Home செய்திகள் வவுனியா தரணிக்குளத்தில் காணியினை மீட்டுத் தருமாறு கோரி பொதுமக்கள் போராட்டம்

வவுனியா தரணிக்குளத்தில் காணியினை மீட்டுத் தருமாறு கோரி பொதுமக்கள் போராட்டம்

பொதுமக்கள் போராட்டம்

பொதுமக்கள் போராட்டம்: வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தரணிக்குளம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2001ம் ஆண்டு தரணிக்குளம் பகுதியில் 1/2 ஏக்கர் காணி வீதம் வழங்கப்பட்டு 250 குடும்பத்தினர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். அதன் பின்னர் அப்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக 2003ம் ஆண்டு தரணிக்குளம் பிற்பகுதியில் காடாக காணப்பட்ட பகுதியை வெட்டி விவசாயம் மேற்கொண்டி ருந்ததுடன், தற்போது 612 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் 2014 ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டத்தின் கீழ் பேராறு, நீர் வழங்கல் வடிகாலமைப்பு திட்டத்தில் உள்வாக்கப்படும் காணிகளிற்குப் பதிலாக முதலியார்குளத்தில் 15 ஏக்கர் அரச காணியினையும், பத்தினியார் மகிழங்குளத்தில் 120 ஏக்கர் அரச காணியினையும், கற்குளம் கிராமத்தில் 40 ஏக்கர் அரச காணியினையும் நெற் செய்கைக்காக வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுவினால் அனுமதி வழங்கப்பட்டு பேராறு நீர்த்தேக்கமும் நிர்மானிக்கப்பட்டது.

கற்குளம் கிராமத்தில் 40 ஏக்கர் அரச காணியினை வழங்காது அவர்களை தரணிக்குளம் புதியநகர் பகுதியில் மேட்டுக்காணியில் குடியேற்றுவதற்கு பிரதேச செயலகத்தினர் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக அங்கு வசிக்கும் 612 குடும்பத்தினர் பாதிப்படைந்துள்ளனர். அரசாங்கத்தினால் பேராறு நீர்த்தேக்கத்தில் கீழ் வசித்தவர்களுக்கு நெற் செய்கைக்கான காணியே வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ள போதிலும் தற்போது 612 குடும்பத்தினர் வசிக்கும் மேட்டுக்காணியினை பிரதேச செயலகத்தினர் வழங்க முன்வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தரணிக்குளம் பிரதான வீதியினை வழிமறித்த பொதுமக்கள் ‘இருப்பதற்கு வீடு காணி இல்லை, எமது காணியினைப்பிரித்து இன்னொருவருக்கு வழங்குவது சரியா?, நீங்களே எமது நிலத்தை தந்து விடுங்கள் இல்லையெனில் நாங்களே அதனை எடுக்க வேண்டி வரும், வீடு இல்லை காணி இல்லை, 60 ஏக்கர் காணியியை மீட்டுத்தா, அரை ஏக்கருக்குள் மீள்குடியேற்றம் செய்யும் பொழுது 250 குடும்பம் இன்று 570 குடும்பம் நாம் எங்கு சென்று வசிப்பது’ போன்ற பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு சுமார் 1 மணிநேரம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Exit mobile version