காற்றில் பறந்த வாக்குறுதிகள் -துரைசாமி நடராஜா

இலங்கையில் மலையக பெருந்தோட்ட மக்களின் குடியிருப்பு நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளன.தோட்டப்புற வீடமைப்பு குறித்து அரசாங்கம் வழங்கும் வாக்குறுதிகள் பலவும் காற்றில் பறந்துள்ள நிலையில் இன்னும் பலர் லயத்து வாழ்க்கையில் இருந்தும் மீண்டு வெளியேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் பெருந்தோட்ட வீடமைப்பு கருதி இந்தியா நேசக்கரம் நீட்டி வருகின்ற போதும் இவ்வுதவிகள் மேலும் அதிகரிக்கப்படுதல் வேண்டும் என்ற கருத்துக்களும் மேலோங்கி வருகின்றன.

” ஒவ்வொருவரும் உணவு, அடிப்படை வசதி , மருத்துவ கவனிப்பு, அவசியமான சமூக சேவைகள் உட்பட தமதும், தமது குடும்பத்தினரினதும், உடல்நலத்துக்கும், நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத் தரத்திற்கும் உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் ,அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும், வாழ்க்கைக்கு வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பிற்கும்  உரித்துடையவராவர்” என்று  ஒரு மனிதனின் வீட்டுரிமை தொடர்பாக சர்வதேச மனித உரிமை சாசனம் வலியுறுத்துகின்றது வீட்டை அடிப்படையாகக் கொண்டே நாகரீகம் கட்டியெழுப்பப்படுகின்றது என்றும் கூறுவார்கள். சிறந்த பழக்க வழக்கங்கள், ஒழுக்க ரீதியான செயற்பாடுகள் என்பவற்றின் விருத்தியில் வீட்டின் வகிபாகம் அதிகமாகவே காணப்படுகின்றது. உணவு, உடை, உறையுள் என்ற வரிசையில் வீட்டின் முக்கியத்துவத்தை யாரும் புறந்தள்ளி விடுவதற்கில்லை.இந்த வகையில் வீடு என்பது குறைந்தபட்ச தகுதிகளையாவது கொண்டிருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

“வீடு என்பது ஒரு சமூக நிறுவனமாகும்.அங்கேதான் சமூக நாகரிகத்திற்கான அத்திபாரம் இடப்படுகின்றது.காற்றோட்டம், குடிநீர் வசதி,கழிவகற்றும் வசதிகள், சுகாதாரமான சமையல் வசதி என்பனவும்,வாசிப்பதற்கு இட வசதிகளும் மின்சார வசதியும் தேவை ” என்ற கருத்து புத்திஜீவிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த வகையில் மலையக பெருந்தோட்ட வீடுகளைப் பொறுத்தவரையில் ஒரு காலத்தில் மண்ணெண்ணெய் லாம்பு கலாசாரம் மேலோங்கி காணப்பட்டது.இது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய பல  விடயங்களையும் முன்னெடுப்பதில் இடையூறுகளை ஏற்படுத்தி இருந்தது.எனினும் இன்று அநேகமான பெருந்தோட்ட வீடுகள் மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமை மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமேயாகும்.

“1980 களின் இறுதிப்பகுதியில் இருந்து மலையக மக்கள் படிப்படியாக சட்ட ரீதியாக பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொண்டபோதும்,அதன் உண்மையான பயன்களை முழுமையாக அனுபவிக்க முடியாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.அதற்கு அம்மக்களின் சமூக,, பொருளாதார நிலை பெரிதும் சான்றாகக் காணப்படுகின்றது.

மிக முக்கியமாக வீட்டுரிமை மற்றும் காணியுரிமை என்பன இம்மக்கள் தொடர்ந்தும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகும்.பிரித்தானியர் காலத்தில் வழங்கப்பட்ட லயன் அறைகளிலேயே பெரும் எண்ணிக்கையிலானோர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் அவை தற்காலிக வதிவிடங்களாகவே கருதப்பட்டன.ஆயினும் கால ஓட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் நிரந்தர வதிவிடங்களாகவே அவை மாறின.இதற்கு தோட்டங்களை முகாமை செய்த வெள்ளையர்களிடம் பெருந்தோட்ட மக்களின் சமூக, பொருளாதாரத்தை மேம்படுத்தும்  ஒரு திட்டம் காணப்படாமை முக்கிய காரணமாகும்” என்று எம்.வாமதேவன் சுட்டிக்காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

1927 ம் ஆண்டு முதல் 1945 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அதிகளவான லயன்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் இவற்றில் பல இன்னும் அழியாச் சின்னங்களாகக் காணப்படுகின்றன.பெருந்தோட்ட வீட்டு நிலைமைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.இதனடிப்படையில் 1995 க்கு முந்தைய காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வெளிக்கல ஆய்வொன்றின்போது லயன் வீடுகள் குறித்த பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

பெரும்பாலான தோட்டப் புற லயன் வீடுகளின் கூரை தகரத்திலானது என்பதும் அவை நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதன் பின்னர் மாற்றப்படாமலுள்ளதோடு, மழைக் காலங்களில் முழு வீட்டிலும் மழைநீர் ஒழுகுவதால் குடியிருப்பாளர் பெரிதும் துன்புறுவதாகவும் இவ்வாய்வு வெளிப்படுத்தியது. இத்தகைய மேலும் பல ஆய்வுகளும் பெருந்தோட்ட லயன்களின் சிக்கல் நிலைமைகளை வெளிப்படுத்தின.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரும் சிக்கல்களுக்கு மத்தியில் லயன் வீடுகளில் வாழ்ந்து வரும் நிலையில் அம்மக்களை அத்தகைய லயன் வீடுகளில் இருந்து துரத்தியடிக்கும் நடவடிக்கைகளைக் கூட இனவாதிகள் முன்னெடுத்தனர் என்பது கொடுமையிலும் கொடுமையான கசப்பான உண்மையாகும்.

பெருந்தோட்டங்ளில் இரட்டை லயன் காம்பரா, ஒற்றை லயன் காம்பரா, குடிசைகள், தற்காலிக குடில்கள், தற்காலிக வீடுகள் என்று பல வகையான குடியிருப்புகள் காணப்படுகின்றன. இவற்றில் சிலவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.தோட்ட வீடமைப்பில் புதிய சகாப்தம், வீடமைப்பு நிர்மாணத்துறை பொது வசதிகள்  அமைச்சின் 1996 ம் ஆண்டின்  தகவலுக்கமைய 104556 அலகுகள் இரட்டை லயன் காம்பரா முறையைக் கொண்டதாகவும், 108825 அலகுகள் ஒற்றை லயன் காம்பரா முறையைக் கொண்டதாகவும் காணப்பட்டதோடு சுமார் 70 வருடங்கள் பழைமை வாய்ந்ததாகவும் காணப்பட்டது.திருத்தியமைக்கப்பட முடியாத அழியும் நிலையிலிருக்கும் லயன்கள் 85 வீதமாகும் .இத்தகைய லயன் அறைகளில் சாதாரணமாக எட்டு பேருக்கு மேல் வாழ்வதாகவும் கண்டறியப்பட்டது.

கவர்ச்சியான வெளிப்பாடுகள்

பெருந்தோட்ட மக்களின் குடியிருப்பு நிலைமைகள் திருப்தியற்ற வெளிப்பாடுகளைக் கொண்டுள்ள நிலையில் ஆட்சியாளர்கள் வீடமைப்பு தொடர்பில் பொய்யான வாக்குறுதிகளையே வழங்கி வருகின்றனர்.

தேர்தல் விஞ்ஞாபனங்கள், வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் போன்றவற்றில் பெருந்தோட்ட மக்களுக்கு பல்லாயிரக்கணக்கான தனி வீடுகளை அமைத்துக் கொடுக்கப் போவதாக கவர்ச்சியான வெளிப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.எனினும் இவ்வாக்குறுதிகள் அனைத்தும் தூசு படிந்த நிலையிலேயே முடங்கிக் கிடப்பதனையும் கூறியாதல் வேண்டும்.

ஒவ்வொரு வரவு செலவு திட்டத்தின் போதும், தேர்தல்களின்போதும் இவ்வாக்குறுதிகள் தூசுதட்டிப் புதுப்பிக்கப்படுகின்றனவே தவிர இவற்றினால் ஆனபயன் எதுவுமில்லை. என்பதனை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியுள்ளது.

இலங்கையில் வீடமைப்பின் தந்தையாக போற்றப்படும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவும் பெருந்தோட்ட மக்களின் வீடமைப்பு தொடர்பில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே செயற்பட்டார்.

1980 களில் தேர்தல் தொகுதிக்கு 100 வீடுகள் என்ற திட்டத்தின் கீழ் கொட்டகலை , சௌமியபுரத்தில் 20 வீடுகளும், ஹட்டன், வெலிஓயா, மாணிக்கவத்தையில் 20 வீடுகளுமாக மொத்தமாக நாற்பது வீடுகளே தோட்டத்துக்கு வெளியே தனித்தனி வீடுகளாக கட்டப்பட்டுள்ளன.

