இருப்பும் கட்டமைப்பு மாற்றமும்- துரைசாமி நடராஜா    

பெருந்தோட்ட மக்களின் நகர்ப்புறம் நோக்கிய இடப்பெயர்வு மேலோங்கி வருகின்றது. இந்நிலைமையானது சமூகக் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளதோடு சாதக, பாதக விளைவுகளைக்கும் வித்திட்டுள்ளது.குறிப்பாக பெருந்தோட்டங்களின் இருப்பு தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் இடப்பெயர்வுகள் தோட்டங்களின்  இருப்பினை கேள்விக்குறியாக்கக்கூடுமென்றும் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

 மலையக பெருந்தோட்ட சமூகம் இந்த நாட்டில் மிக் நீண்ட வரலாற்றினைக் கொண்ட ஒரு சமூகமாக விளங்குகின்றது.தேயிலைத் தொழிற்றுறையின் அபிவிருத்தியிலும் தேசிய வருவாயில் அதிகரித்த அந்நிய செலாவணியை  பெற்றுக் கொடுப்பதிலும் இச்சமூகத்தின் வகிபாகம் மிகவும் அளப்பரியதாகும் என்பதை மறுப்பதற்கில்லை. 1959 இல் இலங்கையின் அந்நிய செலாவணி உழைப்பில் தேயிலையின் பங்கு 59.6 வீதமாகவும், 1976 இல் 43.6 வீதமாகவும இருந்தது.

இது 1978 இல் 48.5, 1982 இல் 29.6, 1986 இல் 27.2, 1987 இல் 25.9, 1990 இல் 24.9 வீதமாக இருந்தது.எனினும் காலப்போக்கில் சிறு தோட்டங்களின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் பெருந்தோட்டங்கள் படிப்படியாக பின்னடைவு காண ஆரம்பித்தன.தேசிய வருமானத்தில் பெருந்தோட்டங்களின் பங்களிப்பு மெது மெதுவாக சரிவடையும்  நிலைமை இதனால் மேலெழுந்தது.தேயிலை உற்பத்தியில் சிறு தோட்டங்கள், பெருந்தோட்டங்களை முந்திச் செல்லும் போக்கும் காணப்பட்டது.

இதனடிப்படையில் நோக்குகையில் 1995 இல் பெருந்தோட்ட தேயிலை உற்பத்தி 168.8 மில்லியன் கிலோ கிராமாகவும், சிறு தோட்டங்களில் 111.3 மில்லியன் கிலோ கிராமாகவும் காணப்பட்டது.2000 மாம் ஆண்டில் இது முறையே 100.1, 183.8 மில்லியன் கிலோ கிராமாகவும்,2005 இல் 111.5,  205.7 மில்லியன் கிலோ கிராமாகவும் அமைந்திருந்தது.2017 இல் பெருந்தோட்ட தேயிலை உற்பத்தி 104 மில்லியன் கிலோ கிராமாகவும், சிறுதோட்ட தேயிலை உற்பத்தி 244 மில்லியன் கிலோ கிராமாகவும் இருந்தது.இதனை மையப்படுத்தி நாம் நோக்குகையில் சிறு தோட்டங்களின் எழுச்சியையும், பெருந்தோட்டங்களின் வீழ்ச்சியையும் நன்றாக புரிந்து கொள்ள முடிகின்றது.பெருந்தோட்ட விடயத்தில் அரசாங்கத்தின் பாராமுகம் இத்துறையின் வீழ்ச்சிக்கு வலு சேர்ந்திருந்தது .

இதேவேளை ஆரம்ப காலத்தில் தேயிலைத் தொழிற்றுறையை மட்டுமே நம்பி இருந்த பெருந்தோட்ட சமூகம் காலப்போக்கில் இடப்பெயர்வின் ஊடாக பல்வேறு தொழிற்றுறையிலும் கால்பதிக்கும் நிலைமை உருவானது. இது அச்சமூகத்தின் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. பெருந்தோட்ட மக்களின இடப்பெயர்விற்கு பல காரணிகள் வலுசேர்த்திருந்தன.வேலையின்மை,வருமான வீழ்ச்சி,   பெருந்தோட்டத் தொழிற்றுறை இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியான துறையாக இல்லாமை, நிர்வாகக் கெடுபிடிகள், கல்வி அபிவிருத்தி, நகர்ப்புற மோகம் எனப்பலவற்றையும் இடப்பெயர்விற்கு உந்துசக்தியாக அமைந்ததாக கூறமுடியும்.1972 இல் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் உருவான வேலையின்மைப் பிரச்சினை, உணவுப் பற்றாக்குறை என்பவற்றால் கணிசமான பெருந்தோட்ட மக்கள் வட மாகாணத்திற்கு சென்று அங்கு பல தொழிற்றுறைகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் வவுனியா, கிளிநொச்சி ஆகிய இடங்களில் அதிகமாக சென்று குடியேறிய நிலையில் இந்திய மற்றும் மலையக அடையாளங்களைக் கைவிட்டு உள்ளூர் மக்களுடன் இவர்கள் கலந்து விட்டுள்ளமை தொடர்பில் புத்திஜீவிகள் தமது அதிருப்தியினை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

