பரீட்சைக் கடமைகளிலும் அரசியல் தலையீடு – இம்ரான் காட்டம்

கடமைகளிலும் அரசியல் தலையீடு

சுயாதீனமாக செயற்பட வேண்டிய பரீட்சை கடமைகளிலும் அரசியல் தலையீடு இடம் பெறுவது இந்த அரசின் கேவலமான செயல்களில் ஒன்றாகும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Maharoof) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“திருகோணமலை மாவட்டத்தில் 5ஆம் தர மற்றும் உயர்தரப் பரீட்சைக்கடமைக்காக நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நியமனங்களில் வழமைக்கு மாறாக இனரீதியான புறக்கணிப்புகள் இடம்பெற்றுள்ளதாக அதிபர், ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த பரீட்சைக் கடமை நியமனங்களில் வழமையாகப் பின்பற்றப்பட்டு வந்த இனச்சமநிலை பின்பற்றப்பட வில்லை. முஸ்லிம் அதிபர், ஆசிரியர்கள் இம்முறை பரீட்சைக் கடமைகளில் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

பரீட்சைக் கடமை வழங்கப்பட்ட கிண்ணியா, மூதூர், தோப்பூர் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் புல்மோட்டை, கோமரங்கடவெல போன்ற தூரப் பிரதேசங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை, குச்சவெளி போன்ற பிரதேசத்தவர்களே வழமையாக இப்பகுதி பரீட்சைக் கடமைக்கு நியமிக்கப்பட்டனர்.

இம்முறை சிரமப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நிலை திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வழமையாக வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் வழங்கப்படும் பெயர் பட்டியல்களிலிருந்தே பரீட்சைக் கடமை நியமனங்கள் செய்யப்பட்டன.

இவ்வாறு செய்தவதனூடாக சிரேஸ்டத்துவம், தகைமை என்பன கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கும். இம்முறை இந்த நிலை பின்பற்றப்படவில்லை. வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பெயர் பட்டியலுக்கு வெளியே நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

அரசியல் ரீதியாக வழங்கப்பட்ட பெயர்ப் பட்டியலிலிருந்தே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

Tamil News