தமிழ் தேச மக்களின் இருப்பையும் தேசியத்தின் அடையாளங்களையும் அழிக்க திட்டமிடுகின்றனர்-அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழ் தேச மக்களின் இருப்பை

தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக நின்ற சக்திகள் தமது தேவைக்காக புதிய கையாட்களை உருவாக்கி அவர்கள் மூலமாக தமிழ் தேச மக்களின் இருப்பையும் தேசியத்தின் அடையாளங்களையும் முழுமையாக அழிக்க திட்டமிடுகின்றனர் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மையில் தமிழ் பேசும் மக்கள் கட்சிகள் என்று தம்மை அடையாளப்படுத்தி கொண்டோர் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தின் முழுமையாக அமுலாக்கம் தொடர்பில் கலந்துரையாடலை நடாத்தியதோடு ஊடக சந்திப்பையும் நடத்தியிருந்தனர். தமிழ் மக்களால் முப்பது வருடங்களுக்கு முன்னர் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றை முழுமையாக அமுல்படுத்துமாறு தமிழ்த் தேசத்தினின்று கூறியிருப்பது தமிழர் தேசத்தையும், தமிழர்களின் அரசியல் இலட்சிய போராட்டத்தையும் அவமானப்படுத்தும் செயலாகும்.

அது மட்டுமல்ல அரசியல் கைதிகளாக இருப்போர் அவர்களின் அரசியல் போராட்டத்தில் 13ஆம் திருத்தம் இருந்ததில்லை. இந்நிலையில் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் நின்று அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதோடு மேலும் பல கோரிக்கைகளை முன் வைத்திருப்பது தமது பம்மாத்து அரசியலை மறைக்கும் செயற்பாடாகவே அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய இயக்கம் கருதுகின்றது.

13ஆம் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தினை ஒப்பந்த காலத்திலேயே தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணமாகவே இனப்படுகொலையுடனான இன அழிப்பிற்கும் முகம் கொடுத்தனர். அதனின்று எழுந்தவர்கள் அரசியல் இலட்சியத்தை சர்வதேச மயப்படுத்தி அரசியல் நீதிக்கான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட மக்களாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஐந்து வருடங்களை கடந்தும் தொடர் போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர். அரசியல் கைதிகள் விடுதலையின்றி நீண்டகாலமாக சிறைகளில் வாடுகின்றனர். நில மீட்புக்கான போராட்டமும் தொடர்கின்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின், அரசியல் நீதிக்காகப் போராடும் சக்திகளின் கருத்தறியாது அவர்களை அலட்சியப்படுத்திவிட்டு 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனக் கூறுவது போராட்டத்தையும் அரசியல் நீதிக்கான செயற்பாட்டையும் சிதைப்பதாகவே அமையும்.

தம் மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் தமது இருப்பு அரசியலுக்காக பயன்படுத்தும் சக்திகள் பூகோள அரசியல் சக்திகளின் மறைவில் நின்று தனது சுகபோக அரசியலுக்காக தமிழர்களின் அரசியல் போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களாக வடிவம் எடுத்துள்ளது போல் தெரிகிறது.

13ஆம் அரசியல் யாப்பு சீர்திருத்தம் உண்மையில் யாருக்காக கொண்டுவரப்பட்டது எனும் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களால் மட்டுமே அதனை முழுமையாக அமுல்படுத்துமாறு கூறமுடியும். முள்ளிவாய்க்கால் அவலத்தினையும் நடாத்தி கடந்த 12 வருட காலமாக தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக நின்ற சக்திகள் தமது தேவைக்காக புதிய கையாட்களை உருவாக்கி அவர்கள் மூலமாக தமிழ் தேச மக்களின் இருப்பையும் தேசியத்தின் அடையாளங்களையும் முழுமையாக அழிக்க திட்டமிடுகின்றனர். அச் சக்திகளின் இன்னும் ஒரு தோற்றமே இது.

ஒரே நாடு ஒரே சட்டம் உருவாக்க இனவாத காவியின் தலைமையில் செயலணி உருவாக்கப்பட்டிருக்கின்ற காலச் சூழ்நிலையில் 13 முழுமையாக அமுல்படுத்துமாறு கூட்டணி அமைக்கும் செயற்பாடுகளுக்கு பின்னால் அழிவின் சக்திகள் நிற்கின்றன. இவர்களின் செயல்பாடு முள்ளிவாய்க்கால் அழிவிலும் பார்க்க பயங்கரமானது. இக்காலத்தில் தமிழர் தாயக மக்கள் விழிப்புடன் தமது அரசியல் பாதுகாப்பு சக்திகள் யார்? என அடையாளம் கண்டு அவர்களை பலப்படுத்துவதோடு தமக்கான புலம்பெயர் சக்திகளோடும், அயலக உறவு சக்திகளோடும் கூட்டு செயற்பாடுகளை அவசரமாக முன்னெடுக்க வேண்டும் என்றார்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad தமிழ் தேச மக்களின் இருப்பையும் தேசியத்தின் அடையாளங்களையும் அழிக்க திட்டமிடுகின்றனர்-அருட்தந்தை மா.சத்திவேல்