண்பர் சத்தியராஜ், இசையமைப்பாளர் இமான் போன்றோர் தங்களால் இயன்றளவு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். அதுவும் சிறிய தணிக்கைப் பிரச்சினைகளைத் தாண்டி வெளியாகியது.

அதன் பின்னர் 5 ஆண்டுகள் கழித்து உருவாக்கியது தான் கடற்குதிரைகள்.  தமிழ் சினிமாவில் முதன்முறையாக முள்வேலி முகாம் என்பதை தத்துருபமாக சித்தரித்திருந்தோம். சென்னையில் முள்வேலி முகாமை எட்டரை ஏக்கர் நிலத்தில், 400 கூடாரங்களைப் போட்டு, உருவாக்கியிருந்தோம். இந்த முள்வேலி முகாமிலிருந்து கிரிசாந்தி குமாரசாமி எவ்வாறு தப்பிக்கிறார். அவளைத் தப்பிக்க வைப்பதற்காக அவளுடைய தாய் என்ன தியாகம் செய்கிறார். அங்கிருந்து தப்பித்து தமிழ்நாட்டிற்கு வந்த கிரிசாந்தி, வழிதவறிப் பொய் அணுஉலைக்கு எதிராகப் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்ற இடிந்தகரைக்கு போய் சேர்வதும், பின்னர் அவள் தன்னை அங்கு இணைத்துக் கொள்வதும் என்று கடற்குதிரைகள் கதை செல்கிறது.

சந்தித்த சவால்கள்இவை மூன்றையும்விட என்னுடைய முதல் படமே பிரச்சினைக்குரிய படம் தான். சாராய ஆலை அதிபரை எதிர்த்து மக்கள் போராடுவது போன்ற கதையே அந்தப் படம். ஈழப் பிரச்சினை தொடர்பான இந்த 3 படங்களும் எனது மனதிற்கு உகந்தவையாக இருந்தன.

தமிழீழத்தின் மாமனிதனாகத் திகழும், பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய பிரபாகரன் அவர்களிடம் கொடுத்த வாக்குறுதியின்படி இன்றுவரை தொடர்ந்து ஈழத்திற்கான படங்களை உருவாக்கி உலகறியச் செய்துள்ளேன். அவருக்குக் கொடுத்த வாக்குறுதியை என்னால் மீற முடியாது. காற்றுக்கென்ன வேலி திரைப்படத்திற்கு முன்னர் பிரபாகரன் அவர்களுடன் எனக்குத் தொடர்பு இல்லை. இந்தத் திரைப்படம் தான் என்னை ஈழத்திற்கு வரவைத்தது. அவர் என்னிடம் கேட்ட வார்த்தைகள், நான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் மனதில் இருக்கின்றது. அந்த வகையில்தான் நான் இயங்கிக் கொண்டிருக்கின்றேன்.

கேள்வி:
காற்றுக்கென்ன வேலி திரைப்படத்தை நீங்கள் வெளியிட்ட போது ஒரு சவாலைச் சந்தித்தது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டுப் புறச்சூழல் எவ்வாறிருந்தது? அது தடை செய்ய வேண்டிய ஒரு நிலையை ஏன் எட்டியது?

பதில்:
இந்தப் படம் வெளியிடப்பட்ட போது கடும் பிரச்சினையாக இருந்த விடயம் பற்றி எனது திரையுலக நண்பர்கள் வெளியிட்ட கருத்து ஒன்றுதான். சிறிபெரும்புதூரில ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் நடைபெற்ற 9 ஆண்டுகளில் காற்றுக்கென்ன வேலி படம் 2000ஆம் தணிக்கைக்குப் போகிறது. இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

 தணிக்கைக் குழுவினர் 5 காரணங்களைக்கூறி மறுத்தார்கள். முதல் காரணம் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் போன்றதொரு இயக்கத்தைப் போற்றுவதாக படம் அமைந்துள்ளது. விடுதலைப்புலிகளை வைத்தே படம் தயாரிக்கப்பட்டது என்பது தான் அவர்களுடைய வாதம். இரண்டாவது கதாநாயகிக்கு மணிமேகலை என்று பெயர் வைத்தது தவறு.  மூன்றாவது குற்றச்சாட்டு, ஒரு பெண் தீவிரவாதிக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவமனையை மகாத்மா காந்தி மருத்துவமனை என்று காட்டுவது மிகமிகக் கொடூரமான சிந்தனை. இவையே அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகள்.  நாலாவது சயனைட் கலாச்சாரம். மணிமேகலைக்கு காவலுக்கு வரும் ஒருவன் காவல்துறையிடம் சிக்க நேரிடும் போது சயனைட் அருந்தி மரணிக்கிறான். இதை தணிக்கைக்குழு சயனைட் என்பது விடுதலைப்புலிகள் கலாச்சாரம் என்று கூறியது. ஐந்தாவது குற்றச்சாட்டு, ஒரு சிங்கள இராணுவம் தமிழ் ஆசிரியையை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதாக சித்தரித்துள்ளோம். இது நட்புடன் இருக்கும் இரு நாடுகளுக்கிடையிலான உறவை கடுமையாகப் பாதிக்கும். இந்த அடிப்படையிலேயே படத்தைத் தடை செய்கிறார்கள்.

