தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொலையா?: மீண்டும் உடற்கூறாய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு

மீண்டும் உடற்கூறாய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் உயிரிழப்பில் மறு உடற்கூறாய்வு தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் சக மீனவர்களுடன் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கிட்டத்தட்ட ஐந்து நாள் போராட்டத்திற்குப் பிறகு மீனவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய கணவன் இலங்கைப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளார். எனவே அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த வழக்கில் மீனவர் ராஜ்கிரணின் உடலை மீண்டும் உடற்கூறாய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. “துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிரிழந்திருந்தால் அதனை சும்மா விட முடியாது” எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவினை அடுத்து மீனவர் ராஜ்கிரணின் உடல் மறு பிரேதப் பரிசோதனைக்காகத் தோண்டியெடுக்கப்படவுள்ளது.