மாந்தை கிழக்கு மக்கள் ஐனாதிபதி செயலகத்துக்கு அவசர கடிதம்

mt kani மாந்தை கிழக்கு மக்கள் ஐனாதிபதி செயலகத்துக்கு அவசர கடிதம்

மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினரான செந்தூரன் உள்ளிட்டவர்கள் தங்களுடைய காணி அபகரிப்பு நடவடிக்கைகளை மறைக்கவே அரச அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும் என கோருவதாக ஐனாதிபதியின் செயலாளருக்கு மாந்தை கிழக்கு மக்கள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்

குறித்த கடிதத்தில்,

“மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவை சேர்ந்த மக்களாகிய நாங்கள் போரின் பின்னர் மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் மூலம் பல நன்மைகளை பெற்று எமது வாழ்வை சிறிது சிறிதாக கட்டமைத்து வருகின்றோம்.

எமது இந்த அபிவிருத்திக்காக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளராகிய செல்வி.நிரஞ்சனா அவர்களும், காணி உத்தியோகத்தராகிய லக்ஸ்மன் அவர்களும் அயராது பாடுபடுகின்றனர். ஆனால் அண்மைக் காலமாக மந்தை கிழக்கு தவிசாளர் முறையற்ற விதத்தில் மூன்று முறிப்பு – புதுக்குளம் பிரதேசத்தில் போலியான உறுதியை கொண்டு 60 ஏக்கர் காட்டை அழித்து விட்டார், இத்துடன் உழுவநரி பிரதேசத்திலும் 15 ஏக்கர் காட்டை அழித்து விட்டார், அத்துடன் பிரதேச சபை மூலமாக நடக்கின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஊழல் செய்து குறுகிய காலத்தில் வருமானத்துக்கு மேலதிகமாக வல்வெட்டி துறையில் ஆடம்பர பங்களா கட்டி குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார்.

இது தவிர மாந்தை கிழக்கு பிரதேசசபை உறுப்பினரான செந்தூரன் தனது சொந்த கனகரக வாகனம் மூலம் மாந்தை கிழக்கு பிரதேச காடுகளை அழிக்க முயன்று இரண்டு முறைக்கு மேல் பொலிசார் கைது செய்து எச்சரிக்கை செய்து விடுவிக்கப் பட்டார். இவரது காடழிப்பு போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்ததால் தற்போது இவரது கனகரக வாகனம் முல்லைத்தீவு நீதிமன்றில் பாரப்படுத்தப் படுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த தவிசாளர், மற்றும் உறுப்பினர் செந்தூரன் மக்களுக்காக சிறப்பாக சேவையாற்றி வரும் பிரதேச செயலாளர் மற்றும் காணிக் கிளை உத்தியோகத்தர்கள் மீது அடுக்காக போலியான குற்றச் சாட்டுகளை முன்வைத்து அவர்களது வினைத் திறமையான மக்கள் சேவைகளை நடைபெற விடாமல் தடுத்து வருகின்றனர்.

இது தவிர அரச காணிகளை போலியான ஆட்சி உறுதி தயாரித்து கைப்பற்றும் ஒரு சிலரும் இவர்களுக்கு உடந்தையாக உள்ளனர். இவர்கள் தங்களின் கொள்ளை யடிப்புக்காக முறையற்ற விதத்தில் இடம் மாற்றம் செய்வதற்கு பிரதேச சபை தவிசாளர் தனது அரசியல் அதிகாரத்தை பயன் படுத்துகிறார்.

இது தொடர்பாக தங்களின் விசேட உடனடியான நடவடிக்கைகளை மேற் கொண்டு, பிரதேச மக்களாகிய எமக்கு நீதி பெற்று தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்”என தெரிவிக்கப் பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான், வடமாகாண பிரதம செயலாளர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, உள் நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு, காணி ஆணையாளர் வடமாகாணம் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 மாந்தை கிழக்கு மக்கள் ஐனாதிபதி செயலகத்துக்கு அவசர கடிதம்