Home ஆய்வுகள் ஆட்டம் காணும் அரசியல் நிலையும், பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் | பி.மாணிக்கவாசகம்

ஆட்டம் காணும் அரசியல் நிலையும், பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் | பி.மாணிக்கவாசகம்

அரசியல் நிலைபி.மாணிக்கவாசகம்

ஆட்டம் காணும் அரசியல் நிலை

கட்டுக்கடங்காத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள மோசமான சிரமங்கள் என்பவற்றுக்கு மத்தியில் 13 மணிநேர மின்வெட்டு காரணமாக  இலங்கை மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வாழ்க்கை நெருக்கடி நிலைமைக்கு அடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் நாட்டின் அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கின்றன.

இந்தப் பேச்சுவார்த்தைகள் இலகுவாகவும், உடனடியாகவும் ஆரம்பிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தமிழ் அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது குதிரைக் கொம்பாகவே இருந்து வந்தது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச பொதுஜன பெரமுன என்ற மொட்டுக் கட்சியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்கியபோது, அந்தத் தேர்தலை யொட்டி அவருடன் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் குறித்து பேச்சுக்கள் நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக மிகத் தீவிரமான இனவாத அணுகு முறையையும், பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத் தேர்தல் பிரசாரத்திலும் முனைப்புடன் ஈடுபட்டிருந்த கோட்டாபய தமிழ்த் தலைவர்களின் பேச்சு வார்த்தைக்கான கோரிக்கையைக் கண்டு கொள்ளவே இல்லை. அதனை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கவனத்திற் கொள்ளாமல் உதாசீனம் செய்திருந்தார்.

தேர்தலில் 69 லட்சம் சிங்கள பௌத்த மக்களுடைய வாக்குகளைப் பெற்று வரலாற்றுச் சாதனையாக ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து இடம்பெற்ற விகிதாசார முறையிலான பொதுத் தேர்தலிலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று அவர் அமோக வெற்றியீட்டினார். ஆட்சி அமைத்த பின்னரும் தமிழ்த் தலைவர்களினால் விடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைக்கான வேண்டுகோளையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புறக்கணித்திருந்தார்.

மூன்றாண்டுகளில் இடம்பெறுகின்ற முதலாவது பேச்சுவார்த்தை

அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் பல தடவைகள் கோரியிருந்தனர். இரண்டு தடவைகள் பேச்சு வார்த்தைகளுக்கான அறிவிப்புகள் ஜனாதிபதியிடமிருந்து வெளிப்படுத்தப் பட்டிருந்தது. எனினும் காரணங்கள் தெரிவிக்கப்படாத நிலையில் அந்தப் பேச்சுக்கள் கடைசி நிமிடத்தில் இரத்துச் செய்யப்பட்டன.

இந்த வருடம் பெப்ரவரி மாதம் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே மார்ச் 25 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச சகிதம் அரச முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினருடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தூதுக்குழுவைச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தினார். ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆட்சி நடத்திய மூன்று ஆண்டு காலத்தில் நாட்டின் முக்கிய தமிழ்த் தரப்புத் தலைவர்களுடன் இடம்பெறுகின்ற முதலாவது பேச்சுவார்த்தை  இது என்பது குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தினால் தமிழ் மக்களே பெரிதும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், விடுதலையின்றி சிறைச்சாலைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள், உயிரழிவு காரணமாக விதவைகளாக குடும்பத் தலைமைத்துவப் பொறுப்புக்களை ஏற்றுள்ள குடும்பப் பெண்கள், உடற்சிதைவுகளுக்கு ஆளாகி மாற்றுத்திறனாளிகளாக வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற மாற்றுத்திறனாளிகள் என பல்வகையினர் போரின் எச்சங்களாக தமிழ்ச் சமூகத்தில் நடைப்பிணத்தை ஒத்த நிலையில் வாடுகின்றார்கள். போர் முடிவுக்குப் பின்னரான கடந்த 13 வருடங்களாக இந்த நிலைமை நீடிக்கின்றது. இவர்களுடைய பிரச்சினைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவரது அரசும் கவனத்திற் கொள்ளவே இல்லை.

