பாகிஸ்தான் தூதுவர் தொடர்பில் விந்தனின் செய்தியில் உண்மையில்லை – தவிசாளர் சசிக்குமார்

மாகாணசபை உறுப்பினர் விந்தன் கருத்து உண்மையில்லை

யாழ் நெடுந்தீவு பகுதிக்கான பாகிஸ்தான் தூதுவரின் விஜயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கருத்து உண்மையில்லை, எமது பிரதேச சபைக்கு எதுவித தொடர்பும் கிடையாது என தெரிவித்துள்ள நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் நல்லதம்பி சசிக்குமார், மக்களை குழப்பும் வகையில் தவறான கருத்துக்களை வெளியிட்டமைக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

முன்பதாக சில தினங்களுக்கு முன்னர் யாழ்.நெடுந்தீவுக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் துாதுவரை அரச சார்பு கட்சி ஒன்றின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச சபை உறுப்பினர்களுமே வரவேற்றார்கள் என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் விந்தன் நேற்றையதினம் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

அத்துடன் பாகிஸ்தான் தூதுவர் தீவகத்தை இலக்கு வைத்து அடிக்கடி விஜயம் செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் நெடுந்தீவுக்கு வருகை தந்த பாகிஸ்தான் தூதுவரை பிரதேசசபை வாகனத்தில் அழைத்துச் சென்று நெடுந்தீவை சுற்றி காண்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடக செய்திக் குறிப்பொன்றை விடுத்துள்ள நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் – குறித்த செய்தியில் எதுவித உண்மைத்தன்மையும் இல்லாது ஒரு போலியான தகவலை வெளியிட்டுள்ள விந்தன் கனகரத்தினம் இழந்துவரும் தனது அரசியல் தளத்தை புதுப்பிக்கவும் மக்கள் மத்தியில் காணாமல் போயிருந்த அவரது முகத்தை மீண்டும் காண்பிக்கும் வகையிலுமான அரசியல் நோக்கம் கொண்டதாகவே குறித்த தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் எமது கட்சியின் மீது இவ்வாறான காழ்ப்புணர்ச்சி கொண்ட சேறடிப்புகளை வெளியிட்டே இவர்கள் தமது அரசியலை முன்னெடுத்து வந்திருந்தனர்.

ஆனால் தற்போது அவை அனைத்தும் பொய்யானவை என மக்கள் தெளிவுற்றுள்ளமையால் தற்போது இவ்வாறான ஒரு போலியான தகவலை குறிப்பாக பிரதேச சபை வாகனத்தில் குறித்த தூதுவரை திட்டமிட்டவகையில் வெளியிட்டுள்ளதுடன் தங்களது ஆளுகைக்குள் இருந்த நெடுந்தீவு பிரதேச சபையின் ஆட்சிப் பொறுப்பை விந்தன் கனகரத்தினம் உள்ளிட்டவர்களது ஆளுமையற்ற செயற்பாட்டால் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து கவிழ்க்கப்பட்டதன் காரணமாகவும் எமது சபையின் செயற்பாடுகளையும் பிரதேச சபையின் உண்மைத்தன்மையையும் அவதூறு பூச முயற்சித்துள்ளதுடன் நெடுந்தீவு மக்களையும் சந்தேகத்துக்கிடமானவர்களாக்க முயற்சிக்கின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே குறித்த விந்தன் கனகரத்தினத்தின் செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது என்பதுடன் அது தொடர்பில் செய்திகளை வெளியிட்ட ஊடகங்களிடம் தான்  விளக்கம் கோரவுள்ளதாகவும் குறித்த பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021