பள்ளிமலை,படலைக்கல் பண்டைத் தமிழர் வாழ்விடம்-வ.கிருஸ்ணா

இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்கள் என்ற ஆதாரபூர்வமான உண்மையை திரித்தும்,மறைத்தும்,அழித்தும் வரும் கைங்கரியத்தை பௌத்த சிங்கள தேசியவாதம் பலநூறு வருடங்களுக்கு முன்னே ஆரம்பித்துவிட்டது.மகாவம்சத்தில் ஆரம்பித்தது தற்போதைய தொல்பொருட்களை பாதுகாக்கும் அரசுத்தலைவர் செயலணிவரை இந்த செயற்பாடுகளின் வெளிப்பாடுகள் நாமறிந்தவை.

இலங்கையில் தமிழ் சமூகம் தனது  சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் போதெல்லாம் ”இது சிங்கள பௌத்த நாடு”, ”தமிழர்கள் வந்தேறிகள்” என்ற கூச்சல்கள் சிங்கள பௌத்த கடும் போக்காளர்களால் உரக்க எழுப்பப்படுகின்றன.

ஆனால் இந்த நாட்டில் சிங்கள சிங்களம் என்று ஒரு இனம் தோற்றம் பெறுவதற்கு முன்பே  மொழியால்,மேம்பட்ட வாழ்வியலால் உயர்நிலைபெற்ற தமிழ் சமூகம் இங்கு நிலைபெற்றிருந்ததை உரத்து உயர்த்தி பேசும் தமிழர்கள் மிக்க குறைவு.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும்,எமது பூர்வீக வரலாறு பற்றி நாம் அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டாமையும்,எமது வரலாற்று சுவடுகளை பாதுகாத்து முறையாக ஆவணப்படுத்த தவறியமையும் முக்கியமான காரணங்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அழிக்கப்பட்டவை,அபகரிக்கப்பட்டவை போக இருப்பவற்றையாவது பாதுகாக்கும் விழிப்புணர்வு கூட  இன்னும் எமது சமூகத்திற்கு ஏற்படாமையால் மற்றவர்கள்  அவற்றை உரிமைகொண்டாடி ,தமது அடையாளங்களாக அபகரிக்கும் அபாயநிலை   ஏற்பட்டுள்ளது.

இனியாவது இந்த நிலை மாற்றப்படவேண்டும்.தமிழர்களின் எஞ்சியுள்ள வரலாற்று பொக்கிசங்களையாவது பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கவேண்டும்.

இலங்கை தமிழர்கள் இந்த நாட்டின் , பூர்வீக குடிகள் ,நாட்டின் சொந்தக்காரர்கள்  என்ற வகையிலான பல தடயங்கள் இன்று வடகிழக்கு பகுதிகளில் அறியப் படுகின்றது.வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநாதன், வரலாற்றுத்துறை பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம், வரலாற்றுத்துறை ஆய்வாளர் திருச்செல்வம் போன்றோர் பல ஆய்வுகளை மேற்கொண்டு இதுவரையில் தமிழர்கள் அறியாத தமிழரின் வரலாற்று தடங்களை வெளிக் கொண்டு வந்துள்ளனர்

இந்த வெளிப்படுத்தல்களில் பெருமளவிலானவை கிழக்கு மாகாணத்தில் நிகழ்ந்துள்ள நிலையிலேயே அரசாங்கத்தினால் அவசரம் அவசரமாக கிழக்கு தொல்பொருள் செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் தமிழர்களின் வரலாற்று தொல்லியல் சான்றுக ளுக்கு  ஆபத்து பேராபத்து ஏற்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் நம்புகின்றனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2500 வருடங்களுக்கு முன்பான தமிழர்களின் வரலாற்றினைக்கொண்ட குசனார்மலை பகுதியை இலக்கு வைக்கும் வகையில் சில தினங்களுக்கு முன்னர் சில புத்த பிக்குகளும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வந்துசென்றுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று  மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதிக்கும் பௌத்த பிக்கு ஒருவரும் பெருமளவான படையினரும் சென்று அங்குள்ள காணியொன்றை பார்வையிட்டுள்ளதுடன் அது தமக்கானது என அங்குள்ள மக்களிடம் தெரிவித்துள்ளர்.இது இப்பகுதியில் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளது.IMG 20200704 WA0082 பள்ளிமலை,படலைக்கல் பண்டைத் தமிழர் வாழ்விடம்-வ.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் அதிகளவான வரலாற்று பொக்கிசங்கள் மறைந்துகிடக்கின்றன. பல யுத்ததிற்கு பின்னர் அழிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்மேற்கே உள்ளது வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவு . படுவான்கரை,எழுவான்கரை என இரு பிரிவுகள் மட்டக்களப்பு வாவினைக்கொண்டு பிரிக்கப்படுகின்றன.இங்கு படுவான்கரை பகுதியானது 95வீதமான தமிழர்கள் வாழும் பகுதியாகும்.நீர்நிலைகளும் வயல் பகுதிகளும் காடுகளும் மலைகளும் சூழ்ந்த பகுதியாக படுவான்கரை இயற்கையின் உறைவிடமாக இருக்கின்றது.இதன் காரணமாக பண்டைய மக்கள்  தங்களது வாழ்விடங்களாக இவ்வாறான பகுதிகளை தெரிவுசெய்திருந்தனர்.

