ஒடுக்குமுறைக்கு எதிரான பிரகடனத்தில் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் கையொப்பம்

அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்புகள் ஒன்றிணைந்து ஒடுக்குமுறைக்கு எதிரான ஒன்றிணைந்த பிரகடனத்தில் கொழும்பில் இன்று கையொப்பமிட்டனர்.

பயங்கரவாத சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறைக்கான சட்டங்களை இரத்து செய்தல், இந்த சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட 06 விடயங்கள் இந்த பிரகடனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டங்களின் போது முன்னெடுக்கப்படும் கைது நடவடிக்கைகளுக்கும் இந்த பிரகடனத்தின் ஊடாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களை முறையற்ற வகையில் கைது செய்த காவ்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும், புனர்வாழ்வு அதிகார சபைக்கான சட்டமூலத்தை மாற்றியமைக்க வேண்டும் எனவும் இந்த ஒன்றிணைந்த பிரகடனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு இணையாக இந்த ஒன்றிணைந்த பிரகடனத்தில் கையெழுத்துகள் சேகரிக்கப்படுகின்றன.