நிர்வாகக் கெடுபிடிகள்

தோட்டத் தொழிலாளர்கள் குறைந்தளவு ஊதியத்தையே நாட்சம்பளமாக பெற்றுக் கொள்கின்றனர்.வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு ஊதிய அதிகரிப்பு வழங்கப்படுகின்றபோதும்  பெருந்தோட்டத் தொழிலாளர்களின்  சம்பள அதிகரிப்பு என்பது பெரும் இழுபறிக்கு மத்தியிலேயே சாத்தியமாகின்றது. அதிலும் ஒரு சொற்பதொகை ஊதியமே அதிகரிக்கின்ற நிலையில் அதனை பெற்றுக் கொள்வதிலும் இழுபறிகளே தொடர்ந்த வண்ணமுள்ளன.

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் இந்த ஊதியம் எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை என்பதும் தெரிந்ததேயாகும். இதேவேளை தற்போதைய நெருக்கீடுகளுக்கிடையில் உணவுப் பொருட்களின் பண வீக்கம் மார்ச் மாதத்தில் நூற்றுக்கு 29.5 ஆக பதிவாகியுள்ளதுடன் அது ஏப்ரல் மாதத்தில் நூற்றுக்கு 45.1 ஆக பதிவாகியுள்ளதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 14.5, ஏப்ரல் மாதத்தில் 23.9 வீதமாக பதிவாகி இருக்கின்றது. இதற்கமைய மார்ச் மாதத்திற்கு இணையாக ஏப்ரல் மாதத்தில் குடும்பமொன்றின் மாதச் செலவு 5672.59 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையானது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.அத்தோடு வருமான மேம்பாடு கருதிய தொழிலாளர்களின் இடப்பெயர்விற்கும் இது இப்போது அதிகமாகவே தூபமிடுவதாகவுள்ளது.

பெருந்தோட்ட தொழிற்றுறையில் இன்று பல்வேறு கெடுபிடிகள் நிலவும் நிலையில் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் உள்ளிட்ட பலவேறு உரிமைகளும் பறிக்கப்படுவதாக விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.கம்பனியினர் தொழிலாளர்களை வழிநடத்தும் விதம், அவர்களின் நலனோம்புகை என்பன கீழ்நிலையிலுள்ளன.பழைமை வாய்ந்த தோட்டப்புற லயன்கள் இடிந்து விழும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ள போதும் கம்பெனிகள் அதனைக் கண்டு கொள்ளாது தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதையே குறியாகக் கொண்டுள்ளன.

கம்பனியினரால் தொழிலாளர்களின் நலன்கள் புறந்தள்ளப்படுகின்றமையானது கம்பனியினருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே விரிசல் நிலை ஏற்படவும் வித்திட்டிருக்கின்றது.இதனாலும் இடப்பெயர்வுகள் அதிகரித்துள்ள நிலையில் இன்றைய இளைஞர்கள் கம்பனியினரின் கெடுபிடிகளை மையப்படுத்தி தோட்டத் தொழிற்றுறையை ஓரங்கட்டுவதற்கும் வாய்ப்பாகி விடுகின்றது.

எனவே இளைஞர்கள் நகர்ப்புற தொழில்களை நோக்கி படையெடுப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.எனினும் நகர்ப்புறங்களில் தொழிற்றுறை ரீதியாக அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், கலாசார சீரழிவுகள் என்பன அதிகமாகும்.பல இளைஞர்கள் இத்தகைய  விடயங்களை வெளிச்சொல்ல முடியாமல் தொழில் மற்றும் வருமான தேவைகருதி சேவையாற்றி வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

நகர்ப்புறங்களில் தொழில்களில் ஈடுபட்டு வருகின்ற யுவதிகள் எதிர்கொள்ளும் நெருக்கீடுகள் இளைஞர்களைக் காட்டிலும் ஒருபடி அதிகமேயாகும்.உள மற்றும் உடல் ரீதியான நெருக்கீடுகளும் இதில் உள்ளடங்கும்.தேயிலைத் தொழிற்றுறையில் நாட்டமில்லாது ஆடைத் தொழிற்றுறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பவற்றிலும் பெண்களின் வகிபாகம் அதிகமாகவே காணப்படுகின்றது.இங்கும் அதிகரித்த வேலைப்பளுவுக்கிடையில் இவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் அதிகமுள்ளன.