கதையின்படி வல்வெட்டித்துறையில் காயப்படும் ஒரு போராளியைக் காப்பாற்ற வேண்டும் என்று தலைமை விரும்புகிறது. எனவே அவளுடன் இரண்டு போராளிகளையும் அனுப்பி, தமிழ்நாடு வந்து சேர்கிறார்கள். அவர்கள் வந்து சேரும் மருத்துவமனை நாகபட்டினத்திலே மகாத்மா காந்தி மருத்துவ மையம். அதை நடத்திக் கொண்டிருக்கின்ற மருத்துவரின் பெயர் சுபாஸ் சந்திரபோஸ். அவருடைய அப்பா ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. சிகிச்சையின் போது மருத்துவருக்கும் அவளுக்கும் ஏற்படுகின்ற ஒரு அன்புப் பிணைப்பு பற்றி கதை போகிறது. தமிழ்நாடு காவல்துறை அவளைத் தேடுகிறது. அவளை நெருங்குகிறது என்று தெரிந்தவுடன், அவளை அந்த மருத்துவர் எப்படிப் பாதுகாப்பாக ஈழத்திற்கு அனுப்புகிறார் என்பதுடன் கதை முடிவடைகிறது.

சந்தித்த சவால்கள்நான் இப்போதும் சொல்கிறேன். இனப் படுகொலை நடைபெறுவதை தமிழ் நாட்டால் மட்டுமே தடுத்திருக்க முடியும். வேறு யாராலும் தடுத்திருக்க முடியாது. தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக நடுத்தெருவில் வந்து நின்றிருந்தால் இனப்படுகொலையை தடுத்திருக்க முடியும். வெட்கத்துடன் சொல்கிறேன். தமிழர்களின் இயல்பான கோழைத்தனம். விடுதலைப் புலிகள் பல இலட்சம் மக்களுக்காகப் போராடும் போது சில ஆயிரம் போராளிகள் தான் அதில் இருந்தார்கள். அதனால் எல்லா மக்களும் விடுதலையுடன் சம்பந்தப்படவில்லை என்று சொல்ல முடியாது.

இந்த மக்கள் ஆதரித்ததால் தான் விடுதலைப் புலிகள் இயக்கம் 25, 30 ஆண்டுகள் வலுவாக இருந்தது. அதேபோலத்தான் தமிழ்நாடும். மனப்பூர்வமான ஆதரவு என்பது என்றுமே நீடிக்கிறது. உண்மையான கதாநாயகன் பிரபாகரன் தான். சந்தேகமே கிடையாது. எந்த ஆட்சேபனையும் இல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அத்தனை பேரும் ஒட்டு மொத்தமாக ஏற்றுக் கொள்கின்ற பெயர் பிரபாகரன் என்கின்ற பெயர்தான். அவன்தான் அடிப்படையில் Hero. ஆனால் நடுத்தெருவில் வந்து போராடுவதற்கு அஞ்சுகிற மனோபாவம், அரசிற்கு அஞ்சுகிற மனோபாவம் இனப்படுகொலை சமயத்திலும் இருந்தது. காற்றுக்கென்ன வேலி பிரச்சினைக்கு உள்ளான போதும் இருந்தது.

எங்களுக்கு இயக்குநர் சங்கம் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது. நான் எல்லாவற்றிலும் உறுப்பினராக இருக்கின்றேன். எனது சகோதரர் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் இந்தப் படத்திற்கு தயாரிப்பாளர்கள் தயங்கும் போது, 120 வணிகர்களைச் சேர்த்து அந்தப் படத்தைத் தயாரிக்கிறோம். இளையராஜாவிடம் பேசும் போது 16 நாட்களில் படப்பிடிப்பு நடத்துவது சரியாக இருக்காது என்றார்.

