கிழக்கில் தமிழ்த் தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தேசியவாதிகள் – மட்டு.நகரான்

போலித் தமிழ்த் தேசியவாதிகள்கிழக்கில் தமிழ்த் தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தமிழ்த் தேசியவாதிகள்: தமிழர்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமானதாக மாறிவருகின்றது. தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாடுகள் முற்றுமுழுதாக அழிக்கப்படும் அல்லது அழிந்து செல்லும் நிலைமைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

இது தொடர்பில் நாங்கள் கடந்த காலத்தில் எழுதியுள்ளபோதிலும், இன்றைய கிழக்கு மாகாணத்தின் நிலைமையினையும், எதிர்காலத்தில் இதனை எவ்வாறு தடுத்து, தமிழ்த் தேசிய அரசியலை முன்கொண்டு செல்லமுடியும் என்பதையும் எழுதவேண்டிய அவசியம் இன்று எழுந்துள்ளது.

அண்மைக் காலமாக தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக இளையோர் மத்தியில் தவறான கருத்துகள் விதைக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்த் தேசிய அரசியலில் உள்ள கட்சிகளின் செயற்பாடுகள் தமிழ் தேசியத்தினை நேசிக்கும் இளைஞர்கள் மத்தியில் விரக்கதி நிலை அல்லது அந்த தேசிய உணர்வினை இல்லாமல்செய்யும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது.

இன்று இந்த நாட்டில் தமிழ் மக்கள் என்ன காரணத்திற்காகப் போராடினார்கள், என்ன காரணத்திற்காக இவ்வளவு இழப்புகளையும் சந்தித்தார்கள் என்பதை எமது தலைமுறையினருக்குச் சரியான முறையில் கொண்டு செல்லத்தவறும் அதேநேரம், தமிழ்த் தேசிய அரசியலின் நோக்கத்தினைத் திசைதிருப்பும் வகையிலான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இன்று தமிழர்கள் மத்தியில் காணப்படும் அன்றாடப் பிரச்சினைகளைக் கொண்டு மக்களை உசுப்பேற்றி, அரசியல்செய்ய முனையும் தமிழ் தேசிய சக்திகள், தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் உண்மையான பிரச்சினைகள் குறித்து தெளிவூட்டல்களை செய்யாது பிழையான கருத்துகளையும் தவறான கொள்கைகளையும் இளைஞர் மத்தியில் விதைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியம் தொடர்பான தெளிவுகளை வழங்காமல், வெறுமனே அரசியல் ரீதியாகத் தமது பலத்தினை தக்கவைத்துக் கொள்ளும் செயற்பாடுகளே தமிழ்த் தேசிய அரசியலில் முன்னெடுக்கப்படுகின்றது.

குறிப்பாக அண்மையில் ஊடக சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்த கருத்துகள் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகின்றது.

தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தேசியவாதிகள்2 கிழக்கில் தமிழ்த் தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தேசியவாதிகள் – மட்டு.நகரான்இன்று தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் சர்வதேச தலையீட்டை வலியுறுத்திவரும் நிலையில், அதனைச் சிதைக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கட்சியொன்றின் பிரதிநிதியாக இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்த கருத்துகள் அவரின் உள்மனதில் உள்ள தமிழ்த் தேசிய அரசியல் மீதான பற்றற்ற செயற்பாட்டினை வெளிக்காட்டியுள்ளது. குறிப்பாக அந்த ஊடக சந்திப்பில் ‘எமக்குத் தீர்வு கிடைப்பதாக இருந்தால் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று இலங்கை அரசாங்கத்துடன் பேசி அனைத்து மக்களும் இணங்கி ஒரு தீர்வை அடைந்து எங்களுடைய அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான தீர்வினை எட்டுவது. மற்றையது நடக்குமா நடக்காதா என்று தெரியாது. 1987ம் ஆண்டு இந்தியாவைப் போல ஒரு நாடு இலங்கைக்குள் வந்து ஒரு தீர்வினைப் பெற்றுத் தருவது. இதில் இரண்டாவது விடயத்திற்கான சாத்தியப்பாடுகள் எத்தகையது என்பது பற்றி இன்றைய நிலையைப் பொறுத்து அனைவருக்கும் தெரியும்.

