சக மனிதர்களிடம் மனிதாபிமானத்தை பின்பற்றுங்கள்- ஐ.நா செயலாளர் நாயகம் வலியுறுத்து

உலகளாவிய ரீதியில் பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் கௌதம புத்தரின் போதனைகளான சகிப்புத்தன்மை, கருணை, மனிதாபிமானம் ஆகிய பண்புகளை பின்பற்றி நடப்பது இன்றியமையாததாகும் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கௌதம புத்தரின் பிறப்பு மற்றும் பரிநிர்வாணமடைதலைக் குறிக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கும் அவர், இத்தினத்தை கொண்டாடுவதன் நோக்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகளுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கிடையிலான புரிந்துணர்வு, நிலையான அமைதி மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் என்பனவே அவையாகும் என்றும் அன்ரோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் கௌதம புத்தரின் போதனைகளான சகிப்புத்தன்மை, கருணை, மனிதாபிமானம் ஆகியவற்றை பின்பற்றுவது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி அனைவரும் வாழ்வதற்கு ஏற்புடைய அமைதியானதும் சமாதானமானதுமான உலகத்தை கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.