கோட்டாபயவிற்கு எதிராக விசாரணை கோரும் மனு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல்

கோட்டாபயவிற்கு எதிராக விசாரணை


இலங்கை ஜனாதிபதி  பாதுகாப்பு செயலாளர் உட்பட பல சிரேஸ்ட அதிகாரிகளை மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல்களிற்காக விசாரணை செய்ய வேண்டும் என மனு ஒன்றை
Global Rights Compliance என்ற சர்வதேச அமைப்பு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ளது. 

பிரிட்டனில் வாழும் 200 இலங்கை தமிழர்களின் சார்பில் கோட்டாபயவிற்கு எதிராக விசாரணை கோரும் இந்த மனுவை Global Rights Compliance தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றத்தின் நியாயாதிக்க வரம்பிற்குள் உள்ள குற்றங்கள் பற்றிய தகவலின் அடிப்படையில் வழக்குரைஞர் விசாரணையை தொடங்குவதற்கு அனுமதிக்கும் ரோம் சட்டத்தின் 15வது பிரிவின் கீழ் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண முன்னாள் இராணுவதளபதி ஜகத்ஜயசூரிய ஆகியோர் உட்பட பல தனிநபர்களின் பெயர்கள் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் கடத்தல் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் சித்திரவதை போன்ற நடவடிக்கைகளின் மூலம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்கு பொறுப்பாளிகளாகயிருந்தார்கள் என சர்வதேச அமைப்பு தனது  மனுவில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொண்ட துன்புறுத்தலின் கடுமை காரணமாக அவர்களிற்கு இலங்கையிலிருந்து தப்பி பிரிட்டனில் தஞ்சமடைவதை தவிரவேறு வழியிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரின் தலைமையிலான பாதுகாப்பு படையினரின் அச்சுறுத்தல் மிரட்டல் துன்புறுத்தல் கொள்கைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்புவதற்கான உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் இந்த  மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர்கள் துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் துன்பத்தில் சிக்குண்டுள்ளனர் என தெரிவித்துள்ள Global Rights Compliance,  பிரிட்டனிலும் அவர்கள் துன்புறுத்தல் கண்காணிப்பு போன்றவற்றை எதிர்கொள்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad கோட்டாபயவிற்கு எதிராக விசாரணை கோரும் மனு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல்