மக்களை சிரமங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பொறுப்பை ஏற்றேன்-ரணில்

இலங்கை மக்களை எதிர்காலத்தில் அவர்கள் எதிர்நோக்கவுள்ள சிரமங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பொறுப்பை ஏற்றேன் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமராக இன்று  மாலையில் பதவியேற்றுக் கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  ரணில்.  பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் நடவடிக்கைகளை தனியாக தம்மால் முன்னெடுக்க முடியாது என்றும் ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் உதவிகள் அத்தியாவசியம் எனவும்  தெரிவித்தார்.

மேலும் “மூன்று வேளைகளும் உணவு உட்கொள்ளும் வகையிலான பிரஜைகளாக இலங்கையர்கள் இருக்க வேண்டும். இலங்கை ரூபாவிற்கு பெறுமதி இருக்க வேண்டும். அத்துடன், இளைஞர்களுக்கு எதிர்காலமொன்று இருக்க வேண்டும்.

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை.   திங்கட்கிழமை அளவிலேயே அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளும்.

”கோட்டா கோ கம“ மீது நான் கை வைக்க மாட்டேன். அதனை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். காவல்துறையினரும்  அதற்கு எதையும் செய்ய மாட்டார்கள்” என்றார்.

அதே நேரம் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,

கேள்வி:- ரணில் கோ கம என்ற ஒரு போராட்ட வடிவம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தற்போது கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. அது குறித்து உங்களின் கருத்து என்ன?

பதில் :- ரணில் கோ கம என்று ஒன்று உருவாக்கவில்லை. ரணில் கோ ஹோம் கம என்ற உருவாக்கி, எமது வீட்டிற்கு முன்பாக இருந்தனர். அது பிரச்னையாகியது. இந்த இடத்தில் ஒன்று மாத்திரமே உள்ளது. கோட்டா கோ கம என்ற அமைப்பு மாத்திரமே உள்ளது. ஏனையோருக்கும் கோ ஹோம் என கூற முடியும் அல்லவா?”

கேள்வி:- நாட்டில் தற்போது அரசியல் ஸ்திரமற்ற நிலைமை ஒன்று காணப்படுகின்றது. இதற்கு நிரந்தர தீர்வொன்று கிடைக்குமா?

பதில் :- ஆம்… ஆம்..

கேள்வி:- பெரும்பான்மை தொடர்பில் ஏதாவது பிரச்னை வருமா?

பதில் :- இல்லை. இல்லை.. பெரும்பான்மை தொடர்பில் பிரச்னை இல்லை. பெரும்பான்மை காண்பிக்கின்றேன்.

கேள்வி:- நாடாளுமன்றத்திற்குள் எவ்வாறு பெரும்பான்மையை காண்பிப்பீர்கள். அரசாங்கத்திடமிருந்து பெரும்பான்மை கிடைத்துள்ளதையா நீங்கள் கூறுகின்றீர்கள்?

பதில்:- எனக்கு இரண்டு பக்கங்களிலும் பெரும்பான்மை உள்ளது. நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் இன்று துன்பங்களை அனுபவித்து வருவதை நிறுத்த வேண்டுமா? இல்லையா? நீங்கள் கூறுகின்றீர்கள், குறுகிய அரசியலை நடத்துவதற்காக மூன்று வேளைகளிலும் உணவு உட்கொள்ளா விட்டாலும் பரவாயில்லை. எமக்கு பெட்ரோல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எமக்கு டீசல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எமக்கு மின்சாரம் இல்லை என்றாலும் பரவாயில்லை. இந்த அனைத்தையும் நான் பெற்றுக்கொடுப்பேன், நாடாளுமன்றத்திலுள்ள அனைவரது ஆதரவுடனும் இதனை நான் பெற்றுக்கொடுப்பேன்.

Tamil News