ஷ்ரிங்லாவின் விஜயமும், மாகாண சபைத் தேர்தலும் – அகிலன்

ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்னதாக மாகாண சபை தேர்தல்மாணாண சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நடைபெறும் என அமைச்சர் பஸில் ராஜபக்‌ச அறிவித்திருக்கின்றார். தற்போதைய அரசாங்கத்தில் சக்தி வாய்ந்தவராக இருப்பவர் பஸில் ராஜபக்‌ச தான். அதனால், அவர் அறிவித்திருப்பது போல மார்ச் ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்னதாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதன் மூலம், சர்வதேச அழுத்தங்களை ஓரளவுக்காவது குறைப்பதற்கு அரசாங்கம் முற்படுவதாகவே தெரிகின்றது

இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் பஸில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளைத் தனித்தனியே சந்தித்து பேசினார். இந்தப் பேச்சுகளின் போது 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும், அதனுடன் தொடர்புடைய மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே மாகாண சபைத் தேர்தல்  தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விஜயமும் மாகாண சபைத் தேர்தலும்5 ஷ்ரிங்லாவின் விஜயமும், மாகாண சபைத் தேர்தலும் - அகிலன்தேர்தல் முறைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டம் நேற்று பாராளுமன்றில் நடைபெற்றது. இதன்போது, தெரிவுக்குழுவில் புதிதாக சேர்க்கப்பட்ட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் முதன்முறையாக பங்கேற்றிருந்தனர். அங்கு கருத்து வெளியிட்ட நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச, மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக – எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்பாக நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக மாகாண சபை தேர்தல்கள் சட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது என அறிவித்தார்.

ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவின் இலங்கைக்கான விஜயம்

ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவின் இலங்கைக்கான விஜயம்இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவின் இலங்கைக்கான மூன்று நாள் அதிரடி விஜயம்தான், இலங்கை அரசியலில் கடந்த வாரம் சூடான விவகாரமாக இருந்தது. அவரது விஜயத்தின் அனைத்து நகர்வுகளையும் இராஜதந்திர வட்டாரங்கள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தன. இலங்கை – இந்திய உறவுகளைப் பொறுத்தவரையில், மட்டுமன்றி, இலங்கையின் சர்வதேச உறவுகளைப் பொறுத்தவரையிலும், ஷ்ரிங்லாவின் விஜயம் அடிப்படையில் மாற்றங்கள் சிலவற்றை ஏற்படுத்தியிருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நான்கு நாள் விஜயத்தின் போது வடக்கு, கிழக்குக்கு விஜயம் செய்த அவர், யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நடத்திய பேச்சுவார்த்தைகள் முக்கியமானவை. அனைத்துத் தரப்பினரையும் அவர் சந்தித்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. திருமலையில் சீனன்குடா எண்ணெய்த் தாங்கிகள் அமைந்துள்ள பகுதிக்கும் அவர் விஜயம் செய்திருந்தார். குறிப்பிட்ட எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதற்கு இந்த விஜயம் அவருக்குப் பயன்பட்டிருக்கலாம். அதற்கு முன்பாக நின்று அவர் எடுத்திருந்த படம் பல செய்திகளைச் சொல்கின்றது.

 

சீனாவுக்கு சார்பான ஒரு போக்கில்தான் இலங்கை சென்று கொண்டிருக்கின்றது என்பது இரகசியமானதல்ல. இந்தப் போக்கிலிருந்து மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான அழுத்தங்களை ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் மூலமாகவும், ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை ரத்துச் செய்தல் போன்றவற்றின் மூலமாகவும் மேற்கு நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவின் மறைமுகமான ஆதரவுடன்தான் இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நகர்வுகளின் மூலம் இலங்கை கடுமையான ஒரு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள பின்னணியில்தான், இந்திய வெளிவிவகாரச் செயலாளரின் இலங்கைக்கான விஜயம் இடம்பெற்றது.