இந்தியா மாத்திரமல்ல எந்தவொரு நாடும் இன்னுமொரு நாட்டுக்குள் வந்து தீர்வைப் பெற்றுத் தருவதென்பது நடைமுறைச் சாத்தியமா என்ற கேள்வி இருக்கின்றது. அவ்வாறு இருக்கும் போது எந்த விடயத்திற்கும் முதலில் நாங்கள் பேச்சுவார்த்தைக்குப் போக வேண்டும். பேச்சுவார்த்தைக்குப் போகும் போது இந்த விடயத்தை முன்வைத்துத் தான் பேச வேண்டும் என்று ஒரு சிலர் சொல்லலாம். ஆனால் பேச்சுவார்த்தைக்குப் போகும் போது நாங்கள் திறந்த நிலையிலேயே போக வேண்டும்.’என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதில் பெரும்பாலான கருத்துகள் சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் பிரதேசங்களுக்கு வரும்போது தெரிவிக்கும் கருத்துகளை ஒத்ததாகவே இருக்கின்றது. எந்தத் தீர்வினையும் சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாது எனப் பகிரங்கமாகவே தமிழ்த் தேசிய அரசியல்வாதியொருவர் தெரிவித்திருப்பதானது, இன்றைய இளம் தமிழ் சமூகத்திற்கு மத்தியில் பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது.

தமிழ்த் தேசியம் என்பது வெறுமனே தமிழ் மக்களின் சாதாரணமான பிரச்சினைகளின் தோன்றல் அல்ல. அவர்கள் ஆட்புல, ஒருமைப்பாட்டினையும் அவர்களின் அடிப்படை உரிமையினையும் பாதுகாக்கும் ஆயுதமே தமிழ் தேசியம் ஆகும்.

தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தேசியவாதிகள்3 கிழக்கில் தமிழ்த் தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தேசியவாதிகள் – மட்டு.நகரான்வெறுமனே காணி அபகரிப்புக்கு எதிராகப் போராடுவதும், மீனவர்களுக்கு எதிராகப் போராடுவதும் பாதயாத்திரை செல்வதும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை விமர்சிப்பதும் மட்டும் அல்ல அதனையும் தாண்டிய பல செயற்பாடுகள் இன்று தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளிடம் இருக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.

போலியான செயற்பாடுகளை மேற்கொண்டு, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள இளையோரை முன்கொண்டு செல்ல முற்படுவது, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிற்கு ஆபத்தான செயற்பாடாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது. இன்று கிழக்கில் உள்ள மக்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கும் நிலைகளையும் காணமுடிகின்றது.

ஏற்கனவே தமிழ்த் தேசியத்திற்கு எதிராக போலித் தேசியம் என்ற வகையில் பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் போன்றவர்களினால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், அவர்களின் கருத்துகளை உண்மையாக்குவது போன்று கிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் முன்கொண்டு செல்லப்படுகின்றன.

தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தேசியவாதிகள்4 கிழக்கில் தமிழ்த் தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தேசியவாதிகள் – மட்டு.நகரான்கிழக்கினைப் பொறுத்தவரையில், இன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தவிர்த்து ஏனைய தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் காலூன்றாத நிலையே உள்ளது. இவ்வாறானவர்கள் ஒன்றை உணர மறுக்கின்றனர். தமிழ்த் தேசிய அரசியல் என்பது வெறுமனே வடக்கினை மட்டும் கொண்டதாக இருக்கமுடியாது. வடகிழக்கு இணைந்த நிலப்பரப்பே தமிழ்த் தேசியமாகும். ஏனையவை அனைத்துக் கட்சி அரசியலாக மட்டுமே நோக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தின் நிலையினை உணர்ந்து தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள், உண்மையான தமிழ்த் தேசிய உணர்வினை தமிழ் இளையோர் மத்தியில் விதைப்பதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும். தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் தமிழ் இளையோர் மத்தியில் நாடகமாடுவோர் தமிழ் மக்களினால் துரத்தியடிக்கப்பட வேண்டும். அதற்கான களத்தினை கிழக்கில் உள்ள தமிழ்த் தேசியவாதிகளுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad கிழக்கில் தமிழ்த் தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தேசியவாதிகள் – மட்டு.நகரான்