கேரளாவில் கர்ப்பிணி  தாய் ஒருவர்  ஸிகா வைரஸால் பாதிப்பு

ZikaVirus Mosquito கேரளாவில் கர்ப்பிணி  தாய் ஒருவர்  ஸிகா வைரஸால் பாதிப்பு

கேரளாவில் கர்ப்பிணி தாய் ஒருவருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது.

அறிகுறிகள் தென்பட்ட சுமார் 14 பேரின் இரத்த மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய கிருமியியல் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவர்களில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 24 வயதுக் கர்ப்பிணி தாய் ஒருவருக்கு ஸிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் ஸிகா வைரஸ் பரவுகிறது. காய்ச்சல், தோலில் சொறி, மூட்டு வலி, தலைவலி உள்ளிட்டவை ஸிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாகும்.

1947-ஆம் ஆண்டு உகாண்டா காடுகளில் கண்டு பிடிக்கப்பட்ட ஸிகா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழக கேரள எல்லை செறுவாறகோணம் பகுதியில் 30-க்கும் மேற்பட்டவர்களிடம் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதுபோல கேரள சுகாதாரத்துறை சார்பில், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

ஜிகா, குமரி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க தமிழக  சுகாதாரத் துறை சார்பில் எல்லை பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுவடைந்துள்ளது.