Tamil News
Home செய்திகள் மாலத்தீவிலும் எதிர்ப்பு: ராஜினாமா செய்யாமல்  சிங்கப்பூருக்கு தப்பிச் செல்லும் கோட்டாபய

மாலத்தீவிலும் எதிர்ப்பு: ராஜினாமா செய்யாமல்  சிங்கப்பூருக்கு தப்பிச் செல்லும் கோட்டாபய

பதவி விலகல் கடிதம் கூட கொடுக்காமல் இலங்கையில் இருந்து தப்பியோடிய  ஜனாதிபதி  கோட்டாபய  ராஜபக்ச மாலத்தீவில் எதிர்ப்பு வலுப்பதால் அங்கிருந்து இன்று சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான பொருளாதார நெருக்கடியால் நாடுமுழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அறிவித்தபடி கோட்டாபய தனது ராஜினாமா கடிதத்தை நேற்று அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ராஜினாமா கடிதம் எதையும் வழங்காமல் இரகசியமாக நேற்று மாலத்தீவுக்கு தப்பியோடினார்.

இந்நிலையில், மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள கோட்டாபய வெளியேற்றக்கோரிஅந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

மாலத்தீவில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பைத் தொடர்ந்து கோட்டாபய  ராஜபக்ச, சிங்கப்பூர் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலத்தீவு அரசு தனக்கு ஒரு தனி ஜெட் விமானத்தை ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று அவர் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று மாலை கொழும்புவில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடந்த போது இடைக்கால  ஜனாதிபதியாக  நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்றும், பாராளுமன்ற சபாநாயகர் இடைக்கால ஜனாதிபதியாக செயல்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில்,ரணில் விக்கிரமசிங்கே மக்களுக்காக உரையாற்றுகையில் “நாட்டை துண்டாட பாசிஸ சக்திகள் முயற்சி செய்கின்றன. நெருக்கடிகளுக்கு அரசியல் சாசனத்தின்படியே தீர்வு காண முடியும். நமது சட்ட திட்டங்களை கிழித்தெறிந்துவிட்டு எந்த முடிவும் எடுக்கமுடியாது. ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும். அதிபர் மாளிகையிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேற வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து நாட்டின் முப்படை தளபதிகளும் மக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால் கோட்டாபய மற்றும் ரணில் பதவி விலகும் வரையில் போராட்டாம் மேலும் தீவிரமடையும் என போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

இருந்தும் கோட்டாபய இனி மாலைதீவில் இருந்து தப்பி சிங்கப்பூருக்கு சென்றதன் பின்னர்தான் தனது பதவி விலகல் கடிதத்தை வெளியிடுவார் போலும்.

Exit mobile version