Home ஆய்வுகள் வருமானங்கள் இல்லாமல் போவதால், மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றார்கள் – அகிலன் கதிர்காமர்

வருமானங்கள் இல்லாமல் போவதால், மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றார்கள் – அகிலன் கதிர்காமர்

வருமானங்கள் இன்றி மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள்

வருமானங்கள் இன்றி மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள்: கொரோனாவும் அதன் பொருளியல் சமூக தாக்கங்களும் தொடர்பாக யாழ் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் உயிரோடைத் தமிழின் தாயகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகள்

இலங்கையின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம்

கேள்வி ?
இலங்கையின் பொருளாதாரத்தில் கொரோனா எவ்வாறான பாதிப்பைக் கொடுத்திருக்கின்றது?

பதில் !
இலங்கையின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம்: ஒன்றரை வருடத்திற்கு முன்பு கொரோனா அனர்த்தத்துடன், எங்கள் முக்கியமான துறைகள், அதாவது சுற்றுலாத்துறை, மற்றும் சில ஏற்றுமதித்துறைகள் பாதிக்கப்பட்டு, இலங்கையில் அந்நிய செலாவணிக்கான நெருக்கடி உருவாகியிருக்கிறது. ஆனால் உண்மையில் பொருளாதார நெருக்கடி என்பது, இந்த அனர்த்தத்திற்கு முன்பே உருவாகிக் கொண்டிருந்தது என்று கூறலாம். இலங்கையின் வெளிநாட்டுக் கடன் நீண்ட காலமாக அதிகரித்துக் கொண்டு வந்து, கடனை எடுத்து கடனைக் கட்டும் நிலைமை தான் இலங்கை அரசாங்கத்திடம் இருந்தது. அந்த நிலைமை கொரோனா நெருக்கடியுடன் ஒரு பெரும் நீண்டகால பொருளாதார வீழ்ச்சியாக மாறியுள்ளது.

இது உலக ரீதியாக ஒரு நெருக்கடியாக இருந்த பொழுதும், இலங்கையிலிருந்த பொருளாதார நிலைமைகள் காரணமாக இதை ஒரு மிகப்பெரிய நெருக்கடியாக இந்த நாடு அனுபவிக்கின்றது. அதாவது சுதந்திரம் பெற்ற பின்பு சென்ற வருடம் தான் எங்களது மொத்தத் தேசிய உற்பத்தி இந்தளவிற்கு சுருங்கியிருக்கிறது. எங்கள் சுதந்திர கால வரலாற்றிலேயே இதற்கு முதல் ஒரு தடவை தான் இவ்வாறு ஏற்பட்டது. கட்டுநாயக்கா விமான நிலையம் தாக்கப்பட்ட போது எமது மொத்தத் தேசிய உற்பத்தி ஒரு வீதத்தால் சுருங்கியது. சென்ற வருடம் மத்திய வங்கிகளின் தரவுகளின்படி 6 வீதத்தால் சுருங்கியிருக்கிறது என்று கூறுகிறார்கள். அதன் உண்மையான, முழுமையான தாக்கத்தை அடுத்தடுத்த வருடங்களில் தான் நாங்கள் அதற்கான புள்ளி விபரங்கள் ஊடாகப் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

அந்த விதத்தில் இந்த கொரோனா நெருக்கடியுடன் ஒட்டி வந்திருக்கும் இந்த பொருளாதார நெருக்கடி என்பது பெருமளவில் மக்களை பாதிக்கின்றது. அவர்களுடைய வருமானம், நகரங்கள், சேவைத் துறைகள் எல்லாம் முடக்கப்பட்டு, பல மாதங்கள் இந்த ஊரடங்கு காரணமாக நாட்கூலியில் வேலை செய்வோர், சேவைத் துறைகளில் வேலை செய்வோர் போன்றவர்களின் வருமானங்கள் இல்லாமல் போவதால், மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றார்கள்.

