Tamil News
Home செய்திகள் ஒருவேளை உணவுக்கே திண்டாடும் இலங்கையர்கள்

ஒருவேளை உணவுக்கே திண்டாடும் இலங்கையர்கள்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்துள்ள நிலையில் சகல துறைகளிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கின்றது.இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களின் துன்பம் இரட்டிப்பாகியுள்ளது.

வறிய மக்கள் ஒரு வேளை உணவுக்கே திண்டாடும் நிலையில் போஷாக்கின்மை காரணமாக நோய் நொடிகள் அதிகரிக்கும் அபாயமும் மேலெழுந்துள்ளது.

இலங்கை இப்போது இக்கட்டான நிலையில் உள்ளது. பொருளாதார நெருக்கடி இலங்கையின் குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கின்றது.”கடல் சூழ்ந்ததீவு”  என்று பெயர் பெற்றிருந்த இலங்கை இப்போது “கடன் சூழ்ந்த தீவு” என்று பெயர் பெற்றிருக்கின்றது. சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு பல பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ள நிலையில் இதற்கான வட்டியை செலுத்துவதற்குக் கூட வக்கில்லாது இலங்கையின் நிலைமைகள் போய்க் கொண்டிருக்கின்றன.கடன்களை திருப்பிச் செலுத்தாத நாடுகளின் பட்டியலில் இலங்கை இப்போது முக்கிய இடம் பிடித்திருக்கின்றது.பொருளாதார நெருக்கடியால் வாழ்க்கை செலவு பெரிதும் அதிகரித்துள்ளது.சேவைக் கட்டணங்களும் அதிகரித்துள்ளன.நாட்டில் பொதுவான பணவீக்கம் 70 வீதமாகவும் உணவுப் பண்டங்கள் வீக்கம் 80 வீதமாகவுமுள்ளது.

இலங்கையின் மொத்த சனத்தொகை 220 இலட்சமாகும்.இதில் 96 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக பிந்திய தகவல்கள் வலியுறுத்துகின்றன.2019 ம் ஆண்டு நாட்டின் வறுமை நிலை 3.2 ஆகவிருந்தது.எனினும் புதிய சுட்டெண்னின் பிரகாரம் 2022 ஆகஸ்ட் மாதம் இலங்கையின் வறுமை நிலையானது 14.3 வீதமாக அதிகரித்துள்ளது.கடந்த 2019 ம் ஆண்டு நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பம் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக மாதமொன்றிற்கு 27864 ரூபாவை செலவிட வேண்டியிருந்தது.ஆனால் சமகாலத்தில் அதே நான்கு பேரைக் கொண்ட குடும்பம் 53840 ரூபாவை செலவிட வேண்டியுள்ளது.கொழும்பில் இந்த நிலை மேலும்  மாற்றமடைந்துள்ளது. இதற்கேற்ப இங்கு ஒரு குடும்பம் சுமார் 60,000 ரூபாவரை மாதாந்தம் செலவிட வேண்டியுள்ளமை நோக்கத்தக்கதாகும்.

அரசாங்கத்தின் வரித்தொகை இப்போது அதிகரித்துள்ளது.சர்வதேச நாணய நிதியம் வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாகவும் கருத்து வெளிப்பாடுகள் இருந்து வருகின்றன.அவ்வாறாக வரி வருமானத்தை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விடுத்திருந்தால் அதனை நிறைவேற்ற சாதகமான பல வழிகள் உள்ளன. அந்த வழிகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.ஒழித்து மறைத்து இதனைச் செய்ய முடியாது.வெளிப்படைத் தன்மையோடு இதனை  ஆராய்ந்து பகுப்பாய்வு சேய்து வரி வருமானத்தை அதிகரிக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை தலைவராகக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களின் துன்பம் இரட்டிப்பாகியுள்ளது.ஒரு வேளை உணவுக்கே மக்கள் போராடுகின்றனர்.தனது பிள்ளைகளுக்கு உணவு வழங்க வழி இல்லாததால் பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியால் வாடுவதைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று அண்மையில் இலங்கையில் இடம்பெற்றுள்ளது.நச்சுத் தன்மையுடைய விதைகளை உட்கொண்டு இந்தத்தாய் தற்கொலைக்கு முயற்சித்துள்ளமை மனதை உருக்கும் செயலாக அமைந்துள்ளது.இதைப் போன்றே இன்னும் பல குடும்பங்கள் உணவுக்காக போராடிக் கொண்டிருக்கின்றன.போதிய நிறையுணவு இல்லாததால் சிறுவர்கள் கர்ப்பிணித் தாய்மார் போன்ற பலரும் நோய் நொடிகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதேவேளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொண்ட கடன்களுக்கான வட்டி வீதத்தை வங்கிகள் அதிகரித்துள்ளன.இதனால் அவர்கள் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது திண்டாடுகின்றனர். அதிகரித்த ஊதியத்தை பெறுவோருக்கான வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதனால் மக்களின் அதிருப்தி அதிகரித்துள்ளது.வைத்தியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல உத்தியோகத்தர்கள் இதனைக் கண்டித்து வீதியில் இறங்கி போராட்டம் நடாத்துகின்றனர்.

வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.இதனால் நோயாளர்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இத்தனைக்கும் மத்தியில் மின்சாரக் கட்டணங்களை 66 வீதத்தால் அரசாங்கம் உயர்த்தியுள்ளது.நிலையான கட்டணங்களும்  அதிகரிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

மேலும் பெற்றோலின் விலையும் கடந்த வாரத்தில் அரசாங்கத்தினால் அதிகரிப்பிற்கு உள்ளாகியது.இத்தகைய பல நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கொதிப்படைந்துள்ளதால் எதிர்காலத்தில் மக்கள் போராட்டங்கள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பே அதிகமாகக் காணப்படுகின்றது.சர்வதேச நாணய நிதியம்  கடன் தொகையை வழங்குவதற்காக  இலங்கை அரசாங்கத்தை ஆட்டி வைப்பதாகவும், நிதியத்தின் தாளத்துக்கேற்ப இலங்கை  அரசாங்கம் ஆடுவதாகவும் கண்டனக் குரல்கள் மேலோங்கி வருகின்றன.இதனால் மக்கள் நசுக்கப்படுகின்றனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் மலையக மக்கள் மிகுந்த பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். ஏற்கனவே உழைப்பிற்கேற்ற ஊதியமில்லாது அல்லல்படும் இவர்களின் பொருளாதார நெருக்கடி இப்போது அதிகமாகியுள்ளது.இதனால் கல்வி, சுகாதாரம், சமூக நிலைமைகள் என்பன கேள்விக்குறியாகியுள்ளன.

இதனிடையே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் 9 ம் திகதி இடம்பெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்திருந்த நிலையில் தேர்தலை நடாத்துவதற்கான பொருளாதாரப் பற்றாக்குறை நிலவுவதாக அரச தரப்பு செய்திகள் வலியுறுத்துகின்றன.

இந்நிலையில் அரசாங்கம் தேர்தல் தோல்வியை தவிர்ப்பதற்கே தேர்தலை நடாத்த   அஞ்சுவதாக  எதிர்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.இவ்வாறாக இலங்கையின் நிலைமைகள் போய்க் கொண்டிருக்கும் நிலையில் 2030 இலேயே இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஓரளவு சீரடையும் வாய்ப்புள்ளதாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

Exit mobile version