Tamil News
Home செய்திகள் ஜனாதிபதித் தேர்தல்: குழப்பத்தில் மொட்டு! இரகசியச் சந்திப்புக்கள்!

ஜனாதிபதித் தேர்தல்: குழப்பத்தில் மொட்டு! இரகசியச் சந்திப்புக்கள்!

பாராளுமன்றத்தில் நாளை மறதினம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பதில் ஜனாதிபதியை ஆதரிப்பது என்ற முடிவை மொட்டு கட்சி எடுத்திருப்பதாக அதன் பொதுச்செயலாளர் அறிவித்திருப்பது கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தக் கருத்துடன் முரண்படுகின்றார். டளஸ் அழகப்பெருமவுக்குத்தான் மொட்டு வாக்களிக்கும் என்பது அவரது நிலைப்பாடு. அவருடன் மொட்டு அணியின் மேலும் சிலரும் இணைந்திருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில் மொட்டு கட்சியின் எம்.பி.க்கள் பலர் கொள்ளுப்பிட்டியிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் சந்தித்து இரகசிய ஆலோசனைள நடத்தினார்கள். தலைமைகள் தலைமறைவாகியிருப்பதால் அவர்களும் தடுமாறுகிறார்கள் என்பதை இதன்போது உணரமுடிந்தது.

கட்சி பிளவுபட்டுள்ள நிலையில் வாக்கெடுப்பும் இரகசியமாக நடைபெறுவதால் – அதன் பின்னர் தமது தொகுதிகளுக்குச் செல்வது எவ்வாறு என பெரும்பாலான எம்.பி.க்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றார்கள். இப்போதும் பெரும்பாலான எம்.பி.க்கள் தமது தொகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்ததுள்ளார்கள்.

இந்த அச்சம் காரணமாக இரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விடுவது என்ற நிலைப்பாட்டை மொட்டு எம்.பி.கள் சிலர் எடுக்கலாம் என சிங்கள இணையத்தளம் ஒன்று மொட்டு உறுப்பினர்களை ஆதாரம் காட்டி வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவித்திருக்கின்றது.

அடுத்த இரண்டு நாட்களும் திரைமறைவில் பல சம்பவங்கள் – பேரங்கள் பரபரப்பாக நடைபெறப்போகின்றது என்பதைத்தான் இந்தச் செய்தி உணர்த்துகின்றது!

இந்நிலையில்,தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை செவ்வாய்கிழமை 19ம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு நுகேகொடை ஏகநாயக அவனியுவில் அமைந்துள்ள கட்சி செயலகத்தில் கூடி, 20ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் சமர்பித்துள்ள அனைத்து வேட்பாளர்கள் தொடர்பிலும், கலந்துரையாடி முடிவெடுக்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவத்துள்ளார்.

Exit mobile version