இராஜதந்திர அழுத்தம்

அதாவது, சீனா சார்பான இலங்கையின் போக்கில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, இந்திய சார்பு நிலைக்கு அல்லாவிட்டாலும், ஓரளவு நடுநிலைக்கு இலங்கையைக் கொண்டு வருவதற்கான ஒரு நகர்வாகத்தான் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவின் இலங்கை விஜயம் அமைந்திருந்தது. இலங்கையில், அவர் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் இதனை உணர முடிந்தது. ஷ்ரிங்லா இலங்கைக்கு விஜயம் செய்திருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற மூன்று சம்பவங்கள் இதில் கவனிக்கத்தக்கது.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இந்தியா தோல்வியடைந்திருந்தாலும், மேற்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்கும் உடன்படிக்கை ஷ்ரிங்லாவின் இலங்கை விஜயம் ஆரம்பமாகவுள்ள நிலையில் கைச்சாத்திடப்பட்டது. கிழக்கைக் கொடுக்காமல் விட்டதால், சீற்றமடைந்திருந்த இந்தியாவை சமாதானப்படுத்துவதற்காகத்தான் மேற்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்க இலங்கை முன்வந்திருந்தது. இதனைப் பெறுவதில் தயக்கம் காட்டிய இந்தியா, கடந்த வாரம் அதனைப் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் கையொப்பமிட்டது.

இதனைவிட, கிழக்கு மாணாணத்தில் இந்தியப் படைகளும், இலங்கைப் படைகளும் பங்குகொள்ளும் பாரிய இராணுவப் பயிற்சி – ஒத்திகை ஒன்று இதே காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இரு நாடுகளும் பங்குகொள்ளும் இராணுவ ஒத்திகை நீண்ட காலத்தில் பின்னர் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

21 61598b7c708ab ஷ்ரிங்லாவின் விஜயமும், மாகாண சபைத் தேர்தலும் - அகிலன்மூன்றாவதாக, ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா திருமலை எண்ணெய்க் குதங்களைப் பார்வையிட்ட நிலையில், அது குறித்த சர்ச்சை பாராளுமன்றத்தில் இரு தினங்களுக்கு முன்னர் கிளப்பப்பட்டது. இவை 1987 இலங்கை இந்திய உடன்படிக்கை மூலமாக நிரந்தரமாகவே இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்டு விட்டதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில் இதன்போது பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆக, இந்தியாவுடன் இணைந்து செயற்படும் தமது விருப்பத்தை இந்த வகையில் இலங்கை வெளிப்படுத்தியிருக்கின்றது.

இவை அனைத்தையும் பார்க்கும் போது, சீனாவின் பிடியிலிருந்து இலங்கையை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கு நாடுகளின் ஆதரவுடன் இந்தியா முன்னெடுத்திருப்பதாகவே தெரிகின்றது. அதன் முக்கியமான ஒரு கட்டமாகத்தான் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவின் விஜயம் இடம்பெற்றிருக்கின்றது. அதற்கான இராஜதந்திர காய்நகர்த்தல்கள் பல்வேறு மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கூட்டமைப்புடன் பேச்சு

கூட்டமைப்புடன் பேச்சுதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களின் போது, இரண்டு விடயங்களை ஷ்ரிங்லா முக்கியமாகக் குறிப்பிட்டிருந்தார். ஒன்று – 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்துமாறும் தமிழ்த் தரப்புக்கள் அரசாங்கத்தை ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாக அவர் முன்வைத்தார். அதேவேளையில், இதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு இந்தியாவும் கொடுக்கும் எனவும் அவர் அதன்போது உறுதியளித்திருந்தார்.

அதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவுடனான பேச்சுவார்தையின் போதும், இதனை ஷ்ரிங்லா வலியுறுத்தினார். அதாவது, மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும். 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, அந்தக் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. பதிலாக 13 இல் இருக்கக்கூடிய பலங்கள், பலவீனங்களை முதலில் ஆராய வேண்டும் எனக் கூறியிருக்கின்றார்.