இது தொண்டமானின் வேண்டுகோளுக்கமையவே கட்டப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.இதேவேளை பிரேமதாசா சிங்கள கிராமப் பகுதிகளிலும்,சேரிப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும், வீடமைப்புக்கு கொடுத்த முக்கியத்துவத்தை  தோட்ட லயன்களை மாற்றுவதில் அக்கறை கொள்ளவில்லை என்ற விமர்சனங்களும் இருந்து வருகின்றன.

தோட்டப் புற மக்களின் வீடமைப்பு தொடர்பில் இந்தியா நேசக்கரம் நீட்டி வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.இந்நிலையில் இந்நிலைமைகள் தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில்  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கருத்து தெரிவித்திருந்தார்.இதன்படி அமைச்சின் வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 2015 இல் இருந்து இதுவரை பெருந்தோட்ட குடும்பங்களுக்கு 4258, வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு முடிவடைந்திருக்கின்றன. அதேநேரம் 1461 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வீடமைப்பு வேலைத்திட்டம் இரண்டு கட்டங்களாக இடம்பெறுகின்றன என்றார்.இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி, “பெருந்தோட்ட மக்கள் வாழ்வதற்கு பொருத்தமில்லாத இடங்களிலேயே ஏழு பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.200 வருடங்களுக்கும் அதிக காலம் தோட்ட மக்கள் லயன் அறைகளிலேயே வாழ்த்து வருகின்றனர்.

இது அவர்களின் மனித உரிமையை மீறும் செயலாகும்.தோட்டப்புற மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் காணிகளில் நாட்டின் தற்போதைய. நிலைமையில் வீடுகளைக் கட்டிக் கொடுப்பது சாத்தியமான காரியமல்ல.அதனால் அவர்களுள் வசதி இருப்பவர்கள் முடியுமான வகையில் வீடொன்றை நிர்மாணித்துக் கொள்ள காணி உரிமைப் பத்திரத்தை அவர்களுக்கு வழங்க முடியுமா? ” என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

தோட்டப் புற வீடமைப்பு என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக மந்த கதியில் இடம்பெற்று வரும் அதேவேளை முறையான திட்ட வரைவின் கீழ் வீடமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.மலையக அரசியல்வாதிகள் முறையான திட்ட வரைவு ஒன்றினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆட்சிபீடமேறும் அரசாங்கம் எதுவாயினும் அதற்கு அழுத்தம் கொடுத்து திட்ட வரைவின் அடிப்படையில் வீடமைப்பு நடவடிக்கையை முன்னெடுக்க மலையக அரசியல்வாதிகள் முனைதல் வேண்டும்.அத்தோடு இந்தியா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளின் பங்களிப்பினையும் உரியவாறு இதற்கென பெற்றுக் கொள்வதும் மிகவும் இன்றியமையாததாகும். இத்தகைய செயற்பாடுகள் வெற்றி பெறுவதற்கு மலையக அரசியல், தொழிற்சங்கவாதிகளிடையே ஐக்கியம், புரிந்துணர்வு என்பன அவசியமாகும்.

இதேவேளை மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், நூலாசிரியருமான அ.லோரன்ஸ் தனது நூலொன்றில் மலையக பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் வீடமைப்பு நிலைமைகளை சாதகமாக்கிக் கொள்ளும் நோக்கில் பல்வேறு சிபாரிசுகளை முன்வைத்திருந்தார்.மலையக மக்களுக்கான காணியுரிமையையும் வீட்டுரிமையையும் நிலைநாட்ட அவர்கள் தொடர்ந்து காணியில்லா, வீடில்லா சமூகமாக வாழாமலிருக்க இம்மக்களின காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பாக ஒரு தேசிய கொள்கை வகுக்கப்படுதல் வேண்டும். இதற்கமைய  10 தொடக்கம் 20 பேர்ச்சஸ் காணி ஒரு மலையக குடும்பத்திற்கு வழங்கப்படுதல் வேண்டும். நடைமுறையிலுள்ள பல்வேறு வகையான வீடமைப்புத் திட்டங்கள் ஒரு முகப்படுத்தப்பட்டு இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு பத்து வீதத்துக்கும் குறைவான வட்டியில் வீடமைப்பு கடன் வழங்கப்படுதல் வேண்டும்.பெருந்தோட்ட வீடமைப்பில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.தனித்தனி வீடுகள் கட்டுவதற்கு முன்னுரிமை அளிப்பதோடு, தேவையான சந்தர்ப்பங்களில் தேவையான இடங்களில் மாத்திரமே மாடி வீடமைப்பு தீர்வாக நோக்கப்படுதல் வேண்டும் என்று பல்வேறு விடயங்களை லோரன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.தோட்டப்புற வீடமைப்பை துரிதப்படுத்தவும், சாதகமாக்கிக் கொள்வதற்கும் இதுபோன்ற பல விடயங்களிலும் கவனம் செலுத்துவது அவசியமாகும்.