Tamil News
Home செய்திகள் திருகோணமலைத் துறைமுகத்தில் சீன ஆதிகத்தை தடுப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு முக்கியம் – சி.வி.விக்னேஸ்வரன்

திருகோணமலைத் துறைமுகத்தில் சீன ஆதிகத்தை தடுப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு முக்கியம் – சி.வி.விக்னேஸ்வரன்

திருகோணமலைத் துறைமுகத்தில் சீன ஆதிக்கம் பெருக விடாது தடுத்தல் இந்தியாவிற்கு பாதுகாப்பு முக்கியத்துவமானதொன்று என்று தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், இந்தியாவுடன் இலகுவில் இணைக்கப்படக் கூடியதும் நெருங்கியதுமான மன்னார்த் தீவுக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையேயான போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு இந்திய – இலங்கை உறவாடல் என்பது அயல் நிலப்பரப்பான தமிழ் நாட்டினூடாகக் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒன்பதாம் ஆண்டு மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அம்மாநாட்டில் இலங்கையில் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி எனும் தலைப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவரது உரையில் மேலும் தெரிவித்ததாவது, தமிழர்கள் பெரும்பான்மையாக செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பிராந்தியங்களின் பொருளாதாரம் மிகை மதிப்பூட்டப்பட்ட கைத்தொழில் மற்றும் சேவைகளின் பொருளாதாரமாகவும் அறிவுசார் பொருளாதாரமாகவும் முதன்மையாக வடிவமைக்கப்பட வேண்டும்.

கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உருவாகி முன்னகர்ந்து கொண்டிருக்கும் பொருளாதார முதலீடுகளிலும் நிதி, வர்த்தகம், சேவைக்கைத்தொழில் மூலமான நிறுவனங்கள் ஆகியவற்றிலும் தமிழர்கள் தலைமைத்துவத்தையும் அவர்களின் ஆளுமையின் முத்திரைகளையும் பதிக்கும் வகையில் தமிழர்களின் அறிவும், ஆற்றலும், நிறுவனங்களும் பரந்து பட்டு மேலெழவேண்டும்.

புலம் பெயர் தமிழர்கள் தாயக சமூகத்தின் மீளெழுச்சிக்காக தங்களது வளங்களை முதலிட முன் வரும் போது தென்னிந்தியாவைச் சேர்ந்த தொழில் முனைவாளர்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதி – இறக்குமதியாளர்கள், முதலீட்டாளர்கள், சேவைத்துறை சார்ந்தவர்கள் போன்றவர்களுடன் இணைந்து இலங்கையில் முதலிட வேண்டும்.

இவ்வாறு செய்தால் முதலீட்டு பாதுகாப்பும், சிறப்பான வழிகாட்டல், தொழிநுட்பம் மற்றும் ஆலோசனை சேவைகளும் உறுதிப்படுத்தப்படுவன. இங்குதான் எங்கள் யாவரதும் ஒற்றுமை வெகுவாக வேண்டப்படுகின்றது.

திருகோணமலைத் துறைமுகத்தில் துறைமுகம்சார் பாரிய கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கம் கொண்ட பாரிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கான சாத்தியப்பாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை இந்திய அரசும் முதலீட்டாளர்களும் விரைந்து தங்கள் முதலீட்டு வலையத்தினுள் கொண்டு வருவதன் மூலம் வட கிழக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி மலையத்தின் மலையக தமிழ் இளைஞர் யுவதிகள் பலரும் பெருநன்மையடைவர்.

ஆகவே இலங்கையில் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் என்பது அவர்களது பேரம்பேசும் ஆற்றலினையும் ஆளுமையினையும் பலங்கொண்ட தந்திரோபாய ரீதியாக முன்னிறுத்துவதேயாகும்.

இதற்கு இன்று முதன்மையாக தேவைப்படுவது தென்னிந்தியாவின், குறிப்பாக தமிழ் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுடன் இலங்கைத்தீவின் தமிழர்களின் பொருளாதார முனைப்புக்களையும் அபிவிருத்தி மூலோபாயங்களையும் ஒருங்கிணைப்பதுடன் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் பங்களிப்புக்கள் யாவும் இந்திய தொழில் முனைவாளர்களுடன் இணையும் விதத்தில் உள்ளீர்க்கப்படுவதாகும் என்றார்.

Exit mobile version