பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்படுவதைவிட முற்றாக நீக்கப்பட வேண்டும்- சட்டத்தரணி சுகாஸ்

பயங்கரவாத தடை சட்டம்

பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்படுவதை விட முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பது தான் ஈழத்தமிழ் மக்களது நிலைப்பாடாக இருக்கிறது என  வழக்கறிஞர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினுடைய கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத் தொடரிலும் ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்தது போல,   பொறுப்பு கூறல் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து விடுவித்து சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கிய ஒரு சர்வதேச விசாரணைக்கான நகர்வுகளுக்கான எந்தவிதமான ஏற்பாடுகளும்   மேற்கொள்ளப் படவில்லை என்பது ஈழத்தமிழர்களை பொறுத்தவரையில் வேதனையான விடயம்.

தொடர்ந்தும் பொறுப்பு கூறலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் வைத்திருப்பதற்கு அரசாங்கமும், அரசாங்கத்துக்கு சார்பான சில சர்வதேச நாடுகளும்  செயல்படுவது கவலைக்கிடமான விடயம். இந்த பொறுப்பு கூறலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்குவதனால் ஈழத்தமிழர் களுக்கு ஒருபோதும் எந்த விதமான தீர்வோ, நீதியோ கிடைக்கபோவது கிடையாது.

எங்களை பொறுத்தவரையில் ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கான பொறுப்பு கூறுகின்ற அந்த விசாரணையானது முற்றுமுழுதான ஒரு சர்வதேச விசாரணையாக சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றத்திலே நடைபெற வேண்டும். அல்லது குறைந்தபட்சம் ஒரு விசேட தீர்ப்பாயமாவது அமைக்கப்பட வேண்டும். அதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை தரும். ஒரு போதும் குற்றவாளிகளை நீதிபதிகளாக கொண்ட உள்ளக விசாரணையின் மூலம் ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க போவது கிடையாது.

அதேவேளை கடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலே நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில் இலங்கையிலே இருக்கின்ற பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற மாதிரியான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான எந்த விதமான காத்திரமான நடவடிக்கைகளும் இன்றுவரை இலங்கை அரசால் மேற்கொள்ளப்படவில்லை.

கொண்டுவர இருப்பதாக கூறப்படுகின்ற சீர்திருத்தம் கூட மேற்பார்வைக்கு திருத்தங்களை செய்தது போல் தெரிந்தாலும் தமிழ் தேசிய இனத்தை, பாதிக்கக் கூடிய சட்டங்கள் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதையே அவதானிக்க முடிகிறது. ஆகவே பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்படுவது என்பதை காட்டிலும் அது முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதுதான் ஈழத்தமிழ் மக்களது நிலைப்பாடாக இருக்கிறது”  என்றார்

Tamil News