மக்களின் போராட்டங்களை ஒடுக்க  கூர்முனைகள் உள்ள தடுப்புவேலிகளை அமைத்த காவல்துறையினர்

WhatsApp Image 2022 04 24 at 10.08.31 PM மக்களின் போராட்டங்களை ஒடுக்க  கூர்முனைகள் உள்ள தடுப்புவேலிகளை அமைத்த காவல்துறையினர்

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு காரணமான கோட்டாபய அரசை பதவி விலக வலியுறுத்தி அனைத்து பல்கலைக் கழக மாணவர்களால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட இருந்த நிலையில் கொழும்பு நகரத்தின் பல வீதிகள் இன்று காலை முதல் முடக்கபட்டு போக்குவரத்திற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டிருந்தது. காலி முகத்திடலுக்கு செல்லும் வீதிகளும் இவ்வாறு தடை செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, கொழும்பில் போராட்டங்களை ஒடுக்குவதற்காக காவல்துறையினரால் அமைக்கப்பட்ட தடுப்புவேலிகளில் கூர்முனைகள் அமைக்கப்பட்டு அவை வெளித்தெரியா வண்ணம் துணியால் மூடப்பட்டிருந்தது.

ஆர்பாட்ட பேரணியில் செல்பவர்களுக்கு காயத்தினை ஏற்படுத்தும் விதமாக திட்டமிட்டு இவ்வாறு செய்துள்ளதன் மூலம் இந்த அரசின் கொடூர முகத்தை அடையாளம்காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசனும் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது பாதுகாப்பிற்காக நின்ற படையினரிடம் “நீங்கள் அரசியல் பொலிஸ் இல்லை, மக்கள் பொலிஸ்” என  ஞாபகப்படுத்தியதாகவும் மனோ கணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அத்துடன் வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற கம்பிகளை பொருத்தி கறுப்பு நிற பொலித்தீனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மக்களுக்கு பெரும் காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் நிலவுகின்றமை தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர், காவல்துறையினர் மற்றும் படையினர் எந்தவொரு நிலைமையின் கீழும் எதிர்ப்பில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கும் உள்ள மக்களின் உரிமையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏதேனும் வன்முறை சூழல் ஏற்பட்டால் அது நாட்டிற்கு பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.