கலாசார மாற்றம்

பெருந்தோட்ட மக்களிடையே தற்போது கல்வி அபிவிருத்தி ஏற்பட்டு வருகின்றது.ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்கல்வி என்பன குறித்த ஈடுபாடுகள் அதிகரித்துள்ளன.பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள இளைஞர்களில் பலர் ஆசிரியர், கிராம சேவகர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ள நிலையில் ஏனைய தொழிலாளர்களும் கல்வியூடாக தமது பிள்ளைகளிடையே அபிவிருத்தியை ஏற்படுத்த முனைந்து வருகின்றனர்.இது ஒரு நல்ல சகுனமாகும்.

பெருந்தோட்ட கல்வி வளர்ச்சிக்கு இதுவும் உந்துசக்தியாக அமைந்திருக்கின்றது.அரச தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ளவர்களில் பலர் தமது பிள்ளைகளின் கல்வி மற்றும் தமது உயர்கல்வி, பெற்றோரின் மருத்துவ தேவைகள், போக்குவரத்து போன்ற பலவற்றையும் மையப்படுத்தி நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.பெருந்தோட்டக் கட்டமைப்புக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்தவர்கள் அந்த நிலையில் இருந்தும் விடுபட்டு வெளிச்செல்வதில் ஈடுபாடு காட்டி வருவதனை அவதானிக்க முடிகின்றது.எனவே பெருந்தோட்ட சமூக இடப்பெயர்விற்கு கல்வியும் கைகொடுத்திருக்கின்றது.

பெருந்தோட்ட மக்களின் இடப்பெயர்வு பல சாதக விளைவுகளுக்கும் அடித்தளமாகியுள்ளது என்பதனையும் மறுப்பதற்கில்லை.இடப்பெயர்வின் காரணமாக கலாசார ரீதியாக முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.பல நல்ல விடயங்களை இளைஞர்கள் உள்வாங்கிக் கொண்டுள்ளதோடு அவற்றை தமது தனிப்பட்ட, குடும்ப மற்றும் சூழலிலும் எதிரொலிக்கச் செய்கின்றனர்.இது ஒரு சிறப்பம்சமாகும். அத்தோடு வீட்டின் அபிவிருத்தி, அலங்கார ரீதியான செயற்பாடுகள், வைபவ ஏற்பாடுகள் என்பவற்றிலும் ஒரு முன்னேற்றகரமான போக்கினை இடம்பெயர்ந்தவர்களில் பலர்  கையாளுகின்றனர்.நாகரீக ரீதியான மாற்றங்களும் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை நகர்ப்புற இடப்பெயர்வு சில வேளைகளில் கலாசாரம், நாகரீகம், வாழ்வியற் போக்குகள் என்பவற்றில் பிழையான கையாளுகை, வெளிப்பாடு என்பவற்றுக்கும் வலுசேர்த்திருக்கின்றது என்பதும் நீங்கள் அறிந்த விடயமேயாகும்.எந்த ஒரு மனிதனுக்கும் இரண்டு பக்கங்கள் இருப்பதாக கூறுவார்கள்.இந்த வகையில் மனிதனின் செயற்பாடு நல்லதாகவே அல்லது தீயதாகவோ அமைதல் கூடும்.

எந்தவொரு சமூகத்தினதும் சமூகக் கட்டமைப்பு என்பது மாற்றங்களுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாததாகும்.இந்த வகையில் பெருந்தோட்ட சமூகத்தின் கட்டமைப்பு  என்பது துரிதமாக மாறுதல்களுக்கு உள்ளாகிவரும் நிலையில்  இச்சமூகத்தின் இடப்பெயர்வு மத்தியதர வர்க்கத்தை நோக்கி நகர்வதற்கு அடித்தளமாகி இருக்கின்றது.

இது சிறப்பானதேயாகும்.இவற்றுக்கும் மத்தியில் தொழிலாளர்கள் மற்றும் தோட்டங்களின்  இருப்பு தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.சமகால பல்வேறு நெருக்கீடுகளுக்கு மத்தியில் தோட்டத்துறை தாக்கு பிடிப்பது ஒரு சவாலான காரியமாகும் என்ற விமர்சனங்கள் பரவலாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் தொழிலாளர்களின் நகர்ப்புறம் நோக்கிய நகர்வு சாதக விளைவுகள் பலவற்றுக்கும் வித்திடுவதாக உள்ளபோதும் தோட்டங்களின் இருப்பினை  கேள்விக்குறியாக்குவதில் அது செல்வாக்கு செலுத்தும் என்பதையும் மறுத்துவிட முடியாது.