பெருந்தோட்டக் காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

பெருந்தோட்டக் காணிச் சுவீகரிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களை நிலவுடைமைச் சமூகமாக மாற்றும் எண்ணம், மலையக அரசியல்வாதிகளுக்கோ அல்லது ஆட்சியில் இதுவரை காலமும் இருந்த அரசாங்கங்களுக்கோ இருக்கவில்லை. இதனால் இம்மக்களின் பல்துறைசார் எழுச்சியும் தடைப்பட்டுள்ளது. எனவே பெருந்தோட்டக் காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று பேராசிரியர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஷ் தெரிவித்தார்.

இது குறித்து இலக்கு ஊடகத்திற்கு மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“பெருந்தோட்டத் தொழிற்றுறையின் நெருக்கீடுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. கம்பனியின் அராஜகத்தின் கீழ் தொழிலாளர்கள் கசக்கிக் பிழியப்படுவதோடு உழைப்பிற்கேற்ற ஊதியமும் வழங்கப்படுவதில்லை.

இம்மக்களின் நலனோம்பு நடவடிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. தேயிலை விளைநிலங்களைப் பல்வேறு காரணங்களை மையப்படுத்தி  சுவீகரிக்கின்ற ஒருபோக்கு காணப்படுகின்றது.

இலங்கையில் 1972 இல் கொண்டு வரப்பட்ட நிலச்சீர்திருத்தச் சட்டம், இந்திய வம்சாவளி மக்களுக்கு பாதகமாக அமைந்தது. இச்சட்டத்தின் அடிப்படையில் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தோட்டங்களில் இருந்தும் விரட்டப்பட்டனர். இவ்வாறு விரட்டப்பட்டவர்களில் பலர் நகர்ப்புறங்களில் பிச்சைக்காரர்களாக சுற்றித் திரிந்ததாகவும் தகவல்கள் உள்ளன.

கிராமங்களை அண்டிய தோட்டப் புறங்களில் உள்ள  பெருந்தோட்டக் காணிகளைச் சுவீகரிக்கும் வழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறு சுவீகரிக்கப்படும் காணிகளில் ஒரு அங்குலமேனும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மாறாக இக்காணிகள் பெரும்பான்மை சிங்கள சமூகத்தினருக்கே பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இதனால் வெளியாரின் ஆதிக்கத்திற்குப் பெருந்தோட்டங்கள் படிப்படியாக உள்ளாகி வருகின்றன. காணிப் பகிர்வின் காரணமாகத் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைவடையும் நிலையில், பொருளாதார நெருக்கீடுகள் அதிகரிக்கின்றன.

இதனால் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. அத்தோடு தோட்டங்களில் வெளியாரின் உள்நுழைவால்  கலாசார சீர்கேடுகளுக்கும் தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்றனர்.

மலையக மக்களின்  இருப்பு மற்றும் அடையாளம் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றால், தோட்டப் புறங்களில் காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

அபிவிருத்தி என்னும் போர்வையில் தோட்டப்புறக் காணிகள் பறிபோவதை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. தோட்டப்புறக் காணிச் சுவீகரிப்பின் விபரீதங்களை உணர்ந்து அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பெரும்பொறுப்பு மலையக அரசியல்வாதிகளுக்குரியதாகும்.

இந்நிலையில் காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். இல்லையேல் மலையக சமூகம் எதிர்காலத்தில் தடமிழப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றார்.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad பெருந்தோட்டக் காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்