மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவி விலக வேண்டும் – சாணக்கியன்

அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி

மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பாக காலியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மிக விசேடமாக கூறிய விடயங்களைப் பார்த்தால், தன்னை மக்கள் ஜனாதிபதியாக வருமாறு விடுத்த அழைப்பினை ஏற்றே தான் ஜனாதிபதியாக அரசியலுக்கு வந்ததாக அவர் கூறியிருந்தார்.

அது ஒரு அளவிற்கு தெற்கிலே இந்த மக்கள் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தமை உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஜனாதிபதி மக்களுடைய கோரிக்கைக்கு இணங்கவே அரசியலுக்கு வந்தார் என்று சொன்னால், இன்று மக்களுடைய கோரிக்கைக்கு இணங்கி அவர் பதவி துறந்து வீட்டுக்கு செல்ல வேண்டும்.

இன்று இலங்கையினுடை அனைத்து பிரதேசங்களிலும் “GO HOME GOTA“ என்று சொல்லும் ஒரு நிலையில், அவர் மக்களினுடைய கருத்தினைக் கேட்டு அரசியலுக்கு வந்தவர், மக்களுக்காக அரசியலுக்கு வந்தவர் என்று சொன்னால், இன்று மக்கள் என்ன கேட்கின்றார்கள் என பார்த்தால் அவரை வீட்டுக்கு செல்லுமாறு  கேட்கின்றனர்.

ஆகவே அந்த அடிப்படையில் அவர் இன்று தனது பதவியினை இராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தின் உதவியினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் தனது உரையில் தெரிவித்திருந்தார். இதனையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

அத்துடன், அவரால் இந்த நாட்டினை சிறந்த முறையிலே நடத்த முடியாது. இந்த நாட்டில் ஜனாதிபதியின் சுபீட்சமான நோக்கம் என எதுவும் கிடையாது.“ எனத் தெரிவித்துள்ளார்.

Tamil News