டெங்கு தடுப்பு செயலிணியின் பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் உடன் வழங்க வேண்டும் – இரா.சாணக்கியன்

டெங்கு தடுப்பு செயலிணியின் பணியாளர்

ஒரு இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தின் ஊடாக டெங்கு தடுப்பு செயலிணியின் பணியாளர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஆளும் தரப்பு உறுப்பினர்களில் ஒருவர் கூட, டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட செயலணியில் உள்ள இளைஞர் – யுவதிகள், சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பாக ஒரு வார்த்தையையேனும் பேசவில்லை. இதனையிட்டு நாம் மிகவும் கவலையடைகிறோம். உண்மையில் இந்த செயலணி 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டபோது ஒரு இலட்சம் பேரில் 238 பேருக்கு டெங்கு நோய் கண்டறியப்பட்டது.

2023 ஆம் ஆண்டாகும்போது ஒரு இலட்சம் பேரில் 100 பேரளவில் டெங்கு நோயாளர்களை குறைப்பதே இதன் நோக்கமாகவும் இருந்தது.

கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் டெங்கு நோயெதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டவர்கள், இன்று மிகவும் கவலையுடனேயே தங்களின் கடமைகளை செய்து வருகின்றனர்.

எனினும், அவர்கள் மாவட்ட ரீதியாக தங்களின் கடமைகளை சரியாகவும் எந்தவொரு சிக்கலுமின்றி மேற்கொண்டே, தங்களுக்கு நிரந்தர நியமனத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோருகிறார்கள்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், இவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டபோது இரவு முமூவதும் அவர்கள் சுகாதார அமைச்சில் இருந்து, தங்களுக்கு சார்பான பதில் ஒன்று வரும் என்று எதிர்ப்பார்த்தார்கள்.

2021 ஆம் ஆண்டும் இவர்கள், முன்னாள் சுகாதார அமைச்சரை சந்தித்து இதுதொடர்பான கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்கள்.

அமைச்சர் அன்று வழங்கிய உறுதி மொழியை நம்பித்தான் அவர்கள் தங்களின் கடமைகளையும் சரியாக செய்தார்கள்.

கொரோனா பரவ ஆரம்பித்த காலத்தில் பி.பி.டி. கிட் கூட இல்லாமல், தங்களின் உயிரை பணயம் வைத்துதான், 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு அவர்கள் வேலை செய்திருந்தார்கள்.

இன்றும் அவர்கள் அதே சம்பளத்தில்தான் வேலை செய்கிறார்கள். 1169 பேர் 8 ஆம் தரக் கல்விக் தகமையுடனும், 322 பேர் சாதாரணத்தரக் கல்வித் தகமையுடனும் இன்று இதில் கடமையாற்றி வருகிறார்கள்.

இவர்கள் தொடர்பாக அமைச்சர் கவனம் செலுத்தி, இவர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம்.

1 இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்திலேனும் இவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் இன்னமும் ஊக்கமாக வேலை செய்யக்கூடியதாக இருக்கும்.

இதற்கான நடவடிக்கையை நாம் மேற்கொள்ள வேண்டும். இன்று ஒரு இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தை எடுத்துக் கொண்டால் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக நூற்றுக் கணக்கானோர் நியமனத்தைப் பெற்றுள்ளார்கள்.

அவர்கள் இலட்சக்கணக்கில் இலஞ்சம் கொடுத்து, நியமனத்தைப் பெற்று விட்டு, இன்று வேலை செய்யாமல் வீட்டில் இருக்கிறார்கள். நோய்கள் என்பது முடிந்துவிடும் ஒன்றல்ல. டெங்கு நோய் ஒழிந்த பிறகு இன்னுமொரு நோய் புதிதாக உருவாகலாம்.

எனவே, டெங்கு தடுப்பு செயலிணியின் பணியாளர்களுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தின் ஊடாக நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என்று நாம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Tamil News