அத்துடன் நாட்டில் அந்நிய செலாவணி மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், மத்திய வங்கி, இலங்கைக்குள் வரும் அந்நிய செலாவணி முழுவதையும் நாட்டினுடைய கடன்களைக் கட்டுவதற்காக, குறிப்பாக கடந்த 14 வருட காலமாக இலங்கை அரசாங்கம் சர்வதேச நிதிச் சந்தையில் முறிகளை விற்றுத்தான் இந்தக் கடனைப் பெற்றிருந்தார்கள்.  அவற்றை வருடா வருடம் நிதிச் சந்தையில் கட்ட வேண்டிய தேவையினால், நாட்டிற்குள் வரும் அந்நிய செலவணிகள் முழுவதையும் அதற்காகத் தான் பயன்படுத்துகின்றார்கள். அந்த நிலைமையில் இறக்குமதிப் பொருட்களுக்கான அந்நிய செலவீனம் காணாத காரணத்தினால். இங்கு பலவிதமான இறக்குமதிப் பொருட்களுடைய கட்டுப்பாட்டைக் காணக்கூடியதாக உள்ளது.  சில அத்தியாவசிய பொருட்களுக்குக்கூட கட்டுப்பாட்டைக் காணக்கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக பால்மா, சீனி ஆகியவற்றின் விலைகள் கூட அதிகரித் திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு இந்த பொருளாதார நெருக்கடி என்பது, நாட்டினுடைய நிதிக்கும் மிகப்பெரும் பிரச்சினையாக இருப்பதற்கும் அப்பால், மக்களினுடைய நாளாந்த வாழ்க்கையையும் பாதிக்கின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.

கொரோனா பரவலால் சர்வதேச ரீதியாக உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி

கேள்வி ?
கொரோனா பரவலால் சர்வதேச ரீதியாக உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி இலங்கையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்?

பதில் !
சர்வதேச சந்தைகளில் கூட ஏற்றத்தாழ்வைக் காணக் கூடியதாக இருக்கின்றது. ஸ்திரமான விலைகள் இல்லை. உதாரணமாக இந்த வருடத்தை எடுத்துப் பார்ப்போமானால், சர்வதேச சந்தைகளில் பால்மாவின் விலை 30 வீதத்தால் அதிகரித்திருக்கின்றது. அந்த வகையில் இலங்கையிலிருக்கும் இறக்குமதி நிறுவனங்கள் பால்மாவை இறக்குமதி செய்யத் தயங்குகின்றார்கள். ஏனெனில், இலங்கையிலிருக்கும் கட்டுப்படுத்தப் பட்ட விலைக்கு அவர்கள் இறக்குமதி செய்து விற்க முடியாதென்று, கூறுகின்றார்கள். அதே மாதிரி அண்மைக் காலத்தில் பெற்றோல் விலை அதிகரிப்பும் நாட்டிற்கு ஒரு பெரும் சவாலாக இருக்கின்றது.