இதையும்விட ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் முன்வைக்கப்பட்ட நிலைமாறு கால நீதியை நிலைநாட்டும் செயற்பாடு, யுத்தகாலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக் கூறலும், நியாயத்தையும் இழப்பீட்டையும் வழங்குதல் உள்ளிட்ட பொறுப்புக் கூறுகின்ற கடப்பாட்டையும் கொண்டுள்ள போதிலும், அதனை நிறைவேற்றாமல் அரசுகள் இழுத்தடிப்புச் செய்து கொண்டிருக்கின்றன.

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற எத்தனிப்பு 

குறிப்பாக பொறுப்புக் கூறும் விடயத்தில் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு வழங்கிய உறுதிமொழியையும், இணை அனுசரணையுடனான இணக்கப்பாட்டையும் கோட்டாபய அரசு புறக்கணித்து, அந்தப் பொறுப்பில் இருந்து வேளியேறியுள்ளது. சர்வதேச விசாரணைப் பொறிமுறை நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ச உள்ளூர் நீதிப்பொறிமுறையின் கீழ் பொறுப்புக் கூறுகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அந்த வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்பட முடியும் என்று முன்னுக்குப் பின் முரணான வகையில் பட்டவர்த்தனமாகக் கூறியுள்ளார்.

ஆனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மைத் தேசிய இன மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடமும், சர்வதேசத்திடமும் தெரிவித்துள்ள கோட்டாபய  ராஜபக்சவின் ஆட்சியிலேயே தமிழ் மக்களுடைய பாரம்பரிய நிலங்கள் பௌத்த விகாரைகளுக்கும், இராணுவ முகாம்களுக்கும், இராணுவத்தின் நலன்களுக்காகவும் அபகரிக்கப்படுகின்றன.

தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், பௌத்த கலாசார அமைச்சின் கீழான திணைக்களம் என்பன தமிழ் மக்களின் பாரம்பரிய வணக்கத்தலங்கள், காணிகள், வாழ்விடங்கள், வயல் நிலங்கள் என்பவற்றை அபகரிப்பதில் பகிரங்கமாக ஈடுபட்டிருக்கின்றன. இவற்றுக்கு உதவியாக இராணுவத்தினரும், காவல் துறையினரும் செயற்பட்டு வருகின்றார்கள்.

ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களின்போது, இத்தகைய ஒரு நிலைமை வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இருப்பதைத் தாங்கள் அறியவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் கூட்டமைப்புத் தலைவர்களிடம் தெரிவித்திருக்கின்றனர். முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற வகையில் அவர்களுடைய இந்தக் கூற்று அமைந்திருக்கின்றது.

தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள எரியும் பிரச்சினைகள் குறித்து இந்தப் பேச்சுக்களின் போது எடுத்துரைத்த தமிழ்த்தேசியக் கூட்டமைப் பினரிடம் அவற்றுக்குத் தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியை அரச தலைவர்கள் வழங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், இந்தப் பேச்சு வார்த்தைகளில் அரசாங்கத்தை நம்ப முடியுமா என்ற தமிழ்த்தரப்பின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் பேச்சுவார்த்தைக் களத்திற்கு வெளியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

கேள்விக்குறிக்கு ஆளாகியுள்ள அரச நிலைமை

சிறுபான்மை இன மக்கள் மீதான வெறுப்புணர்வு கொண்ட ராஜபக்சக்களின் அரசியல் அணுகுமுறைச் செயற்பாடுகளுக்கு மாறானதாகவே இது புலப்படுகின்றது. தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி கோட்டாபயவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டிருக்கின்றார்கள் என்று அதிசயிக்கத் தக்க வகையில் இது அமைந்துள்ளது.

உண்மையில் ராஜபக்சக்கள் மிகமோசமான அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றார்கள். நாடு ஒருபோதும் இல்லாத வகையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. உரிய உணவுப் பாதுகாப்பு அற்ற நிலையில் வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியுமா என்று நாட்டு மக்கள் சிந்தித்து, அதற்கான வழிதெரியாமல் மயங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற்று, சிங்கள பௌத்த மக்களின் வெற்றி வீரர்களாகத் திகழ்ந்த ராஜபக்சக்களை 2015 ஆம் ஆண்டு தேர்தல்களில் மக்கள் படுதோல்வியடையச் செய்திருந்தார்கள். ஆனால் 2019 ஆம் ஆண்டு தேர்தல்களில் சிங்கள பௌத்த மக்கள் வரலாறு காணாத வகையில் ஆதரித்து வெற்றிபெறச் செய்திருந்தார்கள்.

