இலங்கை-“ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்”

இலங்கை அரசாங்கத்தின் தவறான விவசாய கொள்கையினால் முழு விவசாயத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைமை ஏற்படும் என, தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான விவசாய கொள்கையினால் தற்போது முழு விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்கு மட்டும் 33 இலட்சம் மெட்ரிக் அரிசி இறக்குமதி செய்யப்படும். டொலர் நெருக்கடி காரணமாக உணவு பொருட்களின் இறக்குமதியும் எதிர்வரும் காலங்களில் மட்டுப்படுத்தப்படலாம்.

எதிர்வரும் காலங்களில் பெரும் உணவு தட்டுப்பாடு ஏற்பட போகிறது. அதனை எதிர்கொள்ள வேண்டும் என அரசாங்கம் வெறும் பேச்சளவில் மட்டும் குறிப்பிட்டுக் கொள்கிறதே தவிர செயல் ரீதியில் முன்னேற்றகரமான வகையில் எவ்வித தீர்மானங்களையும் செயற்படுத்தவில்லை.

உணவு தட்டுப்பாடு தீவிரமடைந்தால் எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத காலப்பகுதியில் மக்கள் உனவின்றி பட்டினியால் உயிரிழக்கும் அவலநிலை ஏற்படும்.

ஆகவே, பொதுமக்கள் வெற்று நிலங்களில் தங்களால் முடிந்தவரை வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது அத்தியாவசியமானது. தமக்கான உணவு பொருட்களை தாமே உற்பத்தி செய்துகொண்டால் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை இயன்ற வரையில் எதிர்கொள்ளலாம்” என்றார்.

  Tamil News