வெல்லாவெளி பகுதியை பொறுத்தவரையில் 43 கிராம சேவையாளர் பிரிவுகளைக்கொண்ட பரப்பளவில் பாரிய பிரதேசமாகக் காணப்பட்டபோதும் சனப்பரம்பல் மிக்க குறைவானதாகவே காணப்படுகிறது.வெல்லாவெளி பிரதேசத்தின் எல்லைப்பகுதிகளில் சிங்களவர்களும் வாழ்ந்துவருகின்றனர்.

யுத்ததிற்கு பின்னர் அதிகளவான சிங்களவர்கள் குடியேற்றியுள்ளதுடன் இப்பகுதிகளில் தமிழர் பகுதிகளும் ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே வெல்லாவெளி பகுதியானது தமிழர்களுக்கு மிகவும் முக்கியத்துவமிக்க பகுதியாக காணப்படுகின்றது.குறிப்பாக வடகிழக்கு தமிழர்களின் வரலாற்றின் பொக்கிசமாக இன்று வெல்லாவெளி பகுதி அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.IMG 3011 பள்ளிமலை,படலைக்கல் பண்டைத் தமிழர் வாழ்விடம்-வ.கிருஸ்ணா

வெல்லாவெளி பகுதிகளில் அண்மைக்காலமாக கண்டறியப்படும் தொல்பொருட்கள் மற்றும் அது தொடர்பான ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையில் மற்றும் தமிழ் மொழியின் தோற்றம் 2500 வருடங்களையும் தாண்டியதாக ஆய்வாளர்களினால் கணிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் உள்ள தொல்பொருட்கள் பற்றி உள்ளூர் எழுத்தாளர்கள் அவ்வப்போது எழுதிவந்தபோதும் இந்திய தொல்லியலாளர்கள் மற்றும் இலங்கை வரலாற்று பேராசிரியர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வின் பின்னரே இப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவம் உணரப்பட்டது.

பின்னர்  பேராசிரியர் பத்மநாதன்  அவரும் அவரது குழுவினரும் வெல்லாவெளியின் பல பகுதிகளிலும் ஆய்வு செய்து மறைந்துகிடந்த  தமிழரின் தொன்மை வரலாற்றை ஆவணமாகக் கொண்டுவரும் அறிய முயற்சியை  செய்தனர். (இதுபற்றிய விபரங்களை அவரின்(இலங்கைத் தமிழர் வரலாறு கிழக்கில் நகரும் தமிழும் கிமு 250 – கிபி 300-பேராசிரியர் சி.பத்மநாதன்  என்ற நூலில் காணலாம் )

இது ஒரு முழுமையான ஆய்வு என்று கூறமுடியாவிடினும் கிடைக்கக்கூடிய வளங்களின் அடிப்படையில் இவர்கள் இந்த ஆய்வை  மேற்கொண்டிருந்தனர். வெல்லாவெளி பகுதியில், விவேகானந்தபுரம்,தும்பங்கேணி,களுமுந்தன்வெளி ,தாந்தாமலை போன்ற பகுதிகளில் பண்டைத் தமிழரின் தொன்மை நிறைந்து கிடக்கிறது. ஆனால் அவை ஆதரவற்று  அழிவின் விளிம்பில் நிற்பது மிக வேதனையான விடையம்.

மேற்சொன்ன பகுதிகள் ஓரளவிற்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோதும் இன்னும் பலப்பகுதிகள் வெளிச்சத்துக்கு வராமல் இருப்பிழந்து செல்கின்றன.

வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமமம் கண்ணபுரம் பகுதியில் உள்ள பள்ளிமலை என்னும் மலையில் பல பண்டைத் தமிழர் வரலாற்று  தடங்கள் காணப்படுகின்றன

குறித்த பள்ளிமலையில் மூன்று இடங்களில் மலைகளில் ஏறுவதற்கான படிகள் அமைக்கப்பட்டு அதில் நாகர்கள் வாழ்ந்துள்ளதற்கான தடயங்கள் காணப்படுகின்றன.குறிப்பாக அங்கு பழமையான ஆதிக்குடிகளான தமிழர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் காணப்படுவதாக தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் சி.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.padalaikkaf பள்ளிமலை,படலைக்கல் பண்டைத் தமிழர் வாழ்விடம்-வ.கிருஸ்ணா

இங்கு தமிழும் பிராகிருதமும் கலந்த கல்வெட்டுகள் இங்கு காணப்படுவதாக பேராசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிடுகிறார்.இங்கு தமிழ் பௌத்தர்கள்,மற்றும் தமிழ்  சமணர்கள் வாழ்ந்துள்ளனர்.இன்று பௌத்த அடையாளங்கள் யாவற்றையும் சிங்கள பௌத்தமாக காட்டும் நடவடிக்கை இலங்கையில் மிகத் தீவிரமடைந்து வருகிறது.யாழ்ப்பாணம் கந்தரோடை இதற்கு எடுத்துக்காட்டாகும்.

இலங்கையில் சிங்களம் என்றொரு இனம்,மொழி தோன்றுவதற்கு முன்பே தமிழர்கள் பௌத்த மதத்தை பின்பற்றினர் என்பது வரலாறு.வன்னியில் கண்டெடுக்கப்பட்டு இன்று வவுனியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் தொல்பொருட்கள் தமிழ் பௌத்தம் சார்ந்தவையே.

பள்ளிமலையில் நாகர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டிடங்கள் அழிந்த நிலையில் காணப்படுகின்றன. குறித்த மலையினை சூழ வயல்நிலங்களும் காடுகளும் காணப்படுகின்றன.இப்பகுதிகளில் சில இடங்களில் புதையல் தோண்டியதற்கான அடையாளங்களும் காணப்படுகின்றன.

இப்பகுதியில் தொடர்ச்சியாக புதையல் வேட்டைகளும் நடைபெறுவதாகவும் சிலர் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மலையின் சுமார் 50 m உயரத்தில் நீர் ஊற்று சுனையொன்றும் காணப்படுகின்றது.இது இங்கு வாழ்ந்தவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நீர்சுனையானது இப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவும் காலப்பகுதியிலும்  மலையின் மேல் உள்ள இந்த நீர்சுனையில் நீர் வற்றுவதில்லையெனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இங்குள்ள மலைகளில் சில கடந்த காலத்தில் வீதி புனரமைப்புக்காக உடைக்கப்பட்டுள்ள நிலையிலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக அந்த நடவடிக்கைகள் தடுக்கப்பட்டதாக வெல்லாவெளி பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்தார்.padalaikkal3 பள்ளிமலை,படலைக்கல் பண்டைத் தமிழர் வாழ்விடம்-வ.கிருஸ்ணா

இதேபோன்று இந்த மலைக்கு சுமார் 200 மீற்றர் தூரத்தில் படலக்கல்லடி நாராயணன் ஆலயம் உள்ளது.. தற்போது இந்த ஆலயத்தில் நாராயண வழிபாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இந்த வழிபாடு சுமார் 100 வருடத்திற்குள்ளேயே முன்னெடுக்கப்பட்டதாகவும் அதற்கு முன்னர் இங்கு கிராமிய வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவந்ததாகவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கினறனர்.

குறித்த ஆலயத்தின் மூலமூர்த்தியாக இந்த பகுதியில் ஆதியாக வழிபட்ட கருங்கல் இங்கு காணப்படுகிறது .இந்த ஆலயம் இன்று பெரிய ஆலயமாக கும்பாபிசேகம் கண்டுள்ள நிலையில், இந்த ஆலயத்தில் நாகர் வழிபட்டுவந்த நாக  பாம்பு பொறிக்கப்பட்ட கல் ஆலயத்தின் பின்புறமாகவுள்ள மரத்திற்கு கீழ் கவனிப்பாரற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளது.மணினாகன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட இந்த கல்லில் ஐந்து தலை நாகமும் இரண்டு வேலும் காட்டப்பட்டுள்ளது.IMG 3169 பள்ளிமலை,படலைக்கல் பண்டைத் தமிழர் வாழ்விடம்-வ.கிருஸ்ணா

இதுபோன்ற  தமிழரின் பூர்வீக வாழ்விடம் பற்றிய ஆய்வுகளை விரைந்து மேற்கொண்டு அவற்றை வெளியுலகுக்கு கொண்டுவரவேண்டியது துறைசார் உணர்வாளர்களின் கடப்பாடாகும்.

அத்துடன் எமது வரலாற்று சின்னங்கள் தொடர்பில் அந்தந்த பிரதேச மக்கள் விழிப்புணர்வுகொண்டு அவற்றை பாதுகாக்க முன்வரவேண்டும். பிரதேச,அரசியல்,மத வேறுபாடின்றி தமிழர்கள் என்ற உணர்வோடு செயற்பட்டு அனைவரும் இதில் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும்.