அதற்கும் மேலாக உலகப் பொருளாதாரத்தில் ஒரு நெருக்கடி இருக்கும் நேரத்தில் சர்வதேச முதலீடுகள் இலங்கையினுடைய பொருளாதாரத்திற்கு உதவும் எனக் கருதப்படுகின்றது. சர்வதேச நிறுவனங்கள் இலங்கைக்குள் வந்தால், அந்நிய செலாவணி முன்னுக்கு வரும். பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடுகளாக அமையும் என்று பார்த்தாலும், சர்வதேச ரீதியான உலக சந்தையில் இருக்கின்ற கேள்வி குறைந்து வரும் நிலைமையில், அவ்வாறான சர்வதேச முதலீடுகளும் குறைவாக இருக்கின்றது.  அதற்கு மேலாக இலங்கையினுடைய பொருளாதாரம், குறிப்பாக அந்நிய செலாவணி என்று பார்க்கும் பொழுது மத்திய கிழக்கு நாடுகள், தென்னாசிய நாடுகளில் சென்று வேலை செய்வோருடைய வருமானம் முக்கியமாக அமைகின்றது. அதுகூட கடந்த சில மாதங்களில் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது. அந்த நாடுகளில் தொழில் செய்வோருக்கான கேள்வி குறைந்திருக்கின்றது. மேலதிகமாக 2020ஆம் ஆண்டை அதற்கு முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ஒவ்வொரு வருடமும் இரண்டு இலட்சம் மக்கள் வெளிநாடுகளில் வேலை செய்வதற்குச் சென்றிருந்த போதிலும் கடந்த வருடம் ஏறக்குறைய ஐம்பதாயிரம் மக்கள் தான் சென்றார்கள்.  இவ்வாறு சர்வதேச பொருளாதாரத்தில் இருக்கிற பல பிரச்சினைகள் இங்கேயும் பெருமளவில் தாக்கம் செலுத்துகின்றது.

போரால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு: கொரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி

கேள்வி ?
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் கொரோனா எவ்வாறான பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கின்றது?

பதில் !
வடக்கு கிழக்குப் பகுதிகளில் 2009 யுத்தம் முடிந்த பின்பு பல வருடங்களாக வாழ்வாதாரங்களுடைய மேம்பாடு, பொருளாதார ரீதியான அபிவிருத்தி என்பது எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சி பெறவில்லை. வறுமை, போசாக்கின்மையைப் பார்த்தால் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் தான் மிகவும் அதிகமாக இருக்கின்றது. யுத்தத்தின் பாதிப்பிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் மக்களுடைய  சிரமங்களுக்கு மத்தியில்தான் இந்த கொரோனா நெருக்கடியும் வந்திருக்கின்றது. அது சமூகத்தின் ஒரு பகுதிக்கு பெரும் தாக்கத்தை செலுத்துகின்றது. அவர்களுக்கான உணவு, அடிப்படைத் தேவைகளைப் பற்றி நாங்கள் யோசிக்க வேண்டியிருக்கின்றது. இந்த நெருக்கடிகள் மத்தியில் அவர்களுக்கு  ஏதாவதொரு வருமானத்தைப் பெற்றுக் கொண்டால் தான் அடுத்த தலைமுறையினருடைய போசாக்கு, அவர்களுடைய வளர்ச்சி எல்லாவற்றையும் பாதிக்காத அளவிற்கு நாங்கள் சமூக பொருளாதாரத்தை முன்கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும்.

அதேநேரம் வடக்கு கிழக்கு எடுத்துப் பார்க்கும் போது, மக்கள் பெரும்பாலும் விவசாயம், கைத்தொழில், கால்நடை வளர்ப்பு, பனை, தென்னை சார்ந்த பொருளாதாரத்தில் தான் தங்கியிருக்கின்றார்கள். உண்மையில் இங்கு வந்திருக்கும் பெரும் நெருக்கடியுடன் மக்கள் விவசாயம், உள்ளுர் உற்பத்தியை நோக்கித் தான் தங்கள் கவனத்தைச் செலுத்துகின்றார்கள்.  என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு வரவேற்கத்தக்க விடயம். தற்போதுள்ள நிலைமையில் உணவுப் பாதுகாப்பு விடயம் தான் முக்கிய விடயமாகக் கருதவேண்டியுள்ளது.  அதற்கான திட்டங்களை நாங்கள் உருவாக்க வேண்டியுள்ளது. அதாவது உள்ளுர் உற்பத்தி அதிகரிப்பது, ஏற்கனவே மக்கள் ஈடுபடும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அதன் ஊடாக அவர்களுடைய வருமானத்தையும், அவர்களுடைய உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யக்கூடிய திட்டங்களை நாங்கள் முன்கொண்டு போக வேண்டிய தேவையும் இருக்கின்றது.

Exit mobile version