ஆனால் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ராஜபக்சக்கள் தமக்கான அரசியல் அதிகாரங்களை மேலும் வலுவுள்ளதாகப் பலப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தினார்களேயொழிய நாட்டில் நல்லாட்சி புரிவதற்கு முயற்சிக்கவில்லை. அது மட்டுமல்லாமல், தங்களை அமோகமாக ஆதரித்த சிங்கள பௌத்த மக்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து பேணுவதற்கும் அவர்கள் தவறிவிட்டார்கள்.

உணவுப் பொருட்களுக்காகவும், அத்தியாவசிய பொருட்களுக்காகவும் தினந் தோறும் நீண்ட வரிசைகளில் கால் கடுக்க நிற்கவும் கொளுத்தும் வெய்யிலில் வயதானவர்கள் வரிசைகளில் நின்றவாறே மயங்கிச் சரிந்து மரணத்தைத் தழுவுகின்ற நிலைமையும் இதனால் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலைமைகளினால் சிங்கள பௌத்த மக்கள் அரசு மீது நம்பிக்கை இழந்து வெறுப்பும் சீற்றமும் கொண்டிருக்கின்றார்கள்.

நாட்டு மக்களின் நம்பிக்கை இழப்பும் சீற்றமும் ராஜபக்சக்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. எந்த வேளையிலும் ஆட்சி கவிழ்ந்து அவர்கள் தமது ஆட்சி அதிகாரத்தை இழக்க நேரிடலாம் என்ற ஆபத்தான அரசியல் நிலைமையே முகிழ்த்திருக்கின்றது.

தெளிவற்ற நிலைமையே காணப்படுகின்றது

இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டிய கட்டாய நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். குறிப்பாக அந்நியச் செலவாணி நெருக்கடியைத் தளர்த்தி நாட்டு மக்களுக்கு அவசியமான உணவு மற்றும் எரிபொருட்களை வழங்கவும், அவர்களின் இயல்பான வாழ்க்கைக்குரிய பொதுச் சேவைகளை சீரமைக்க வேண்டிய அவசியமான அவசர நிலைமைக்கு அவர்கள் ஆளாகியிருக்கின்றார்கள்.

விசேடமான நாட்டின் டொலர் கையிருப்பில் ஏற்பட்டுள்ள மோசமான நெருக்கடியில், புலம்பெயர் தமிழர்களுடைய முதலீடுகளைப் பெற்று அதன் ஊடாகப் பெறுகின்ற டொலர்களைக் கொண்டு நிலைமையை சமாளிப்பதற்கான முயற்சியாகவே இந்தப் பேச்சுவார்த்தைகள் அமைந்திருக்கின்றன. அந்தப் பேச்சுவார்த்தைகள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்லப்படும் என்ற ஆரோக்கியமான நிலைமையையே முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் கோடி காட்டியிருக்கின்றன.

ஆனாலும் சிங்கள பௌத்த தேசியவாத அரசியல் போக்கில் ஊறித் திளைத்து, பன்மைனத் தன்மையிலான அரசியல் மனப்பக்குவம் அற்ற நிலையில் உள்ள ராஜபக்சக்கள், எந்த வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார்கள் என்பது சிக்கல் மிகுந்த கேள்விக்கு உரிய விடயமாகும்.

அதேவேளை, புலம் பெயர்ந்துள்ள தமிழர்களை விடுதலைப்புலிகளாகவும், அவர்களின் முகவர்களாகவும் அரசியல் ரீதியாகக் கருதி, அவர்கள் மீது தடை விதித்துள்ள ராஜபக்சக்கள் எந்த வகையில் அவர்களின் முதலீடுகளைப் பெறப் போகின்றனர் என்பதும் சிக்கல் மிகுந்த விடயமாகவே உள்ளது.

எனவே, அரசுக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடாகத் தமிழ்த் தரப்புக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள (தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள அனதை்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில்) அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் ஆரம்பித்திருப்பதுவும், அது தொடர்ந்து இடம்பெறும் என்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியிருப்பதும் மகிழ்ச்சிக்கு உரியதாக இருந்த போதிலும், அந்தப் பேச்சுக்கள் என்னென்ன வழிமுறைகளில் இணக்கப்பாட்டை எட்டி முன்னேற்ற மடையும் என்பது தெளிவற்றதாகவே காணப்படுகின்றது.

Exit mobile version