ஜனாதிபதியைப் பொறுத்தவரையில், அவர் 13 ஆவது திருத்தத்தையோ, மாகாண சபைகளையோ ஏற்றுக்கொண்ட ஒருவரல்ல. இவை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது நிலைப்பாடு. இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக புதுடில்லிக்கு அனுப்பப்பட்டுள்ள மிலிந்த மொரகொடவும் இதே நிலைப்பாட்டைக் கொண்ட ஒருவர்தான். இந்த நிலையில் ஷ்ரிங்லாவுக்கு ஜனாதிபதி சொன்ன பதில் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் அவருக்குள்ள தயக்கத்தைக் காட்டுகின்றது.

இந்தியாவின் ஆயுதம்

இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கையில் செல்வாக்குச் செலுத்துவதற்கு இருக்கக்கூடிய பிரதான கருவியாக 13 ஆவது திருத்தம் மட்டும்தான் உள்ளது. அதனை கடந்த காலங்களிலும் இந்தியா பயன்படுத்தியது, இப்போதும் அதனைப் பயன்படுத்துகின்றது. எதிர்காலத்திலும் அதனைப் பயன்படுத்தும் என்பதைத்தான் ஷ்ரிங்லாவின் விஜயத்தின் போது அவர் தெரிவித்த தகவல்கள் உணர்த்துகின்றன. உண்மையில், சட்டபூர்வமான முறையில் இலங்கையை வழிக்குக் கொண்டுவருவதற்கு இந்தியாவிடம் இருக்கக்கூடிய ஒரு ஆயுதம் அதுதான்.

மனித உரிமை விவகாரம், பொருளாதாரம் போன்வற்றைப் பயன்படுத்தி இலங்கை மீது அழுத்தம் கொடுக்கும் அதேவேளையில், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருவதன் மூலம், இலங்கையில் தன்னுடைய பிடியை வைத்திருப்பதுதான் இந்தியாவின் உபாயம். ஷ்ரிங்லாவின் விஜயமும் அதனைத்தான் உணர்த்தியிருக்கின்றது. இலங்கை அரசும் கடுமையான அழுத்தங்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொள்வதால், ஓரளவுக்காவது இவ்விடயத்தில் இறங்கிச் செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதாகவே தெரிகின்றது.

மாகாண சபைகள் செயற்படாதிருக்கும் நிலையில், அதற்கு இருக்கக்கூடிய அதிகாரங்கள் பறிபோகக்கூடிய நிலைமையும் காணப்படுகின்றது. மாகாண சபைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஏற்கனவே இல்லாதொழிக்கப்பட்டு விட்டன. தற்போது மாகாண சபைகளுக்கு இருக்கக்கூடிய கல்வி, சுகாதாரத் துறைக்கான அதிகாரங்களும் காவு கொள்ளப்படும் நிலை காணப்படுகின்றது. மாகாண சபைகள் செயற்படாத நிலையில் அதனைச் செய்வதற்கு மத்திய அரசு முற்படுவதைக் காணமுடிகின்றது. தொடர்ந்தும் மாகாண சபைகள் செயற்படாவிட்டால், ஏனைய அதிகாரங்களும் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது.

இந்தப் பின்னணியில்தான் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுக்கின்றது. அதேவேளையில், இவ்விடயத்தில் தமிழ்த் தரப்புக்கள் உறுதியாகவும், பலமாகவும் குரல் கொடுக்கவில்லை எனவும், இந்தியா கருதுவதாகத் தெரிகின்றது. கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போது இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இதனையும் கூறியிருக்கின்றார். இது போன்ற விடயங்களிலாவது தமிழ்த் தரப்பினர் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இலங்கையைப் பொறுத்தவரையில், முன்னரைப்போல சீனாவின் பக்கத்துக்கு ஒரேயடியாகச் சாய்ந்துவிட முடியாது என்பதை இந்தியா உணர்த்தியிருக்கின்றது. இந்தியா நேரடியாகக் கொடுத்திருக்கும் அழுத்தங்களைத் தவிர்த்துச் செல்வதும் இலங்கைக்கு சாத்தியமில்லை. இந்த நிலையில், கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளுக்கு அரசு செல்கின்றதோ இல்லையோ மாகாண சபைத் தேர்தலை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இருப்பதாகவே தெரிகின்றது. பஸில் ராஜபக்‌சவின் அறிவிப்பு அதனைத்தான் உறுதிப்படுத்துகின்றது.