சந்தித்த சவால்கள்இந்தப் படம் வரும் போது தமிழ்த் திரைப்படத்துறை என்னோடு இருந்திருக்க வேண்டும். ஆனால் என்னோடு இல்லை. பத்திரிகைகளில் விளம்பரம் தேடுவதற்காக எல்.ரீ.ரீ.ஈ படத்தை தடை செய்து விட்டார்கள் என்று எல்லாப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டன. எல்.ரீ.ரீ.ஈ க்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அவர்களின் கதையை எனது திரைப்படம் எடுத்துச் சொல்லவில்லை என்று காலவரையறையற்ற உண்ணா விரதத்தை தமிழ்த் திரைப்படத்துறை வளாகத்திலேயே நான் தொடங்கினேன்.  உண்ணாவிரதம் தொடங்கி 3ஆம் நாள் இரவு தெலுங்குத் திரைப்பட இயக்குநர் தாசரி நாராயணராவ் அவர்கள் என்னை வந்து பார்த்தார். அவர் நக்சலைட்டை வைத்து படங்கள் தயாரித்திருந்தார். அவர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் திரைப்படத்துறையின் தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்தார். அவர் வந்து பார்த்துச் சென்ற செய்தி மறுநாள் பரவியதும், தமிழ்த் திரைப்பட சங்க உறுப்பினர்கள் அணிவகுத்து வந்தார்கள். பாரதிராஜா கடுமையாக போராடினார்.

சட்டத்துறையிலும் போராடினோம். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவரான, மூத்த வழக்கறிஞர் கிருஸ்ணமணியிடம் பேசினோம்.  அவர் படத்தைப் பார்த்துவிட்டு, நான் இந்தப் படத்திற்கு நான் சான்றிதழ் வாங்கித் தருகிறேன் என்றார். பணம் எதுவும் வாங்கவில்லை. நீதியரசர் ரவிராஜ பாண்டியனிடமிருந்து வழக்கு வந்தது.  அவர் மிகவும் நேர்மையான, தமிழ் உணர்வுள்ள, எளிமையான  நீதிபதி. எல்லோருமே தங்கள் கருத்தை அவரிடம் பதிவு செய்யலாம். அவர் சொன்னார் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் படம் பார்க்கவுள்ளோம். இரு தரப்பினரும் வருகை தரக்கூடாது என்றார். இருதரப்பு என்னும் போது, நானும், மத்திய அரசாங்கத்தின் வழக்கறிஞர்களும்.

மணிமேகலை என்ற பெயரை அவர்கள் ஏன் விரும்பவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. தமிழீழத்தில் யாராவது போராளிகள் இருந்தார்களா? அதனால் தான் அதை விரும்பவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை. மணிமேகலை என்னும் பெயர் வந்த ஆதாரங்கள் பலவற்றை சமர்ப்பித்தோம். தமிழ்நாட்டில் இவ்வளவு பெயர்கள் மணிமேகலை என்று உள்ளது என்பதை உறுதிப்படுத்தினோம். இப்படியாக பல தடைகளைத் தாண்டியே இந்தப் படம் வெளிவந்தது.

இந்தப் படம் வெளிவருவதற்கு உழைத்த 3பேரைச் சொல்ல வேண்டும். தணிக்கைக் குழுவில் இருந்த இந்துமதி. நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர். அவர் சொன்னார் பல ஆண்டுகளின் பின்னர் நான் நல்ல ஒரு படம் பார்த்தேன் என்று சொன்னார். தணிக்கைக்குழு உறுப்பினரான பத்திரிகையாளர் சுதாங்கன். அவர் தற்போது மறைந்து விட்டார். அவர் காற்றுக்கென்ன வேலி படத்திற்காக தணிக்கைக் குழுவிலிருந்து வெளியேறினார். எங்களுக்கு சாதகமாக வழக்கு வந்தது. சான்றிதழும் கிடைத்தது. 3 இடங்களில் நாங்களே தணிக்கை செய்தோம். ஒரு வசனம், இரண்டு காட்சிகள். இவற்றை செய்து 2001 தீபாவளிக்கு பெரிய படங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு படம் வெளிவந்தது. இது என்னால் மறக்க முடியாத ஒரு திரைப்படம்.

கேள்வி:
மறைந்த நீதியரசர் ரவிராஜ பாண்டியன் பற்றி கூறுங்கள்?

சந்தித்த சவால்கள்பதில்:
தீர்ப்பு கொடுத்த பின்னர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ஒரு நண்பர்  மா. ராஜேந்திரன் அவர்கள் சொன்னார்  தீர்ப்பு கொடுப்பதற்கு முன்பு மணிமேகலை, சிலப்பதிகாரம் பற்றிய விபரத் தொகுப்பு ஒன்றை பல்கலைக்கழகத்தில் கேட்டு வாங்கினாராம் ரவிராஜ பாண்டியன். நீதிபதி பதவியிலிருந்து எனக்கு சாதகமாக படத்தை வெளியிட ஒழுங்கு செய்தது என்னால் மறக்க முடியாதது.

தேசியத் தலைவர் என்னை சந்தித்து காற்றுக்கென்ன வேலி படத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு தோன்றியது?இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தையும் நீங்கள் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரை நான் சந்தித்தது எனக்குக் கிடைத்த ஒரு விருதாகவே கருதுகிறேன்.

Tamil News